சென்னை: இயக்குநர், நடிகர் எனப் பன்முகத் திறமையாளராக விளங்கிய கே.பாக்யராஜ் கடந்த ஜூன் 27-ம் தேதி மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த சினிமா உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், பாக்யராஜின் உதவி இயக்குநராக இருந்து இன்று தனியிடம் பிடித்துள்ள பார்த்திபன், பாக்யராஜின் மரண செய்தி கேட்டது முதல் அவரது உடல் அடக்கம் செய்யும் வரை ஒரு குடும்ப உறுப்பினராகவே மாறி அனைத்து காரியங்களையும் முன்னின்று செய்தார். ஆனால், பார்த்திபன் பிறரின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இப்படி விளம்பரம் தேடுகிறார் என்ற கடுமையான குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளங்களில் எழுந்தன. இதுகுறித்து 'எஸ்.எஸ்.மியூசிக்' சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், பார்த்திபன் கண்ணீர் மல்க மிகவும் வேதனையோடு பல உண்மைகளை பேசி உள்ளார்.

Advertisement

பார்த்திபன் பேட்டி: பாக்யராஜ் சாருடைய மரண செய்தியைக் கேட்டதும் எனக்கு அதை யாரிடம் உறுதிப்படுத்துவது என்றே தெரியவில்லை. உடனே அவரது மகள் கீகிக்கு ஃபோன் செய்து பேசினேன். அவர், உண்மை தான், நாங்கள் மருத்துவமனையில் இருக்கிறோம். நீங்கள் நேராக வீட்டிற்குச் சென்று அங்கிருக்கும் வேலைகளைக் கவனியுங்கள் என்றார். அதன் பின் வீட்டிற்குச் சென்றேன். அவரது உடல் வந்தால் எந்த இடத்தில் வைக்க வேண்டும், பொதுமக்கள் எப்படி அஞ்சலி செலுத்த வேண்டும் என்று யோசித்து, அங்கிருந்த அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, இரண்டு நாட்களாக நான் ஒரு மூர்க்கத்தனமாக வேலை செய்தேன். என்ன செய்கிறேன், ஏது செய்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை.

Advertisement

Photo Credit:

மனிதநேயமே இல்லையா: அவரது இறுதி ஊர்வலத்தின் போது ஜெமினியில் இருந்து நான் நடந்து சென்றேன். அதன்பிறகு இரண்டு நாட்கள் என்னால் உடம்பு வலியால் எழுந்திருக்கவே முடியவில்லை. அப்படிப்பட்ட ஒரு மன வேதனையில் தான் நான் அனைத்தையும் செய்தேன். அதை மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகச் செய்தேன் என்று எப்படிச் சொல்லலாம்? மனுஷங்களுக்கு மனிதநேயமே இல்லை என்றுதான் தோன்றுகிறது. என் குருவிற்காக நான் அழுத கண்ணீரை, இவர்களுக்கு காசுக்காக அழுவது போல எப்படித் தெரிகிறது என்று எனக்குத் தெரியவில்லை. கேமரா எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் சென்று நான் அழுதேன் எனச் சொல்கிறார்கள். அதைக் கேட்கும்போது, அன்றைய தினத்தை விட இன்றைக்குத்தான் எனக்கு அழுகை அதிகமாக வருகிறது.

Advertisement

நீ செத்தா கூட்டமே வராது: இதைவிட வேதனையான ஒரு விஷயம், பாக்யராஜ் சாருடைய சாம்பலை பெசன்ட் நகரில் கரைத்துவிட்டு, நான் வீட்டில் வேதனையோடு இருந்தேன். அப்போது இரவு 10 மணி அளவில் பாக்யராஜ் சாருடைய உதவியாளர் ஒருவர் எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார். அதில், நீதான் பாக்யராஜைப் பெற்று வளர்த்து, அவரைப் புதைத்துவிட்டு வந்தது போல, எவனுக்குமே எந்த இடத்தையும் கொடுக்காமல் எல்லாத்தையுமே நீயே செய்துட்ட. அதனால்தான் உன்னுடைய பொண்டாட்டி பிள்ளைகள் யாருமே உன் கூட இல்லை. நீயும் விரைவில் செத்துடுவ, நீ செத்தா உனக்கு கூட்டமே வராது என்று அனுப்பி இருந்தார். என் மேல் அவருக்கு ஏன் இவ்வளவு கோபம்? ஒரு கொலை குற்றவாளியாக இருந்தால் கூட இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்த மாட்டார்கள். இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துபவர் எப்படி ஒரு குடும்பஸ்தனாக, நல்ல மனிதனாக இருக்க முடியும்? அப்படி கஷ்டப்படுத்தும் அளவிற்கு நான் என்ன தவறு செய்தேன்? இரண்டு நாளாக ஏதோ ஒரு மூர்க்கத்தனத்தில் வேலை செய்தேன், அதற்காக இவ்வளவு பெரிய வார்த்தைகளா? என்னிடம் பேசி இருக்கலாம், அல்லது ஒரு அடி கூட அடித்திருக்கலாம். ஆனால் இந்த வார்த்தைகள் என்னை முற்றிலும் நிலைதடுமாற வைத்துவிட்டது என்று மிகுந்த மனவேதனையுடன் பேசியுள்ளார்.