சென்னை: 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் ஜூலை 18ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்னரே அறிவிக்கப்படுவதாக இருந்த நிலையில் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் திரையுலகத்தில் நடிகர் மற்றும் இயக்குநரான தனுஷ் தான் நடித்த கேப்டன் மில்லர் படத்திற்கு சிறந்த நடிகர் விருதும், தான் இயக்கி நடித்த தனது 50ஆவது படமான ராயன் படத்திற்கான சிறந்த இயக்குநர் விருதும் பெறவுள்ளார். இந்த இரு விருதுகளும் அறிவிக்கப்பட்ட பின்னர் பலரும் தனுஷக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் நடிகர் தனுஷோ மிகவும் எமோஷ்னலாக தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது அறிக்கையில், " ஓம் நமசிவாய! 'ராயன்' திரைப்படத்திற்காக சிறந்த பிராந்திய திரைப்படத்துக்கான தேசிய விருதையும், 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்ததற்காக சிறப்பு பாராட்டு (சிறந்த நடிகர்) பிரிவில் தேசிய விருதையும் பெற்றிருப்பது என்னை மிகவும் பணிவாகவும், மனம் நெகிழ்ச்சியுடனும் ஆக்கியுள்ளது.
இந்த உயரிய அங்கீகாரத்தை வழங்கிய தேசிய திரைப்பட விருது நடுவர்கள் மற்றும் தேர்வுக்குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் திரைப்பயணம் முழுவதும் எனக்கு உறுதுணையாக இருந்த பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள நண்பர்கள் அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றி.
ரசிகர்கள் இல்லாமல்: ஒரு நடிகராக இது எனக்கு கிடைக்கும் மூன்றாவது தேசிய விருது. ஒரு இயக்குநராக கிடைக்கும் முதல் தேசிய விருது இதுவாகும். என் ரசிகர்கள் இல்லாமல் இதெல்லாம் சாத்தியமாகியிருக்காது. அவர்கள்தான் என் பலத்தின் தூண்கள். என் இதயத்தின் ஆழத்திலிருந்து அனைவருக்கும் நன்றி. நெருக்கமான விருது: 'கேப்டன் மில்லர்' திரைப்படத்திற்காக கிடைத்த இந்த அங்கீகாரம் எனக்கு மிகவும் நெருக்கமானது. ஏனெனில், இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களில் இதுவே எனது மிகச் சிறந்த நடிப்பு என்று நான் எப்போதும் நம்பியிருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த அந்த நடிப்புக்காக கிடைத்த இந்த சிறப்பு பாராட்டு, இந்த விருதை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளது. முதல் அங்கீகாரம்: அதேபோல், வாழ்க்கையில் கிடைக்கும் முதல் அங்கீகாரம் எப்போதும் மறக்க முடியாதது. 'ராயன்' திரைப்படத்திற்காக ஒரு இயக்குநராக என் முதல் தேசிய விருதைப் பெற்றிருப்பது, வாழ்நாள் முழுவதும் நான் போற்றிப் பாதுகாக்கும் ஒரு ஆசீர்வாதமாக பார்க்கிறேன். நான் எப்போதும் சொல்வது போல, "எண்ணம் போல் வாழ்க்கை" ஹர் ஹர் மகாதேவ். அன்புடன் - டி ( தனுஷ்) என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.More Articles