சென்னை: ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற வெப் சீரிஸ்களில் ஒன்றாக மாறியுள்ளது ஹார்ட் பீட். மருத்துவமனையை மையமாக வைத்து உருவான இந்த தொடர், காதல், குடும்ப உறவுகள், மருத்துவர்களின் வாழ்க்கை, எமோஷனலான காட்சிகள் என ரசிகர்களை ஒவ்வொரு எபிசோடிலும் கட்டிப்போட்டு வைத்தது.

Advertisement

தற்போது ஹார்ட் பீட் சீசன் 3, ஜூலை 30 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ள நிலையில், இந்த தொடரின் ரைட்டரும், இயக்குநருமான தீபக் சுந்தரராஜனை தொடர்புகொண்டு ஃபிலிமிபீட் தமிழுக்காக பிரத்யேகமாக பேசியிருந்தோம்.

Advertisement

சீசன் 3-ல் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்று கேட்டபோது, "இப்போதைக்கு அதை ரிவீல் பண்ண முடியாது. ரசிகர்களுக்காக நிறைய சர்ப்ரைஸ்களை வைத்திருக்கிறோம்" என்று சிரித்தபடியே பதிலளித்தார்.

அதன்பிறகு, ஹார்ட் பீட் தொடரில் பெண்களின் கதாபாத்திரங்கள் மிகவும் இயல்பாகவும், வலிமையாகவும் உருவாக்கப்பட்டிருப்பது எப்படி சாத்தியமானது? பெண்களின் உலகத்தை ஆணாக எப்படி இவ்வளவு அழகாக உருவாக்கினீர்கள் என்று கேட்டபோது, இயக்குநர் தீபக் சுந்தரராஜன் சுவாரஸ்யமான பதிலை பகிர்ந்து கொண்டார்.

காரணமே இவங்கதான்: "அதற்கு முழுக்க முழுக்க காரணம் என்னைச் சுற்றி இருக்கும் பெண்கள்தான். என் அம்மா, என் மனைவி, என் கசின்ஸ், என் தோழிகள்... அவர்கள்தான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். இந்த தொடரில் வரும் கதாபாத்திரங்கள் யாருடைய வாழ்க்கையையும் அப்படியே எடுத்தது கிடையாது. ஆனால் நான் கதை எழுதும்போது, என்னைச் சுற்றி இருக்கும் பெண்களின் குணாதிசயங்கள், அவர்கள் வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதம், அவர்களுடைய மன உறுதி ஆகியவற்றிலிருந்து நிறைய விஷயங்களை எடுத்துக்கொள்வேன். அவர்கள் எல்லோருமே மிகவும் ஸ்ட்ராங்கான பெண்கள்.

Advertisement

அதனால்தான் ரீனா, ரதி மற்றும் மற்ற பெண் கதாபாத்திரங்களை அந்தளவுக்கு வலிமையாக எழுத முடிந்தது. அனபெல் சேதுபதி படத்தில் கூட டாப்ஸி கதாபாத்திரத்தை வலிமையான கதாபாத்திரமாக உருவாக்கியதற்கு காரணமும் என்னைச் சுற்றி உள்ள பெண்கள் தான்," என்று கூறினார்.

பெண் கதாபாத்திரங்கள்: ஹார்ட் பீட் தொடரின் மிகப்பெரிய பலமாகவே அதன் பெண் கதாபாத்திரங்கள் பார்க்கப்படுகின்றன. மருத்துவமனை பின்னணியில் நகரும் கதையாக இருந்தாலும், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனி உணர்வுகளையும் பயணத்தையும் கொடுத்திருப்பது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வெற்றிக்கு பின்னால் தனது வாழ்க்கையில் இருக்கும் பெண்களே முக்கிய காரணம் என்று தீபக் சுந்தரராஜன் வெளிப்படையாக கூறியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது.

Advertisement

சீசன் 3: கடந்த இரண்டு சீசன்களிலும் ரீனா, ரதி, டாக்டர் விஜய், அர்ஜுன் உள்ளிட்ட கதாபாத்திரங்களைச் சுற்றியே கதை நகர்ந்த நிலையில், சீசன் 2 முடிவில் ரீனாவின் நிலைமை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த கிளிஃப் ஹேங்கருக்குப் பிறகு சீசன் 3 எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தில் உள்ளது.

படக்குழு: ஹார்ட் பீட் தொடரை தீபக் சுந்தரராஜன் எழுதியுள்ளார். அவருடன் அப்துல் கபீஸ் மற்றும் சிதம்பரம் மணிவண்ணன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். இந்த தொடருக்கு சரண் ராகவன் இசையமைத்துள்ளார். தீபா பாலு, அனுமோல், கார்த்திக் குமார், சாருகேஷ் எம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜூலை 30 முதல் ஹார்ட் பீட் சீசன் 3 ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.