சென்னை: தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தற்போது இந்திய சினிமாவில் மிகவும் பிசியான இசையமைப்பாளர் என்றால் அது ராக் ஸ்டார் அனிருத் தான். டிரெண்ட் செட்டராக வலம் வரும் இவர் நமது படத்திற்கு இசையமைத்திட மாட்டாரா என்று ஏங்கும் தயாரிப்பு நிறுவனங்கள் தொடங்கி நடிகர்கள், இயக்குநர்கள் என பலரும் உள்ளனர். இப்படி இருக்கையில் அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்க்கு நன்றி தெரிவித்து மிகவும் எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.

Advertisement

"ஜனநாயகன், லியோ, மாஸ்டர், பீஸ்ட் மற்றும் கத்தி என உங்களுடன் பயணித்தது அற்புதமான, உணர்வுபூர்வமான அனுபவம். அளவற்ற நம்பிக்கைக்கும், வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும் தருணங்களுக்கும் நன்றி. இசை என்றும் வாழும்" என்று விஜய்க்கு அனிருத் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். அதனுடன், 'தளபதி கச்சேரி' பாடலில் விஜய்யுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.

Advertisement

அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படத்திலேயே (3) உலகம் முழுவதும் கவனம் ஈர்த்தார். 'Why This Kolaveri' பாடல் உலகளவில் வைரலானது. தேசிய விருதும் கிடைத்தது. ஆனால், அந்த வெற்றிக்குப் பிறகும் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களின் படங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆரம்ப காலத்தில் அவர் இசையமைத்த பெரும்பாலான படங்கள், அவரை அறிமுகப்படுத்திய நடிகரான தனுஷ் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனத்தைச் சுற்றியே அமைந்திருந்தன.

Advertisement

அந்த நேரத்தில்தான் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது 'கத்தி'. முன்னணி நடிகரின் படத்துக்கு அனிருத்தை இசையமைப்பாளராக தேர்வு செய்த அந்த முடிவு, அவரது இசைப் பயணத்தையே வேறு உயரத்திற்கு எடுத்துச் சென்றது.

டைட்டில் டிராக்: 'கத்தி' படத்தின் பாடல்கள் மட்டுமல்ல, படத்தின் டைட்டில் கார்டுக்கு ஒலித்த அந்த மாஸ் பின்னணி இசை இன்றைக்கும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. ஒரு ஹீரோவின் அறிமுகத்தை இசையால் இவ்வளவு பிரம்மாண்டமாக உணர வைத்த படங்களில் 'கத்தி' முக்கிய இடம் பிடித்திருக்கிறது என்று ரசிகர்களே கூறுவார்கள். அதன்பிறகு இருவரும் இணைந்த ஒவ்வொரு படமும் இசை ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 'மாஸ்டர்', 'பீஸ்ட்', 'லியோ', 'ஜனநாயகன்' என தொடர்ந்த இந்த கூட்டணியில், ஒவ்வொரு முறையும் விஜய்க்காக அனிருத் தனி மெனக்கெடலுடன் இசையமைத்தது ரசிகர்களுக்கே தெரிந்த விஷயம்.

Advertisement

பெரிய முன்னணி நடிகர்கள்: 'கத்தி' வெற்றிக்குப் பிறகே மற்ற முன்னணி நடிகர்களின் படங்களிலும் அனிருத்துக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன. பின்னர் முன்னணி நட்சத்திரங்கள், பான் இந்தியா படங்கள், பாலிவுட் சூப்பர் ஸ்டார்களின் படங்கள் வரை அவரது இசைப் பயணம் விரிவடைந்தது. இன்று இந்தியாவின் மிகவும் பிஸியான இசையமைப்பாளர்களில் ஒருவராக அவர் திகழ்கிறார்.

நம்பிக்கை: அதனால்தான், தனது சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான கதவைத் திறந்து வைத்தவருக்கு, அவரது கடைசி திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்க்க வந்தவர் மிகவும் எமோஷனலாகி அழுதார். ஒரு ஹிட் பாடல் இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தியிருக்கலாம். ஆனால், விஜய் போன்ற ஒரு முன்னணி நடிகரின் நம்பிக்கைதான் அவரை இந்திய சினிமாவின் உச்ச இசையமைப்பாளர்களில் ஒருவராக மாற்றிய பயணத்துக்கு மிகப்பெரிய அடித்தளமாக அமைந்தது என்பதையே அனிருத்தின் இந்த எமோஷனல் பதிவு மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது.