சென்னை: இந்திய திரையுலகின் இசை வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்த பாடகி எஸ். ஜானகி அம்மாவின் மறைவு கோடிக்கணக்கான ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஏராளமான பிரபலங்களும், ரசிகர்களும் திரண்ட நிலையில், தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

Advertisement

எஸ். ஜானகி அம்மாவின் இறுதிச்சடங்குகள் குடும்பத்தினரின் மற்றும் இசை உலக ஜாம்பவான்கள் முன்னிலையில் நடைபெற்றது. அவரது உடலுக்கு கர்நாடக அரசு அரசு மரியாதை அளித்து அவருக்கு கௌரவம் சேர்த்தது. அவரை கடைசி முறையாக பார்க்கவும், அஞ்சலி செலுத்தவும் பல்வேறு தரப்பினரும் திரண்டனர். சமூக வலைதளங்களிலும் எஸ். ஜானகி அம்மாவின் பாடல்கள், அவருடனான நினைவுகள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன.

Advertisement

இந்நிலையில், அவரது தகனத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் வயதான மூதாட்டி ஒருவர், எஸ். ஜானகி அம்மாவின் தகனம் செய்யப்பட்ட சாம்பலை தனது புடவையில் பத்திரமாக கட்டி எடுத்துச் செல்கிறார். அதுமட்டுமின்றி, அந்த சாம்பலை தனது நெற்றியில் ஒற்றிக்கொண்டு, குடும்ப உறுப்பினரை வழியனுப்புவது போல எமோஷ்னலாக அன்பை வெளிப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அந்த மூதாட்டியின் முகத்தில் தெரியும் சோகம், கையில் இருக்கும் அஸ்தியை பத்திரமாக பாதுகாக்கும் விதம், நெற்றியில் வைத்து வணங்கும் தருணம் ஆகியவை அந்த வீடியோவை பார்த்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. "எஸ். ஜானகி அம்மா சாமி சார்", "எங்கள் வீட்டிலேயே ஒருவரை இழந்தது போல இருக்கிறது" என்று அவரது உணர்வுகள் வெளிப்படுவதும் அந்த வீடியோவில் தெரிகிறது.

Advertisement

ஒரு பாடகி என்ற எல்லையைத் தாண்டி, பல தலைமுறைகளின் வாழ்க்கையில் குடும்ப உறுப்பினர் போல இடம்பிடித்தவர் எஸ். ஜானகி அம்மா என்பதற்கு இந்த காட்சி மிகப்பெரிய சாட்சியாக அமைந்துள்ளது. ரசிகர்கள் பலரும், "இது வெறும் ரசிகையின் அன்பு அல்ல... தெய்வமாக நினைத்த ஒருவருக்கான இறுதி மரியாதை", "இந்த வீடியோவை பார்க்கும்போதே கண்களில் கண்ணீர் வருகிறது" என்று சமூக வலைதளங்களில் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர். மேலும் பல பாடகர்கள் அவரது உடல் தகனம் செய்யப்பட்ட இடத்திற்குச் சென்று ஜானகி அம்மாவின் பாடலைப் பாடி அவருக்கு இசை அஞ்சலியும் செலுத்தி வருகிறார்கள்.