சென்னை: "இளைய தளபதி" என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர் விஜய், "தளபதி"யாக உயர்ந்து, இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அந்த பயணத்தை மிக நெருக்கமாக பார்த்தவர்களில் ஒருவர் நடிகர் ஸ்ரீமன். ஜனநாயகன் திரைப்படம் வெளியான நிலையில், விஜய் குறித்து ஸ்ரீமன் வெளியிட்டுள்ள உணர்ச்சிப்பூர்வமான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Advertisement

விஜயின் 69-வது மற்றும் கடைசி திரைப்படமாக வெளியான ஜனநாயகன் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. அரசியலில் முழுநேரமாக செயல்பட முடிவு செய்துள்ள விஜயின் கடைசி படம் என்பதால், படத்தை ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

இந்த படத்திலும் நடிகர் ஸ்ரீமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜயுடன் நீண்டகாலமாக திரைப் பயணத்தை ம்ட்டும் இல்லாமல் நடிகராகவும் வலம் வரும் அவர், ஜனநாயகன் வெளியான பிறகு தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.

தளபதி டூ முதலமைச்சர்: அந்த பதிவில், "இளைய தளபதியில் இருந்து தளபதியாக... அங்கிருந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக... இந்த மூன்று கட்டங்களிலும் உங்களுடன் சுமார் 14 அல்லது 15 படங்களில் இணைந்து நடித்திருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக கருதுகிறேன். என்னை எப்போதும் உங்களுக்கு நெருக்கமாக வைத்ததற்கு நன்றி. உங்கள் இதயத்தில் எனக்கும் ஒரு இடம் இருக்கிறது என்பதில் பெருமைப்படுகிறேன். நீங்கள் நம் மாநிலத்தையும், மக்களையும் சிறப்பாக பார்த்துக் கொள்வீர்கள் என்பதில் முழு நம்பிக்கை இருக்கிறது. வாழ்த்துகள் CM Garu" என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீமனின் இந்த பதிவு விஜய் ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகிறது. "இது ஒரு நடிகரின் பதிவு மட்டும் இல்லை... பல ஆண்டுகள் சேர்ந்து பயணித்த நண்பனின் மனசு பேசுற வார்த்தை", "லைஃப் டைம் மெமரி இதுதான்" என்று ரசிகர்கள் அந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

ஜன நாயகன்: விஜய் - ஸ்ரீமன் கூட்டணி தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளனர். லவ் டுடே, நிலாவே வா, பிரியமானவளே, ஷாஜகான், போக்கிரி, ஆதி, காவலன், சுறா, மாஸ்டர், வாரிசு, GOAT என பல்வேறு காலகட்டங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். தற்போது ஜனநாயகன் மூலமாக அந்த பட்டியலில் மேலும் ஒரு படம் இணைந்துள்ளது.

ஒரு நடிகராக விஜயின் வளர்ச்சியையும், பின்னர் அரசியலுக்கு வந்த பயணத்தையும் நேரில் பார்த்து, அந்த மூன்று முக்கியமான கால கட்டங்களிலும் தன்னால் பங்கேற்க முடிந்தது குறித்து ஸ்ரீமன் வெளிப்படுத்தியிருக்கும் இந்த நெகிழ்ச்சியான பதிவு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக, "இளைய தளபதி To தளபதி To TN CM" என்ற ஒரே வரியில் விஜய்யின் பல வருட பயணத்தை ஸ்ரீமன் சுருக்கமாக பதிவு செய்திருப்பது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.