சென்னை: நடிகர் சூர்யாவின் அடுத்த படமாக உருவாகியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், படத்தின் வியாபாரம் ஏற்கனவே கோலிவுட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் வெளியான 'கருப்பு' திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, சூர்யாவின் மார்க்கெட் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையே புதிய சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். குடும்ப உறவுகள், உணர்வுகள் மற்றும் வணிக பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு வித்தியாசமான கதாபாத்திரம் அமைந்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா தயாரித்துள்ளனர்.

Advertisement

இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில், 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பிரைமார்க் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ரூ.45 கோடி மினிமம் கேரண்டி (MG) முறையில் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சூர்யாவின் சமீபத்திய படங்களிலேயே மிகப்பெரிய தமிழக பிசினஸ்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

வசூல் பிளான்: அதுமட்டுமல்லாமல், படத்தின் பிரேக் ஈவன் மதிப்பு ரூ.110 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. அதாவது திரையரங்குகள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் லாபம் பார்க்க, உலகளவில் அந்த அளவுக்கு வசூல் செய்ய வேண்டிய சூழல் இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

கருப்பு கொடுத்த வெற்றி: சமீபத்தில் வெளியான 'கருப்பு' திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றியை பதிவு செய்தது. அந்த வெற்றிக்குப் பிறகு சூர்யாவின் அடுத்த படமான விஸ்வநாத் & சன்ஸ் மீது வர்த்தக வட்டாரத்தில் நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால்தான் படம் வெளியாகும் முன்பே தமிழ்நாடு உரிமை இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனையானதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

எதிர்பார்ப்பு: இன்னும் டிரெய்லர், பாடல்கள், புரமோஷன் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள் வரவிருக்கும் நிலையில், விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் பிசினஸ் தொடர்ந்து உயருமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 'கருப்பு' வெற்றிக்குப் பிறகு சூர்யா மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் அதிரடி காட்டுவாரா என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.