சென்னை: நாடு முழுவதையும் அதிரவைத்து வரும் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தற்போது பூதாகரமாக உருவெடுத்துள்ளது. சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு இயக்குநர் வெற்றிமாறன் ஆவேசமாகப் பேசிய நிலையில், டெல்லியில் போராட்டம் கட்டுக்கடங்காமல் செல்வதால் 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் அதிரடியாக மூடப்பட்டுள்ளன!
வெற்றிமாறன் பேச்சு: சென்னை தியாகராய நகரில் நீட்டுக்கு எதிராகத் தீவிரம் அடைந்து வரும் மாணவர் போராட்டத்தில் பிரபல திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் நேரில் கலந்துகொண்டு முழு ஆதரவு தெரிவித்தார். அப்போது பேசிய அவர், இளைஞர்களுடைய இந்த எழுச்சியும் ஒற்றுமையும் எங்கள் அனைவருக்கும் பெரிய ஊக்கத்தை அளிக்கிறது. மாணவர்கள் முன்னெடுக்காத எந்தப் போராட்டமும் வெற்றி அடையாது, அதே நேரத்தில் மாணவர்கள் முன்னெடுக்கும் எந்தப் போராட்டமும் ஒருபோதும் தோல்வி அடையாது. மாணவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், நாங்கள் அனைவரும் எப்போதும் உங்களுடன் இருப்போம்.
ஆவேச பேச்சு: இந்தப் போராட்டத்தில் நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் கூடவே இருந்து ஆதரவு தெரிவிப்பதற்காகத்தான் நாங்கள் இங்கு வந்துள்ளோம். உங்கள் போராட்டத்தை வேறு யாரும் 'ஹைஜாக்' பண்ண விட்டுவிடாதீர்கள். இது மாணவர்களின் போராட்டம், கடைசி வரை மாணவர் போராட்டமாகவே இருக்கட்டும். நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்வதற்கு இந்த போராட்டம் தொடர்ந்து நடக்க வேண்டும். போராட்டம் செய்வது நமது உரிமை, போராடக்கூடாது என்று சொல்பவர்கள், மாணவர்களை அரசியல்மயமாக்கவோ அல்லது கல்வி கற்கவோ விடாதர்களாகத்தான் இருப்பார்கள் என்று ஆவேசமாக பேசினார். மத்திய அரசுக்குக் கெடு: மறுபக்கம், டெல்லியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் அல்லது அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையில் காக்ரோச் ஜனதா கட்சி மிகவும் உறுதியாக உள்ளது. மத்திய அரசுடன் நேற்று நடைபெற்ற 2-வது கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இவ்விவகாரத்தில் மத்திய அரசு இன்று தனது இறுதியான முடிவை அறிவிக்க உள்ள நிலையில், காக்ரோச் ஜனதா கட்சி தனது போராட்டத்தைக் கைவிட மறுத்துவிட்டது. தலைநகரம் ஸ்தம்பித்தது: டெல்லியில் இன்றும் நாளையும் போராட்டம் தீவிரமடையும் என உளவுத்துறை எச்சரித்துள்ளதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கப் பாதுகாப்புப் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க், ராஜீவ் சவுக், படேல் சவுக், பாலகிருஷ்ணா ஆசிரமம் மார்க், பாரகம்பா ரோடு, உச்ச நீதிமன்றம் உட்பட மிக முக்கிய 18 மெட்ரோ ரயில் நிலையங்களை மூட உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் இந்த வரலாறு காணாத போராட்டத்தால் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது.More Articles