சென்னை: தளபதி விஜயின் திரைப்பயணத்தில் மிகவும் உணர்வுபூர்வமான படமாக உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் ஜூலை 23-ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இது விஜயின் 69-வது படமாக மட்டுமல்ல, அவர் அரசியலுக்கு முழுமையாக களமிறங்குவதற்கு முன் நடித்த கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய போதே, ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த படங்களை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாக விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, அவரது கடைசி திரைப்படமாக உருவாகியுள்ள 'ஜனநாயகன்' தற்போது வெளியாக உள்ளது. ஆரம்பத்தில் ஜனவரி மாதமே வெளியாக வேண்டிய இந்த படம், பல்வேறு காரணங்களால் தள்ளிப்போன நிலையில், தற்போது தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு விஜயின் முதல் மற்றும் கடைசி திரைப்படமாக திரையரங்குகளை அடைகிறது என்பதும் இந்த படத்துக்கு கூடுதல் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் அதிகாலை 3 மணி, 4 மணி, 5 மணி சிறப்புக் காட்சிகளுக்காக ரசிகர்கள் ஏற்கனவே தயாராகி வருகின்றனர். உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்களும் இந்த படத்தை திருவிழாவாக கொண்டாடும் மனநிலையிலேயே இருக்கின்றனர்.
தெலுங்கில் வெளியான 'பகவந்த் கேசரி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்தில், விஜய்க்காக கதையிலும் திரைக்கதையிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை அனிருத் அமைத்துள்ள நிலையில், கே.வி.என். புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
இந்நிலையில், படம் வெளியாகும் முன்பே 'ஜனநாயகன்' மற்றொரு மிகப்பெரிய சாதனையை பதிவு செய்துள்ளது. புக் மை ஷோ தளத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் விஜய் இந்திய சினிமாவிலேயே புதிய வரலாற்றை படைத்துள்ளார். ஹாட்ரிக்: அதாவது, இதற்கு முன்பு வெளியான 'வாரிசு', 'GOAT' மற்றும் தற்போது வெளியாக உள்ள 'ஜனநாயகன்' ஆகிய மூன்று படங்களும் வெளியீட்டுக்கு முன்பே புக் மை ஷோவில் தலா 1 மில்லியனுக்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்றுள்ளன. தொடர்ந்து மூன்று படங்களுக்கு இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை விஜய் பெற்றுள்ளார். BMS: பான்-இந்தியா மார்க்கெட்டில் மிகப்பெரிய வசூல் சாதனைகளை படைத்து வரும் பல முன்னணி நடிகர்கள் இருந்தாலும், புக் மை ஷோ முன்பதிவு விற்பனையில் தொடர்ந்து மூன்று படங்களுக்கு 1 மில்லியன் டிக்கெட் விற்பனையை பதிவு செய்திருப்பது விஜயை தனித்து நிற்க வைத்துள்ளது. இதனால், சமூக வலைதளங்களில் "First Indian Actor to Achieve Hat-Trick of 1M+ BMS Pre-Sales" என்ற வாசகம் வேகமாக வைரலாகி வருகிறது. எமோஷனல் Send Off: விஜயின் திரைப்பயணத்திற்கு 'ஜனநாயகன்' ஒரு உணர்வுபூர்வமான நிறைவாக அமையுமா, இந்த முன்பதிவு வேகம் முதல் நாள் வசூலிலும் புதிய சாதனையை உருவாக்குமா என்பது நாளை முதல் தெரியவரும். ஆனால், படம் வெளியாகும் முன்பே புக் மை ஷோவில் ஹாட்ரிக் சாதனையை பதிவு செய்ததன் மூலம், இந்திய அளவில் மீண்டும் ஒரு முறை தனது ஸ்டார் பவரை விஜய் நிரூபித்திருப்பது மறுக்க முடியாத உண்மையாகியுள்ளது.More Articles