சென்னை: 2024ஆம் ஆண்டுக்கான 72ஆவது தேசியத் திரைப்பட விருதுகள் நேற்று (ஜூலை 18ந் தேதி) அறிவிக்கப்பட்டன. இதில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தனுஷுக்கு 'சிறப்புப் பிரிவு' தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டிற்கான சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இதன் இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் இயக்கி, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த 'ராயன்' திரைப்படம் இந்த ஆண்டின் சிறந்த தமிழ் படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகளும், விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' படத்திற்கு 2 தேசிய விருதுகளும் கிடைத்துள்ளன. இதுதவிர 'மெய்யழகன்' திரைப்படத்திற்கும் விருது கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவிற்கு மொத்தம் 10 தேசிய விருது கிடைத்த போதிலும், இணையத்தில் விருதுக் குழுவிற்கு எதிராக மிகப்பெரிய அளவில் விவாதங்களும் கண்டனங்களும் எழத் தொடங்கியுள்ளன.

Advertisement

Photo Credit:

உழைப்புக்குக் கிடைக்காத அங்கீகாரம்: 2024 ஆம் ஆண்டு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த திரைப்படம் 'தங்கலான்'. இயக்குநர் பா.ரஞ்சித் கற்பனையில் ஐந்தாம் நூற்றாண்டு மற்றும் 19-ஆம் நூற்றாண்டு பின்னணியில் உருவான இந்தச் சரித்திரப் பதிவிற்காக, சியான் விக்ரம் தனது உடலை உருக்கி, மெலிந்து, அசாத்திய உடல் உழைப்பைக் கொடுத்து நடித்திருந்தார். இந்த நடிப்பிற்கு நிச்சயம் விக்ரமுக்கு தேசிய விருது கிடைக்கும் என ஒட்டுமொத்த சினிமாவே எதிர்பார்த்தது. ஆனால், தங்கலான் படத்திற்கு ஒரு விருது கூட கிடைக்காமல் போனது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது.

Advertisement

ஆடுஜீவிதம்: இதேபோலத்தான் மலையாள இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ், அமலாபால் நடிப்பில் வெளியாகி இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய திரைப்படம் 'ஆடுஜீவிதம்' . உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. உணவு, நீர், ஓய்வு எதுவுமின்றி பாலைவனத்தில் தவிக்கும் நஜீப் முகமது கதாபாத்திரத்திற்காகத் தனது எடையைக் குறைத்து, பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீர் வரவழைக்கும் அளவிற்கு உலகத்தரம் வாய்ந்த நடிப்பைப் பிருத்விராஜ் வெளிப்படுத்தியிருந்தார். இந்தப் படத்திற்கும் ஒரு விருது கூட கிடைக்கவில்லை என்பது சினிமா பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

அவங்களுக்கு தகுதி இருக்கா?: விருதுப் பட்டியல் வெளியான சில நிமிடங்களிலேயே விக்ரம் மற்றும் பிருத்விராஜ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது குமுறல்களைக் கொட்டித் தீர்த்து வருகின்றனர். தங்கலான், ஆடுஜீவிதம் படத்தின் போட்டோவை போட்டு, தங்களது வாழ்நாளின் மிகச்சிறந்த இரண்டு அசாத்திய நடிப்புகளைத் தேசிய விருதுக் குழு அடியோடு புறக்கணித்துவிட்டது என்றும், தேசிய விருதுக்குச் சரியான படத்தைத் தேர்வு செய்யும் அறிவு இந்த ஜூரி குழுவிற்கு உண்மையில் இருக்கிறதா? என்றும் ஆவேசமாகக் கேள்விகளை எழுப்பி, தங்களது கோபத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.