சென்னை: இந்தியத் திரையிசையின் கானக்குயில் எஸ். ஜானகி அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு ஒட்டுமொத்தத் திரையுலகமும், கோடிக்கணக்கான இசை ரசிகர்களும் மீளாத் துயரில் மூழ்கியுள்ளனர். ஆறு தசாப்தங்களுக்கும் மேலாகத் தனது காந்தக் குரலால் உலகையே கட்டிப்போட்ட இந்த ஆளுமையின் பிரிவுக்குப் பிரபலங்கள் தங்களது அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.

Advertisement

முதல்வர் விஜய் உருக்கம்: தமிழக முதலமைச்சர் விஜய் விடுத்துள்ள அதிகாரப்பூர்வ இரங்கல் செய்தியில், "இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர் ஜானகி அம்மாள். பலமுறை தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எண்ணற்ற உயரிய விருதுகளைப் பெற்ற அவர், தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார். அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement

தேனமுதக் குரல்: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தன்னுடைய தேனமுதக் குரலால் தலைமுறை தலைமுறையாக மக்களை மகிழ்வித்த ஜானகி அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும் என மிகவும் சுருக்கமாகவும் உருக்கமாகவும் பதிவிட்டுள்ளார்.

இறக்கி வைக்க முடியாத சோகம்: உலகநாயகன் கமல்ஹாசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த அன்பை எங்கு தேடுவேன் அம்மா? இறக்கி வைக்கமுடியாத சோகம் பலர்க்கும் இருக்கும். அவர்க்கெல்லாம் ஆழ்ந்த இரங்கல்கள்" எனத் தன் குருவின் இடத்திலிருந்த ஜானகி அம்மாவின் மறைவிற்கு நெஞ்சார அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Advertisement

அனிருத் வேதனை: இளந்தலைமுறை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் தனது எக்ஸ் தளத்தில், "அமைதியில் துயில்கொள்ளுங்கள் ஜானகி அம்மா. உங்கள் ஆசீர்வாதங்களை நான் என்றென்றும் நினைவுகூர்வேன். ஓம் சாந்தி!" எனப் பதிவிட்டுத் தனது இறுதி மரியாதையைச் செலுத்தியுள்ளார்.