சென்னை: இயக்குநர் சேரன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு; பாக்யராஜ் அணி சார்பில் போட்டியிடுகிறார். ஜூலை 19ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்தல் இப்போதிருந்தே சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது. சிலர் சேரனுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்க; இயக்குநர் இரா. சரவணன் நெகிழ்ச்சியாக சேரன் குறித்து ஒரு சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் தன் முகநூல் பக்கத்தில், "இயக்குநர் சேரன் ஈரமானவர் என யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சில மாதங்களுக்கு முன் கல்வியாளர் ஹிமாயூன் அண்ணன் இல்லத் திருமணம்... குடும்பத்தினருடன் போயிருந்தேன். சேரன் சார் உள்ளிட்டவர்கள் முன் வரிசையில் அமர்ந்திருந்தார்கள். மணமக்களை வாழ்த்த நான் வரிசைக்குப் போனபோது, "சரவணன்..." என அழுத்தமாகச் சொன்னபடி எழுந்தார் சேரன் சார். வணக்கம் சொன்னேன். "என்ன சரவணன், என்னைப் பார்த்திட்டுப் பார்க்காத மாதிரி போறீங்க? உங்ககிட்ட இருந்து இப்படியொரு அணுகுமுறையை நான் எதிர்பார்க்கவே இல்லையே..?" என்றார். "அப்படியெல்லாம் இல்லை சார்..." என்றேன்.
மறுபடியும் வருத்தப்பட்டார்: "எங்கிட்ட ஏன் சரவணன் இப்படி இருக்கீங்க?" என ஆதங்கப்பட்டவர், "சரி, மணமக்களைப் பார்த்திட்டு வாங்க.." என்றனுப்பினார். நிகழ்வை முடித்துவிட்டு நாங்கள் வெளியே நடந்து வந்தோம். என்னை ஒட்டி ஒரு கார் வந்து நின்றது. கண்ணாடி இறக்கி காரில் வரச் சொல்லிச் சேரன் சார் அழைத்தார். "பரவாயில்ல சார்... என் கார் வாசல்லதான் நிற்குது" என்றேன். "என்னதான் இருந்தாலும் நீங்க என்னைப் பார்த்திட்டு பார்க்காமல் போயிருக்கக் கூடாது சரவணன்..." என மறுபடியும் வருத்தப்பட்டார்.
இதுதான் நடந்தது: உண்மையில் அந்த விழாவில் சேரன் சாரை பார்த்ததுமே நான் கையெடுத்துக் கும்பிட்டேன். சார் அதனைக் கவனிக்கவில்லை. இரண்டாவது முறை நான் கும்பிட அவர் இன்னொரு நண்பரை நோக்கிப் போய்விட்டார். அவர் கருப்பு கண்ணாடி போட்டிருந்ததால், என்னைப் பார்த்தாரா பார்க்கவில்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. அருகில் என் குடும்பத்தினரும் இருந்ததால், அதைத் தர்மசங்கடமாக உணர்ந்துவிடுவார்களோ எனப் பயந்து நான் வேறு பக்கம் வந்துவிட்டேன். இதுதான் நடந்தது.
வெளிப்படையா பேசுங்க: மற்றபடி சேரன் சாரை நான் கண்டுகொள்ளாமல் கடக்கிற ஆளா என்ன? இதை சாரிடம் சொல்ல முடியாமல் அமைதியாக நின்றேன். "இனி அப்படி பண்ணாதீங்க சரவணன்... கோபம், வருத்தம் எதுவா இருந்தாலும் வெளிப்படையா பேசிடுங்க" எனச் சேரன் சார் மறுபடி ஆதங்கப்பட, அதற்கு மேலும் மறைக்க மனமின்றி நடந்ததைச் சொன்னேன். நிமிடத்தில் அவர் தத்தளித்த விதம் இருக்கிறதே... "ஐயோ ரொம்ப ஸாரி சரவணன்..." எனக் கலங்கிவிட்டார்.
அவர் கிளம்பினார்: பின்னால் அணிவகுத்து நின்ற கார்கள் ஹாரன் அடிக்க, அப்போதும் நகராமல், "நான்தான் தப்பா நினைச்சிட்டேன்ல... நாம அன்பா சந்திக்க நெருங்குறப்ப சம்பந்தப்பட்டவங்க கவனிக்காம போனா அது எந்தளவுக்கு வலிக்கும்னு நானும் உணர்ந்திருக்கேன். ரொம்ப ஸாரி சரவணன்..." என்றார். நான் கும்பிட்டுச் சிரித்து, "பரவால்ல சார்..." என்றேன். என்னையும் என் குடும்பத்தினரையும் நெஞ்சு கலங்க அவர் பார்த்த பார்வை, இன்னமும் நிலைக்குத்தி நிற்கிறது. ஹாரன் சத்தம் பெரிதாக, கலங்கிய முகமாக காரை ஸ்டார்ட் செய்து அவர் கிளம்பினார்.
விழாக்களில் சந்திப்பது, பேசுவது என்பதெல்லாம் சாதாரண விஷயம்தான். ஆனால், அன்பும் பாசமும் அணுகுமுறைச் சிறப்பும் எந்தளவுக்கு முற்றிப் போயிருந்தால், அவ்வளவு பெரிய கூட்டத்தில் தனி ஒருவன் குறித்து சேரன் சார் இவ்வளவு கவலைப்பட்டிருப்பார்? இந்த ஈரமும் பேரன்பும்தானே இந்த உலகத்தை அற்புதமாக இயக்கிக் கொண்டிருக்கிறது.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கான தேர்தலில் 'நம்ம கே.பாக்யராஜ் அணி'யின் சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் சேரன் சார்.
தகுதியானவர்: திரைத்துறை சார்ந்த எந்தப் பதவிக்கும் அவர் தரமானவர்; தகுதியானவர்; தங்கமானவர். அவர் அணியில் போட்டியிடும் பட்டுக்கோட்டை பிரபாகர் சார், கவிஞர் சிநேகன், அண்ணன்கள் சமுத்திரக்கனி, பாஸ்கர் சக்தி, ஜெகன் உள்ளிட்டோரும் ஈரம் குறையாத மனிதர்கள்தான்! நல்லோர் எல்லோரும் வெல்ல சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவனாக வாழ்த்துகிறேன். ஒருவன் முகத்தைத் திருப்பிக்கொண்டு போனால்தான் என்ன என விட்டுவிடாமல், அவனைத் துரத்திப்போய் அன்பு பாராட்டும் அத்திப்பூ மனிதர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்" என குறிப்பிட்டிருக்கிறார்.
More Articles
- பிஸ்கட்டுக்கும் பிரியாணிக்கும் கையேந்தாத மக்களில் ஒருவன்.. லாரன்ஸ் பேச்சுக்கு சேரன் கொடுத்த சவுக்கடி
- என் பலமே அம்மா தான்.. தாயாரை இழந்து உடைந்துபோன இயக்குநர் சேரன்!
- முதலமைச்சர் விஜய்யை குறை சொல்வதில் என்ன நியாயம் இருக்கு.. கோவை சிறுமி விவகாரத்தில் சேரன் கருத்து
- Cheran : முதலமைச்சர் ஐயா எனக்கு ஒரு சந்தேகம்.. இயக்குநர் சேரனின் கேள்வியைப் பாருங்க!
- CM விஜய்யை விமர்சிக்காதீங்க.. தெளிவாக எடுத்துச் சொல்லும் இயக்குநர் சேரன்..
- பரம எதிரி திமுக கூட்டணி கட்சிகளுடன் இணைவது சரியா? விஜய்க்கு சேரன் கேள்வி!