சர்கார் டி-சர்ட் வாங்கிட்டீங்களா? அமோக விற்பனையாமே!


சென்னை: சர்கார் டி-சர்ட் இப்போது பிரபலமாகி வருகிறது.

எப்போதுமே ஒரு படத்தில் ஒரு ஸ்டைல் அல்லது டிரேட் மார்க் பின்பற்றப்படுகிறது என்றால் அது சில காலத்திற்கு இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும். தில் படம் வந்தபோது முடியை ஒட்ட வெட்டிக் கொண்டது, பேரழகன் படம் பார்த்து காதோரத்தில் கோடு போட்டது, அயன் பார்த்துவிட்டு கிருதாவை பின்னோக்கி மழித்தது, காலில் கர்ச்சிப் கட்டி கர்வமாக நடந்தது, இவையெல்லாம் 90 களில் பிறந்த குழந்தைகள் செய்தவை. சிம்பு திரைக்கு வந்து ஹீரோவாக கலக்க ஆரம்பித்த காலத்தில் பலர் ஒயர்களை கைகளில் சுற்றிகொண்டு யார் வீட்லயாவது ஒயர்ல பிசிர் இருக்கா? சொல்லுங்க நான் ஒயர் தர்றேன் எனும் ரேஞ்சுக்கு நடந்தார்கள்.

இதுக்கு கொஞ்சம் பின்னோக்கி சென்று பார்த்தால், பாஷா படம் ரிலீஸ் ஆனபோது பலர் ஆட்டோ ஓட்டுனர் போன்று சட்டை போட்டு திரிந்துள்ளதாகவும், அருணாச்சலம் திரைப்படம் வந்த காலகட்டத்தில் ரஜினிக்கு முன் வழுக்கை இருந்ததைபோல் தனக்கும் வேண்டும் என்று சலூனில் ஸ்பெஷல் அப்பாய்ன்மென்ட் வாங்கி நெற்றியை ஏற்றி வழித்துக்கொண்டு பலர் கோதாவில் இறங்கி, ரசிகன் என்பதை வெளிப்படுத்தியதாக சில வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அந்த வரிசையில் சமீப காலங்களில் ட்ரெண்டாவது என்னவென்றால் ஒரு நடிகரின் திரைப்படப் பெயரை சட்டையில் ப்ரிண்ட் செய்து அண்ணனின் விழுதுகள் ரேஞ்சுக்கு பில்டப் கொடுப்பது. இந்த கலாச்சாரம் கில்லி படத்திலிருந்து துவங்கியதாக அறியப்படுகிறது. சட்டைப் பையில் ரோஜாப்பூ ப்ரிண்ட் போட்டு கொடுக்கும் தொழில்நுட்பத்தின் நீட்சியாக இதை எடுத்துக்கொள்ளலாம். அதன்பிறகு, போக்கிரி, சுறா, சச்சின் என வரிசைகட்டி விஜய் ரசிகர்களை மையப்படுத்தி இந்த வியாபாரத்தை திட்டமிட்டார்கள். அதற்கு அஜித் ரசிகர்களும் ஆதரவளித்து ஜனா, பில்லா, தீனா என சட்டைபோட்டு கிழித்தனர்.

அந்த வகையில் இப்போது சர்கார் திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதால் சர்கார் சட்டை பிரபலமாகி வருகிறது. சர்கார் என்று பிரிண்ட் செய்யப்பட்ட டி-சர்ட்டுகள், விஜய் படம் போட்டு சர்கார் பிரிண்ட் போட்ட டி-சர்ட்டுகள் பிரபலமாகி வருகின்றன.

கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவதெல்லாம் கடப்பாறையால் காது குடைவதுபோன்று கடினமாகி எல்லாவற்றுக்கும் ஆப் வந்துவிட்ட காரணத்தினால், இந்த சர்கார் சட்டையையும் நீங்கள் ஆன்லைனில் வாங்கி சட்ட செய்யாமல் அசட்டை செய்யலாம். அதற்காக பல முன்னணி ஆன்லைன் நிறுவனங்கள் கடை விரித்து விட்டன.

ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ரதாரவி, பழ கருப்பையா மற்றும் பலர் நடித்திருக்கும் சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Actor Vijay photo along with Sarkar title printed t-shirts are popular among Vijay fans.