ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும், இந்துபூர் தொகுதி எம்.எல்.ஏவுமான நந்தமூரி பாலகிருஷ்ணா முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் நாரா சந்திரபாபு நாயுடு நேரில் சென்று அவரது உடல்நிலையை விசாரித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழ் ரசிகர்களுக்கு பாலகிருஷ்ணா சமீபத்தில் அதிகம் அறிமுகமானது 'பகவந்த் கேசரி' திரைப்படம் மூலமாகத்தான். அந்தப் படத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு, தமிழுக்கேற்ற மாற்றங்களுடன் உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வரும் 'ஜனநாயகன்'. இதன் காரணமாக பாலகிருஷ்ணாவின் படங்கள் குறித்தும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தின் கோதாவரி பகுதியில் நடைபெற்று வந்த தனது புதிய திரைப்படமான 'NBK111' படப்பிடிப்பின் போது பாலகிருஷ்ணாவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு, உடனடியாக ஹைதராபாத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
சீக்கிரமே குணமாக வாழ்த்து: அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர் நாரா சந்திரபாபு நாயுடு, பாலகிருஷ்ணாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விரிவாக கேட்டறிந்தார். மேலும், அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் மக்கள் பணிக்கும், திரைப்படப் படப்பிடிப்புக்கும் திரும்ப வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது ஏஐஜி மருத்துவமனை தலைவர் டாக்டர் டி. நாகேஸ்வர ரெட்டியும் உடன் இருந்தார். படப்பிடிப்பு நிறுத்தம்: மருத்துவர்கள் அளித்த தகவலின்படி, பாலகிருஷ்ணா தற்போது நலமாக இருப்பதாகவும், முழுமையாக குணமடைய குறைந்தது ஆறு வாரங்கள் முழு ஓய்வு அவசியம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 'NBK111' திரைப்படத்தின் படப்பிடிப்பும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜனநாயகன்: ஒருபுறம் அரசியலிலும், மறுபுறம் சினிமாவிலும் தொடர்ந்து பிஸியாக இயங்கி வரும் பாலகிருஷ்ணா விரைவில் உடல்நலம் பெற்று மீண்டும் ரசிகர்களை சந்திக்க வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில், 'பகவந்த் கேசரி' கதையை தழுவி உருவான 'ஜனநாயகன்' வெளியாகியுள்ள சூழலில், பாலகிருஷ்ணாவின் உடல்நலம் குறித்த இந்த செய்தி தமிழ் ரசிகர்களிடையேயும் கவனத்தை ஈர்த்துள்ளது.More Articles