லாஸ் ஏஞ்சல்ஸ்: 'தி ஒடிஸி திரைப்படம் உலகளவில் பெரும் தாக்கத்தையும் ஏகப்பட்ட விவாதங்களையும் சமூக வலைதளத்திலும் சினிமா வட்டாரங்களிலும் கிளப்பி உள்ளது. அதற்கு காரணமே அந்த படத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் தான்.
ஜிகர்தண்டா படத்தில் வருவதை போல ஒரு பக்கம் இது ஒரு குப்பைப் படம் என்றும் நோலனின் வீக்கான படம் என்றும் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும், இன்னொரு பக்கம் இதுபோன்ற ஒரு உலக சினிமா இருக்க முடியாது என்றும் கிரேக்க கடவுள்களின் கதையை எந்தளவுக்கு ஹியூமனைஸ் பண்ணி சொல்ல முடியுமோ நோலன் அதை செய்துக் காட்டியுள்ளார் என புகழ்கின்றனர்.
ஒடிஸி படத்தை விட பிராட் பிட் நடிப்பில் வந்த டிராய் படமும் அதில் காட்டப்பட்ட மரக்குதிரையான ட்ரோஜன் ஹார்ஸ் தான் பெஸ்ட் என்றும் ஏகப்பட்ட விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. விமர்சனங்களும், விவாதங்களும் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த படத்தை எடுத்த நோலன் எவ்வளவு சம்பாதிக்கப் போகிறார் என்பதை கேட்டால் அத்தனை பேரும் வாயடைத்துப் போவார்கள். 3,600 கோடி பட்ஜெட்: தி ஒடிஸி படத்தை தயாரிக்க தயாரிப்புச் செலவு 250 மில்லியன் டாலர் எனவும், உலகளாவிய விளம்பரப் பணிகளுக்காக 125 மில்லியன் டாலர் செலவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம், இந்த பிரம்மாண்ட திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 375 மில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ₹3,614 கோடி) என கூறப்படுகிறது. லைவ் லொகேஷன் - ஐமேக்ஸ் (IMAX) கேமராக்கள்: வழக்கமான தனது பாணியில், கிறிஸ்டோபர் நோலன் இந்தப் படத்திலும் 70 மிமீ ஐமேக்ஸ் கேமராக்களையும், நிஜமான உலகளாவிய இடங்களையும் பயன்படுத்தியுள்ளார். டிஜிட்டல் கிரீன் ஸ்கிரீன்களுக்குப் பதிலாக, படக்குழுவினர் கிரீஸ், மொராக்கோ, ஐஸ்லாந்து, ஸ்காட்லாந்து, அமெரிக்கா மற்றும் இத்தாலியின் சிசிலி தீவு ஆகிய பல இடங்களுக்குப் பயணம் செய்து படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். கதையின் முக்கிய பின்னணியான இத்தாகா (Ithaca) ராஜ்யத்தின் செட் மட்டுமே முழுமையாகப் புதிதாக உருவாக்கப்பட்டது என்றும், மற்ற காட்சிகள் அனைத்தும் நிஜமான இடங்களிலேயே படமாக்கப்பட்டன என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நட்சத்திரங்களின் சம்பளம் பற்றிய விவரங்கள்: இப்படத்தின் பிரம்மாண்ட பட்ஜெட்டில், முன்னணி நட்சத்திரங்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இத்தாகா நாட்டின் மன்னர் ஒடிஸியஸாக நடித்த மேட் டேமன் (Matt Damon) தான் மற்ற நடிகர்களை விட அதிகபட்சமாக 15 மில்லியன் டாலர் சம்பளமாகப் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக, ஒடிஸியஸின் மகன் டெலிமக்கஸாக நடித்த டாம் ஹாலண்ட் (Tom Holland) சுமார் 10 மில்லியன் டாலர் பெற்றுள்ளார். அதேபோல், கலிப்ஸோ கதாபாத்திரத்தில் நடித்த சார்லஸ் தெரான் (Charlize Theron) 5 முதல் 6 மில்லியன் டாலர் வரையிலும், அதீனா கதாபாத்திரத்தில் நடித்த ஜெண்டயா (Zendaya) சுமார் 5 மில்லியன் டாலரும் வாங்கியுள்ளனர். ஒடிஸியஸின் மனைவியான பெனிலோப் கதாபாத்திரத்தை ஏற்ற அன்னா ஹாத்வே (Anne Hathaway) 4 முதல் 5 மில்லியன் டாலர் வரை சம்பளமாகப் பெற்றுள்ளார். பெனிலோப்பின் அரண்மனையைக் கைப்பற்ற நினைக்கும் ஆன்டினஸ் கதாபாத்திரத்தில் நடித்த ராபர்ட் பாட்டீன்ஸனுக்கு (Robert Pattinson) 1.5 மில்லியன் முதல் 3.5 மில்லியன் டாலர் வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. 100 மில்லியன் டாலருக்கும் மேல் சம்பளம்: தி ஒடிஸி படத்தில் நடித்த நடிகர்களின் சம்பளங்களை விட படத்தை தயாரித்து இயக்கிய நோலனின் வருவாய் தான் அதிகம் என ஃபோர்ப்ஸ் நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது. 'தி ஒடிஸி' திரைப்படத்தை இயக்குவதற்காக கிறிஸ்டோபர் நோலன் அட்வான்ஸாக 20 மில்லியன் டாலர் பெற்றுள்ளார் என்றும் இது தவிர, படத்தின் உலகளாவிய பாக்ஸ் ஆபீஸ் வசூலிலிருந்து 20 சதவீதப் பங்கும் ஒப்பந்தத்தின்படி அவருக்கு வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே 'ஓபன்ஹைமர்' படத்தின் மூலம் நோலன் சுமார் 100 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டிய நிலையில், 'தி ஒடிஸி' திரைப்படம் அவருக்கு அதைவிடப் பெரிய லாபத்தைத் தரும் என்று கூறுகின்றனர். இந்திய மதிப்பில் சுமார் 1000 கோடி ரூபாய் சம்பளத்தை கிறிஸ்டோபர் நோலன் இந்த படத்தின் மூலம் சம்பாதித்துள்ளார் என்கின்றனர்.More Articles