சென்னை: நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த போராட்டம் அர்த்தமற்றது, நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு மிகவும் அவசியமானது என நடிகர் ரஞ்சித் கூறியிருப்பது இணையத்தில் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
ரஞ்சித் பேச்சு: திருப்பூரில் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரஞ்சித், ஆரம்பத்தில் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதால் நான் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தேன். வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற அக்கறை இருக்கும். ஆனால், அரசு செய்ய மறுத்தால் அதை எதிர்த்துப் போராடுவது நம் உரிமை. இப்போது நீட் தேர்வை எதிர்த்து மாணவர்கள் போராடுவதைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.
ரஞ்சித்தின் வாதம்: பாதி பேருக்கு நீட் தேர்வு எதற்காக என்பதே புரியவில்லை. எதுக்கு நீட்... எதுக்கு நீட் என எகிறுகிறார்கள். நீட் வருவதற்கு முன்பு, பணம் இருக்கும் செல்வந்தர்கள் வீட்டுப் பிள்ளைகள் 12-ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தாலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து டாக்டர் ஆக முடிந்தது. ஆனால், பணமே இல்லாத ஏழை மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்திருந்தும் டாக்டராக முடியாத அவலநிலை இருந்தது. 1 கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை பேரம் பேசித் தான் கல்வி விற்கப்பட்டது. இந்த முறைகேட்டைத் தடுத்து, தகுதியான ஏழை மாணவன் டாக்டராக வேண்டும் என்பதற்காகத்தான் 'நீட்' என்ற தகுதித் தேர்வு கொண்டு வரப்பட்டது. இதில் சமத்துவம்தான் பரவ வேண்டுமே தவிர, இத்தகைய போராட்டங்கள் அல்ல. பெற்றோருக்கு எச்சரிக்கை: அதே நேரம் வினாத்தாள் கசிந்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதற்கு மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், தவறும் பட்சத்தில் போராடலாம். ஆனால், தற்போது சோஷியல் மீடியாவில் உண்மை என்னவென்றே தெரியாமல், 'ஏஐ' மூலம் உருவாக்கப்படும் போலி வீடியோக்கள் பரப்பப்பட்டு மாணவர்களிடையே தேவையற்ற தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. போராட்டத்தில் ஒலிக்கும் பாடல்களைக் கேட்கும்போது அச்சமாக இருக்கிறது. மாணவர்களின் பிரச்சனையைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அப்பாவி மாணவர்களைப் பலியாக்க நினைக்கிறார்களோ என்ற பயம் எனக்கு வருகிறது. மாணவர்களின் போராட்டத்தில் நிச்சயம் அரசியல் கலந்திருக்கிறது. எனவே, அரசியல் கலக்கக்கூடிய எந்தவொரு இடத்திற்கும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அனுப்பக் கூடாது என ரஞ்சித் என பெற்றோர்களை எச்சரித்துள்ளார். நடிகர் ரஞ்சித்தின் இந்த பேச்சு இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பு உள்ளது.More Articles