சென்னை: ஹாலிவுட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம் இந்தியாவில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படத்தின் முன்பதிவு வசூல் ஏற்கனவே புதிய சாதனைகளை படைத்து வருகிறது. டாம் ஹாலண்ட் மீண்டும் ஸ்பைடர்மேனாக களமிறங்கும் இந்தப் படத்துக்கு இந்திய ரசிகர்கள் கொடுத்து வரும் வரவேற்பு, பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜூலை 25 இரவு 10 மணி நிலவரப்படி, பிவிஆர் ஐநாக்ஸ் மற்றும் சினிபோலிஸ் திரையரங்கு சங்கிலிகளில் மட்டும் முதல் நாள் காட்சிகளுக்காக 2.40 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. அதேபோல், நான்கு நாட்கள் கொண்ட தொடக்க வார இறுதிக்கான மொத்த முன்பதிவு 6.25 லட்சம் டிக்கெட்டுகளை எட்டியுள்ளது. இதன் மூலம் சுமார் ரூ.44 கோடி மதிப்பிலான முன்பதிவு பதிவாகியிருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படம் வெளியாக இன்னும் ஆறு நாட்கள் உள்ள நிலையில், முதல் நாள் முன்பதிவு மட்டும் 5 லட்சம் டிக்கெட்டுகளைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளைக்குள் முதல் நாள் டிக்கெட் விற்பனை 2.50 லட்சத்தை எட்டிவிடும் என்றும் கூறப்படுகிறது. தற்போதைய வேகத்தைப் பார்க்கும்போது, இந்தியாவில் ஹாலிவுட் படங்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய ஓப்பனிங்குகளில் ஒன்றாக இந்தப் படம் அமையும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
முன்பதிவு வசூலைப் பொறுத்தவரை, 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்', 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்', 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்' ஆகிய படங்களின் சாதனைகளை 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' ஏற்கனவே முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இந்தியாவில் ஹாலிவுட் படங்களின் முன்பதிவு வரலாற்றில் 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' படத்திற்கு அடுத்தபடியாக இந்தப் படம் இடம்பிடித்துள்ளது. வசூல் கணக்கு: இறுதியாக முன்பதிவு ரூ.75 கோடியைத் தாண்டும் என்றும், தொடக்க வார இறுதியில் ரூ.80 முதல் ரூ.85 கோடி வரை முன்பதிவு வசூல் பதிவாகும் என்றும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கணித்து வருகின்றன. இதனால் முதல் நாளிலேயே ரூ.50 கோடிக்கும் அதிகமான நிகர வசூலை இந்தப் படம் எட்டும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது. எதிர்பார்ப்பு: கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மார்வெல் படங்களின் வசூல் வேகம் சற்று குறைந்திருந்தது. ஆனால், டாம் ஹாலண்ட் நடிப்பில் வெளியாகும் இந்த புதிய ஸ்பைடர்மேன் படம் அந்த நிலையை மாற்றும் என்ற நம்பிக்கை திரையரங்கு உரிமையாளர்களிடமும் விநியோகஸ்தர்களிடமும் உருவாகியுள்ளது. இப்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி ஒன்றுதான். இந்தியாவில் 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' முறியடிக்குமா? என்பதுதான்.More Articles