சென்னை: 72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திரையுலகிலும் சோசியல் மீடியாவிலும் மிகப்பெரிய புயல் வீசத் தொடங்கியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் இயக்கி, நடித்த ராயன் திரைப்படம் சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருதையும், அவர் நடித்த 'கேப்டன் மில்லர்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதையும்தட்டிச் சென்றுள்ளது. இந்தத் தேர்வு இணையவாசிகளிடையே கடும் கொந்தளிப்பையும் கடுமையான சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ராயன் தகுதியான படமா?: விருதுகள் அறிவிக்கப்பட்ட நிமிடத்திலிருந்தே இணையத்தில் சினிமா பிரியர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். ராயன் படம் தேசிய விருதுக்குத் தகுதி இல்லாத படம். அந்தப் படத்தை 10 நிமிஷம் கூட பார்க்க முடியாது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே ரத்தமும் சதையுமாகத்தான். தம்பி அண்ணனைக் கொல்வான், அண்ணன் தம்பியைக் கொல்வான்... இப்படிப்பட்ட ஒரு மோசமான வன்முறை கதை கொண்ட படம் தான் சிறந்த தமிழ்ப் படமா? தமிழ் சினிமாவில் லப்பர் பந்து, ஜமா, தங்காலன் என எத்தனையோ நேர்த்தியான, மனித உணர்வுகளைப் பேசும் நல்ல படங்கள் வந்துள்ள போது, வன்முறை நிறைந்த ராயன் படத்திற்கு விருது கொடுத்தது எந்த விதத்தில் நியாயம்? என்று இணையவாசிகள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Advertisement

Photo Credit:

ஜூரி ஈ.வி. கணேஷ்: இந்த விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகள் குறித்து, தேசிய விருது நடுவர் குழுவைச் சேர்ந்த ஜூரி ஈ.வி. கணேஷ் விளக்கம் அளித்துள்ளார். இதைப் பற்றி நான் கருத்து எதுவும் சொல்ல முடியாது. எது சரி, எது தவறு என்றும் வரையறுக்க முடியாது. இந்த ஆண்டு மட்டும் சுமார் 400 படங்கள் போட்டிக்கு வந்திருந்தன. முதல் கட்டத்தில் இருந்து தாண்டி ஒரு படம் இறுதிச் சுற்றுக்கு வரும்போது, அங்கேயும் அதற்குப் பலமான ஆதரவு இருக்கிறது. அப்படி ஒரு படம் தேர்வாகும் போது நாம் அதில் மாற்றுக் கருத்து எதுவும் சொல்ல முடியாது.

Advertisement

குழுவின் முடிவு: ஃபியூச்சர் ஃபிலிம்சை பொறுத்தவரை, முதலில் 12 பேர் கொண்ட குழு, பைனலுக்கு வரும்போது 11 பேர் இருப்பார்கள். எங்களின் பக்கம் ஒரு 7 பேர் இருப்பார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஜனநாயக முறைப்படி எடுக்கும் முடிவுதான் இந்த விருது தேர்வு என்றார். அதே போல கேப்டன் மில்லர் படத்திற்கு விருது வழங்கப்பட்டதாக வரும் விமர்சனங்கள் குறித்தும் பேசிய ஈ.வி. கணேஷ், மாநில மொழிப் படங்களுக்காகத் தனியாக ஒரு குழு தேர்ந்தெடுக்கப்படும். அதன் பிறகு இந்திய அளவில் நேஷனல் அவார்டுக்காக ஒரு பிரதான குழு தேர்ந்தெடுக்கப்படும். அந்த முதன்மைத் தேர்வுக் குழு எடுக்கும் முடிவை இவர்கள் வேண்டாம் என்று மறுக்க மாட்டார்கள்.

Advertisement

Photo Credit:

ஒரு படத்திற்குத் பெரும்பான்மை ஆதரவு இருந்தது என்றால், அதற்கு யாரும் ஆட்சேபம் தெரிவிக்க முடியாது. அதுபோன்ற தருணங்களில் தான் சில சமயங்களில் இரண்டு விருதுகளும் ஒரே நபருக்கு வர சாத்தியம் இருக்கிறது. அதுதானே தவிர, இந்தப் படத்திற்கு கிடைக்கவில்லை, அந்தப் படத்திற்கு கிடைக்கவில்லை என்று நாம் தனித்துப் பிரித்துப் பார்க்க முடியாது. நான் ஏற்கனவே சொன்னது போல, தேசிய விருது கிடைக்காத படங்கள் எல்லாம் தகுதி இல்லாத படங்கள் கிடையாது என்றார்.