சென்னை: ரஜினிகாந்த்தை வைத்து கமல்ஹாசன் தயாரிக்கும் திரைப்படத்துக்கு தர்மன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதனை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியிருக்கும் நிலையில்; புதிய தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Advertisement

ரஜினியும், கமலும் இணைந்து ஒரே படத்தில் பணியாற்றுவது கடந்த 40 வருடங்களாக நடக்கவில்லை. எப்படியோ இப்போது ரஜினியும், கமலும் இரண்டு படங்களில் இணைந்திருக்கிறார்கள். ஒரு படத்தில் ரஜினி ஹீரோ கமல் தயாரிப்பாளர். இன்னொரு படத்தில் ரஜினியும், கமலும் சேர்ந்தே நடிக்கிறார்கள். இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கும் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க; நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதே அப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

Advertisement

Photo Credit:

ரஜினியின் தர்மன்: ரஜினிகாந்த்தை வைத்து கமல்ஹாசன் தயாரிக்கும் படத்துக்கு தர்மன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதனை டிராகன், ஓ மை கடவுளே படங்களை இயக்கிய அஷ்வத் மாரிமுத்துதான் இயக்குகிறார். அவருக்கு முன்னதாக சிபி சக்கரவர்த்தியும், சுந்தர்.சியும் இயக்குநர்களாக கமிட்டாகி சில காரணங்களால் வெளியே போய்விட்டார்கள். நீண்ட இழுபறிக்கு பிறகு அஷ்வத்தை இயக்குநராக சூப்பர் ஸ்டாரும், உலக நாயகனும் டிக் அடித்திருக்கிறார்கள்.

எப்படி இருக்கும் படம்?: இந்தப் படத்தை மிகப்பெரிய பொறுப்புணர்ச்சியுடன் அணுகியிருக்கிறார் அஷ்வத் மாரிமுத்து. படையப்பா மாதிரி மாஸாகவும், வேட்டையாடு விளையாடு மாதிரி க்ளாஸாகவும் இந்தப் படத்தை கொடுப்பேன் என்றும்; இரண்டு ஜாம்பவான்களை வைத்து படம் செய்ய வேண்டும் என நினைக்கும் பலரது சார்பில் இப்பொறுப்பினை தான் எடுத்துக்கொள்கிறேன் என்றும் அவர் கூறியிருக்கிறார். முக்கியமாக, அஷ்வத் இதற்கு முன்னர் எடுத்த இரண்டு படங்களுமே மெகா ஹிட் என்பதால் அவர் மீதும் ரஜினி ரசிகர்களுக்கு அபார நம்பிக்கை இருக்கிறது.

Advertisement

அஷ்வத்தின் பிளான்: படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன்புதான் சென்னையில் தொடங்கியது. காரிலிருந்து இறங்கி வரும் ஷாட்டை முதலில் வைத்ததாகவும்; ரஜினி தன் ஸ்டைலில் நடந்து வருவதை பார்த்து ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கிறேன் என்பதை மறந்துபோய் விசில் அடித்துவிட்டேன் என்றும் அஷ்வத் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் படத்தின் ஷூட்டிங்கிற்கு தேவையான பிளானை அவர் தெளிவாக போட்டிருக்கிறாராம். அதாவது ரஜினிக்கு வசதியாக இருக்கும் என்பதால் பெரும்பாலான ஷூட்டிங்கை சென்னையில் நடத்தவே பிளான் செய்திருக்கிறாராம்.

தேவைப்பட்டால் அங்கு: மேலும் தேவைப்படும்பட்சத்தில் ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடத்தும் முடிவிலும் இருக்கிறாராம். படத்தின் முதல் பாடலுக்கு சாண்டி மாஸ்டர் கோரியோகிராஃபி செய்கிறாராம். படத்தின் முக்கியமான ரோலை ராஷி கண்ணா ஏற்றிருப்பதாகவும்; ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார் என்றும் படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் சொல்கின்றன. இவர்கள் தவிர்த்து மீனாட்சி சௌத்ரியும் இப்படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறாராம்.