சென்னை: பாடகி ஜானகி அம்மாவின் மறைவு மொத்த இந்திய திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது உடலுக்கு நடிகர்கள், நடிகைகள் சென்று அஞ்சலி செலுத்தியதைக் காட்டிலும் பாடகர்கள், பாடகிகள் பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மனோ, சித்ரா, சுஜாதா மோகன் உள்ளிட்ட பலரும் தேம்பித் தேம்பி அழுது அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் நெட்டிசன்கள் பலருமே ஸ்வேதா மோகன் ஏன் இறுதி அஞ்சலி செலுத்தச் செல்லவில்லை என்று இணையத்தில் கேள்வி எழுப்பினர்.

Advertisement

இசைஞானி இளையராஜாவின் இசைக் கச்சேரி லண்டனில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள பாடகர்கள், பாடகிகள் பலரும் லண்டனுக்குச் சென்று விட்டனர். இப்படியான சூழலில், ஜானகி அம்மாவின் மறைவுக்கு லண்டனில் இருந்தவர்களால் வர இயலாத சூழல். இப்படி இருக்கையில், பாடகி ஸ்வேதா மோகன் ஜானகி அம்மாவின் மறைவுச் செய்தி கேட்ட பின்னர், இசைஞானி இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளி படத்தின் முதல் பாடலான ஜானகி அம்மா பாடிய அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்ற பாடலைப் பாடினார்.

Advertisement

அந்த பாடலைப் பாடும்போது பாடலின் தொடக்கத்தில் வரும் ஹம்மிங்கை பாடும் போது, ஜானகி அம்மாவின் மறைவின் துக்கத்தால் மனமொடிந்து பாடுவதை டக்கென நிறுத்தினார் ஸ்வேதா மோகன். உடனே இளையராஜாவோ, " ஜானகி அம்மா உன்னோடு தான் இருக்கிறார்" என்று கூறி அவரை ஊக்கப்படுத்தி தொடர்ந்து பாட வைத்தார். இந்த வீடியோவையும் மேலும் சில ஜானகி அம்மா பாடிய பாடல்கள் தொடர்பான வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஸ்வேதா மோகன்.

இந்த வீடியோக்களுடன் அவர் எழுதி உள்ள கேப்ஷன் பலரையும் சோகத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. அதாவது, " ஜானகி அம்மாவின் இறுதிச் சடங்கில் நான் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று பலரும் கேட்டு வருகிறார்கள். அந்த நேரத்தில் நான் இசையமைப்பாளர் இளையராஜாவின் லண்டன் இசை நிகழ்ச்சியில் இருந்தேன். ஜானகி அம்மா மறைந்த சில மணி நேரங்களிலேயே, அவருடைய மறக்க முடியாத பாடல்களை பாடி இசை அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.

Advertisement

பாட பாட வலி: கடைசியாக அவரை நேரில் சென்று பார்க்க முடியவில்லை என்பதே எனக்கு மிகப்பெரிய வேதனை. அவர் பாடிய காலத்தால் அழியாத பாடல்களை, அந்த சோகத்தை மனதுக்குள் வைத்துக்கொண்டு மேடையில் பாடியது எவ்வளவு கஷ்டமாக இருந்தது என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஒவ்வொரு வரியையும் பாடும்போதும் அவர் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற உண்மை இன்னும் அதிகமாக மனதை வலிக்கச் செய்தது.

ஆசீர்வாதம்: என்னால் ஏன் வர முடியவில்லை என்று உண்மையாகக் கேட்டவர்களுக்காகத்தான் இந்த விளக்கத்தை சொல்கிறேன். ஜானகி அம்மாவை ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும் போது வீடியோ கால் மூலம் அவரைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதை ஏற்பாடு செய்து கொடுத்த ராமுவுக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கேன். ஜானகி அம்மாவின் மனதில் எனக்கு ஒரு தனி இடம் இருந்தது. அதுபோல என் மனதிலும் அவருக்கான இடம் என்றும் மாறாது. என்னை கிண்டலாகவும், ஏளனமாகவும் கேள்வி கேட்டவர்களுக்கும் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். இது எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான, வலிமிகுந்த நேரம். தயவுசெய்து உங்கள் வார்த்தைகளால் என்னை மேலும் காயப்படுத்தாதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement