சென்னை: கரூரில் கடந்த ஆண்டு பரப்புரையின் போது ஏற்பட்ட எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் நேற்று முன்தினம் வழங்கினார். அப்போது மேடையில் பேசிய அவர், அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்று தெரிந்தும் போலீசாரே எங்களைக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்தனர். அது ஒரு மிகப்பெரிய நாடகம். அதை நம்பி அன்று போலீசாருக்கு நன்றி கூடச் சொன்னேன் என்று திமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். முதல்வரின் இந்த உரை இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகை காஜல் பசுபதி விஜயைக் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார்.
காஜல் பசுபதி: அங்கு நடந்த துயரச் சம்பவத்திற்கு யார் காரணம் என்பது குறித்து இன்னும் விசாரணை போய்க்கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது, அவர் எப்படி நேரடியாகத் திமுகவை இதற்குக் காரணம் காட்ட முடியும்? அவர்கள் தான் இதைச் செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் ஏதாவது அவரிடம் இருக்கிறதா?
அன்றைக்குக் கரூர் கூட்டத்தில் நீங்களே மேடையில் நின்று போலீசார் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள் என்று மனமாரப் பாராட்டிப் பேசினீர்கள். ஆனால், நேற்றைய கூட்டத்தில் போலீசாரே மக்களைக் கொன்றுவிட்டது போலப் பழியை அவர்கள் மீது போடுகிறீர்கள். இது எந்த விதத்தில் நியாயம்?
ஏன் ஓடி ஒளிந்தார்: உண்மையில் அங்கே நடந்த துயரச் சம்பவத்திற்கு முக்கிய காரணமே விஜய் தான். அவர் அந்த இடத்திற்கு வரவில்லை என்றால் அங்கே அப்படி ஒரு கூட்டமே கூடியிருக்காது, விபத்தும் நடந்திருக்காது. எல்லா அசம்பாவிதங்களுக்கும் மூல காரணமே நீங்க தான். நீங்கள் வரச் சொன்ன நேரத்திற்குச் சரியாக வரவில்லை. நிஜமாகவே அவர் மீது எந்தத் தவறும் இல்லை என்றால், அன்று அந்த விபத்து நடந்தவுடன் அவர் ஏன் அங்கிருந்து ஓடினார்? பாதிக்கப்பட்ட குடும்பங்களால் தனக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என்ற பயத்தில் தான் அவர் அங்கிருந்து ஓடிப் போய் ஒளிந்துகொண்டாரா? என்றார். தொடர்ந்து பேசிய காஜல் பசுபதி, முதலமைச்சர் விஜயின் அரசியல் செயல்பாடுகளை விமர்சித்த காஜல் பசுபதி, நேற்றைய கூட்டத்தில் கூட அவர் மேடையில் பாட்டுப் பாடிப் பேசுகிறார். அவர் செய்வதையெல்லாம் பார்க்கும்போது மிகவும் குழந்தைத்தனமாக இருக்கிறது. யாராவது சட்டசபையில் கை, கால்களை அசைத்து 'ஆக்சன்' காட்டிப் பேசுவார்களா? அப்படிச் செய்யக்கூடிய இடமா அது? என்று கேட்டுத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.More Articles