சென்னை: தமிழ் திரையுலகில் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் சற்குணம். இவரது இயக்கத்திற்கு என்று தனி பாணி உள்ளது. இவரது வாகை சூடவா படம் தமிழ் திரையுலகத்திற்கு மட்டும் இல்லாமல் தமிழ் சமூகத்திற்கே ஒரு பெரிய பாடம். இப்படி இருக்கையில் நடைபெறவுள்ள தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலைச் சுற்றி புதிய சர்ச்சை வெடித்துள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநரும் எழுத்தாளருமான ஏ. சற்குணம், வெறும் ரூ.500 சந்தா தொகைக்கு தான் விலைபோனதாக காரணம் காட்டி தன்னை வாக்களிக்கத் தகுதியற்றவர் என அறிவித்திருப்பது அவமானகரமான செயல் என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தனது இன்ஸ்டாகிராம் அறிக்கையில், வரும் ஜூலை 19 அன்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்த சங்கத்தின் உறுப்பினரான தனக்கு, ரூ.500 சந்தா தொகை செலுத்தப்படவில்லை என்பதை நினைவூட்ட சங்க நிர்வாகத்திற்கு பல வழிகள் இருந்தும், அதனை யாரும் தெரிவிக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தேர்தலில் போட்டியிடும் தனது நண்பர் ஒருவர் மூலம், "நீங்கள் ரூ.500 செலுத்துங்கள், நான் கொடுத்துவிடுகிறேன்" என்று கூறி அந்த பணத்தையும் அவரிடம் கொடுத்ததாக சற்குணம் விளக்கியுள்ளார். இப்படிப்பட்ட சூழலில், ரூ.500-க்கு நான் விலை போய்விட்டேன் என்று கூறி, என்னை வாக்களிக்கத் தகுதியற்றவர் என தகுதி நீக்கம் செய்திருப்பது மிகப்பெரிய அவமானம் என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார். வன்மையான கண்டனங்கள்: தேசிய விருது, தமிழக அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு அங்கீகாரங்களை பெற்ற ஒரு படைப்பாளியை இவ்வாறு நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இந்த நடவடிக்கையை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் சற்குணம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பரபரப்பு: திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலை முன்னிட்டு எழுந்துள்ள இந்த விவகாரம் தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சற்குணம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு சங்க நிர்வாகம் என்ன விளக்கம் அளிக்கப் போகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சற்குணத்திற்கு ஆதரவாக திரைப்பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் சிலர் கப் சிப் என்று இருப்பதும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.More Articles