சென்னை: டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்துக்கு ஆதரவாக, நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல, திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மேடையில் இயக்குநர்கள் பா. ரஞ்சித், வெற்றிமாறன் உள்ளிட்டோர் ஆவேசமாக பேசிய நிலையில், அவர்களது கருத்துகளுக்கு இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement

ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா. ரஞ்சித், நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் குரலை அரசுகள் கேட்க வேண்டும் என்றும், கல்வி உரிமையை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதேபோல், இயக்குநர் வெற்றிமாறன், "இளைஞர்கள் போராட்டக் களத்திற்கு வருகிறார்கள் என்றால் அது அரசின் தோல்வி. நீட் தேர்வில் நடந்த குளறுபடிகளை சரி செய்வது மட்டும் போதாது. நீட் தேர்வையே தடை செய்ய வேண்டும். இந்த முறை நாம் இன்னும் தீவிரமாக களத்தில் இறங்க வேண்டும்" என்று பேசியிருந்தார்.

Advertisement

பா. ரஞ்சித்துக்கு: இந்த நிலையில், அந்த இருவரின் பேச்சையும் குறிப்பிட்டு இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் தளத்தில் அடுத்தடுத்து பதிவுகளை வெளியிட்டுள்ளார். பா. ரஞ்சித்தின் கருத்துக்கு பதிலளித்த அவர், "என் சமுதாய பிரச்சினைக்கு குரல் எழுப்பினால் என்னை சாதி வெறியன் என்பான். தலித் சமூகத்தை சேர்ந்தவர் அவர்களுக்கு மட்டும் குரல் எழுப்பவில்லை என்றால், அவர்களை தலித் சமூகமே இல்லை என்பான். என்னடா முரண் இது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

அதோடு, "சாதி இல்லை, சாதியை ஒழிப்போம் என்று சொல்பவர்கள், உன் சாதியை சேர்ந்த அமைச்சர் உனக்கு மட்டும் குரல் எழுப்பவில்லை என்று புலம்புகிறார்கள். அவர் எனக்கும் அமைச்சர்தான். பொதுவாகத்தான் பேசுவார். வீசும் காற்றில் விஷம் பரவட்டும் தோழர்" என்றும் பதிவிட்டுள்ளார்.

ஜன நாயகனா.. ஜனநாயகமா? நீட் தேர்வு வினாத்தாள் கசிவுப் போராட்டத்தில் வெடித்த அமீர்!

வெற்றிமாறனுக்கு: வெற்றிமாறனின் பேச்சுக்கும் தனியாக பதிலளித்த மோகன் ஜி, "வெற்றிமாறன் அண்ணே.. 1200 மதிப்பெண் எல்லாம் 2018-லயே மாற்றி 600 மார்க் கொண்டு வந்தாச்சு னா.. கடமைக்கு ஏன் னா இந்த மேடைக்கு போறீங்க.. ரெண்டு பொருள உருவி, மாள ஒன்னு போட்டா சரியா போதுன்னு பேசுறது தான் நமக்கு சரி னா.. நீட் எல்லாம் வேணாம் னா.. படிக்கிற பசங்க அதுவா புழைச்சிக்கும் னா" என்று விமர்சித்துள்ளார்.

Advertisement

விவாதம்: மோகன் ஜியின் இந்த பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ஒருபக்கம் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும், மறுபக்கம் பா. ரஞ்சித் மற்றும் வெற்றிமாறனின் பேச்சுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதனால் நீட் விவகாரம் தொடர்பான இந்த கருத்து மோதல் தற்போது சமூக வலைதளங்களில் புதிய விவாதமாக மாறியுள்ளது.