சென்னை: சாகித்ய அகாதமி விருது வென்ற பிரபல எழுத்தாளர் பூமணியின் மறைவு தமிழ் திரையுலகையும் எழுத்துலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement

தொடர்ந்து பிரபலங்களின் மரணச் செய்திகள் ரசிகர்களையும் திரையுலகையும் சோகக் கடலில் ஆழ்த்தி வருகிறது. பாடகி ஜானகி அம்மாவின் மறைவுக்கு ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இறுதியஞ்சலி செய்தக் காட்சிகள் எல்லாம் நெஞ்சை நெகிழச் செய்தது.

Advertisement

பாரதிராஜா, பாக்யராஜ், ஜானகி என வரிசையாக பிரபலங்களின் மறைவால் ரசிகர்கள் வாடி வரும் நிலையில், அவர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது எழுத்தாளர் பூமணியின் மறைவு.

முதலமைச்சர் விஜய் இரங்கல்: "சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளரும், தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளருமான திரு. பூலித்துரை மாணிக்கவாசகம் எனும் பூமணி அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

திரு. பூமணி அவர்கள் கரிசல் நிலத்தின் மண் வாசனையும், அடித்தட்டு மக்களின் வாழ்வின் நுட்பமான யதார்த்தங்களும், வரலாற்றின் ஆழமான சாட்சியங்களும் நிரம்பிய படைப்புகளின் மூலம் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்திய முக்கியமான படைப்பாளி ஆவார்.

Advertisement

அவரது 'அஞ்ஞாடி' நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றது, அவரது இலக்கிய ஆளுமைக்கு கிடைத்த உயரிய அங்கீகாரமாகும். மேலும், அவரது 'வெக்கை' நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான 'அசுரன்' திரைப்படம், அவரது எழுத்தின் வீச்சை உலகறியச் செய்தது.

திரு. பூமணி அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ் இலக்கிய உலகத்தைச்
சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலக்கியத் துறையில் திரு. பூமணி அவர்களின் பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்."

Advertisement

அரசு மரியாதை: பாரதிராஜா, பாக்கியராஜுக்கு எப்படி அரசு மரியாதையை வழங்கினாரோ முதலமைச்சர் விஜய் அதே போல எழுத்தாளர் பூமணிக்கும் அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். பாடகி ஜானகி அம்மாவுக்கும் கர்நாடகா அரசு மரியாதை செலுத்தி வழியனுப்பியது குறிப்பிடத்தக்கது.

மாரி செல்வராஜ் நன்றி: தமிழ்சமூகத்தின் மூத்த படைப்பாளி பெரும் மரியாதைக்குரிய ஐயா.பூமணி அவர்களின் மரண செய்தி மீளா துயரத்தையும் வேதனையையும் தருகிறது. தன் வாழ்நாள் முழுவதும் இத்தமிழ்சமூகத்தின் அதிலும் குறிப்பாக தெக்கத்தி மக்களின் துல்லியமான வாழ்வியலையும் அறத்தையும் பெரும் படைப்புகளாக்கி சாகித்திய அகாடமி விருதையும் பெற்ற ஐயாவை போற்றும் விதமாக ஐயாவின் நல்லடக்கத்திற்கு அரசு மரியாதை வழங்கிய தமிழக அரசுக்கு என் நன்றியையும் மரியாதையையும் தெரிவித்துகொள்கிறேன்.