சென்னை: பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஆமிர் கான், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, தனது திரைப்படங்களை விட தனது தனிப்பட்ட வாழ்க்கை காரணமாகவே அதிகம் பேசப்பட்டு வருகிறார். சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலியான கௌரி ஸ்ப்ராட்டை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, இந்த திருமணத்தை 'லவ் ஜிகாத்' விவகாரத்துடன் தொடர்புபடுத்தி சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், அதற்கு ஆமிர் கான் விளக்கம் அளித்தார். இதற்கிடையில், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆமிர் கானின் திருமணத்தை விமர்சித்த சிலர், அவர் "லவ் ஜிகாத்" முறையை ஊக்குவிப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். அந்த சர்ச்சை அடங்குவதற்குள், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்ததாகக் கூறப்படும் சிலர் பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவு மற்றும் ஆடியோ கிளிப் ஒன்று இணையத்தில் வைரலானது.
கொலை மிரட்டலா?: அதில், ஆமிர் கான் நாட்டில் "லவ் ஜிகாத்" கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறார். மேலும், இது தங்களது சனாதன தர்மத்திற்கு எதிரானது என்றும், இதற்கு விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த பதிவு அர்ஜு பிஷ்னோய் மற்றும் டைசன் பிஷ்னோய் என்ற பெயர்களில் பகிரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், அது உண்மையா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இந்த சர்ச்சைகள் தீவிரமடைந்த நிலையில், தனது மீது சுமத்தப்பட்ட "லவ் ஜிகாத்" குற்றச்சாட்டுக்கு ஆமிர் கான் நேரடியாக பதிலளித்தார். தனது திருமணங்களை மதத்துடன் இணைத்து பேசுவது முற்றிலும் தவறானது என்று அவர் கூறியுள்ளார். அமீர் கான் விளக்கம்: இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "என் மனைவிகளான ரீனா, கிரண் அல்லது கௌரி ஆகியோரில் யாரும் தங்களது மதத்தை மாற்றவில்லை. நாங்கள் அனைவரும் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக பதிவுத் திருமணம் செய்துகொண்டோம். கௌரி இந்து கூட இல்லை. அவர் கிறிஸ்தவ பின்னணியைச் சேர்ந்தவர். ஆனால் மதத்தில் தீவிர ஈடுபாடு இல்லாதவர். எனவே இந்த திருமணத்தை 'லவ் ஜிகாத்' என்று கூறுவது உண்மைக்கு புறம்பானது" என்று தெரிவித்துள்ளார். திருமணம்: மேலும், தனது தனிப்பட்ட வாழ்க்கையை அரசியல் மற்றும் மதக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என்றும், வாழ்க்கை ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு அனுபவங்களை கொடுக்கிறது என்றும் ஆமிர் கான் குறிப்பிட்டுள்ளார். அமீர் கானுக்கே மிரட்டலா என்று அவரது ரசிகர்கள் பலரும் ஷாக்கில் உள்ளனர்.More Articles