டெல்லி: இந்தியா மட்டுமல்ல உலகில் பெரும்பான்மையான நாடுகளில் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் செய்திகளில் டெல்லி, ஜந்தர் மந்தரில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இணைந்து நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவது தான். இந்த போராட்டத்தில் நடிகை ஷாலினி பாண்டேவும் கலந்து கொண்டு, அங்கு தான் எதிர்கொண்டதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் கோரிக்கையை முன் வைக்கும் போராட்டமாக இருந்தது, அடுத்ததாக உண்ணாவிரத போராட்டமாக மாறியது. கல்வியலாளர் சோனம் மாங்சுக் 22 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருந்தவரை காவல்துறை கட்டாயமாக அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தது.
இப்படி இருக்கையில் கடந்த 20ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றவர்கள் மீது மத்திய துணை ராணுவமும் காவல்துறையும் நடத்திய மோசமான தடியடி மொத்த இந்தியாவையும் பதற்றத்திற்கு ஆளாக்கியது. போராடிய இளைஞர்கள் ரத்தம் சொட்ட போராட்டக்களத்தில் இருந்தார்கள், இப்போதும் இருக்கிறார்கள்.
இந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சி அளித்த நிலையில் நடிகை ஷாலினி பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தானும் அந்த போராட்டக்களத்தில் இருந்ததாக குறிப்பிட்டு தான் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஷாலினி பாண்டே போஸ்ட்: மொத்தம் 10 புகைப்படங்கள் ஒன்பது வீடியோக்கள் என ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டமும், மத்திய துணை ராணுவமும் காவல்துறையும் இணைந்து நடத்திய தாக்குதல் தொடர்பாகவும் பகிர்ந்துள்ளார். ஒரு வீடியோவில் போராட்டக்களத்தில் இருந்தவரின் ரத்தம் சாலையில் சிந்தி உள்ளதை பகிர்ந்துள்ளார். அம்பேத்கர், பகத் சிங் உள்ளிட்ட மறைந்த தலைவர்களின் புகைப்படங்களையும் பதாகைகளையும் ஏந்தியபடி இளைஞர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதையும் பகிர்ந்துள்ளார். கேப்ஷன்: மேலும் தான் பகிர்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, " நான் அங்குதான்(ஜந்தர் மந்தர்) இருந்தேன், அங்கு நான் பார்த்ததும், அங்கிருந்து நான் எடுத்துக் கொண்டு செல்வதும் என்னவென்றால், நான் சந்தித்த துணிச்சலான மனிதர்களையும், அவர்களின் முதுகெழும்புகளில் உள்ள உறுதியையும், ஆன்மாக்களில் உள்ள நம்பிக்கையையும் எப்பேர்ப்பட்ட ஒடுக்குமுறையை எதிர்கொண்டாலும் அதிலிருந்து மீண்டு வரும் துணிச்சலை எதைக் கொண்டும் நசுக்கி விட முடியாது என்று இந்த நாட்டிற்கு உணர்த்திவிட்டீர்கள். நன்றி. போராட்டக்களத்தில் நின்ற வீரர்களுக்கு என் வீர வணக்கம். ஹெய் ஹிந்த்" என்று பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் ரியாக்ஷன்: அவரது இந்த பதிவு பலருக்குமே ஷாக் கொடுத்துள்ளது. ஷாலினி பாண்டே பகிர்ந்துள்ள புகைப்படங்களும் வீடியோக்களும் கேப்ஷனும் ரசிகர்கள் பலருக்குமே புருவத்தை உயர வைத்துள்ளது. சினிமா ப்ரோமோஷன், வெளிநாடு சுற்றுலா, தனது போட்டோ சூட் புகைப்படங்களை பகிர்ந்து வரும் ஷாலினி பாண்டே, மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டது பலருக்குமே ஷாக் கொடுத்துள்ளது. பலரும் அவரைப் பாராட்டி வருகிறார்கள்.More Articles