சென்னை: நடிகர் தனுஷ் தனது 43-வது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு மறக்க முடியாத பரிசை வழங்கியுள்ளார். ரசிகர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 30-க்கும் மேற்பட்டோருக்கு இலவச ஆட்டோக்கள், தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். கடந்த சில மாதங்களாக சமூக நலப் பணிகளில் அவரது ரசிகர் மன்றம் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இந்த நிகழ்வும் கவனம் பெற்றுள்ளது.
ஆனால், இந்த நலத்திட்ட உதவிகளை விட அதிகமாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருவது ஒரு பிறந்தநாள் போஸ்டர்தான். தனுஷின் புதிய படத்தை இயக்கி வரும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்த பிறந்தநாள் வாழ்த்து போஸ்டரில் "தலைவர் தனுஷ்" என்ற வார்த்தையை பயன்படுத்தியிருப்பது பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ரசிகர் மன்ற ரத்ததான முகாமில் தனுஷ் பேசிய பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்தது. "உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு உதவுங்கள்... மக்கள் மத்தியில் இருங்கள்..." என்று ரசிகர்களை நோக்கி அவர் பேசிய விதம், இது வெறும் ரசிகர் மன்ற செயல்பாடு மட்டுமல்ல, எதிர்கால அரசியல் பயணத்திற்கான அடித்தளம் அமைக்கும் முயற்சி என்ற விமர்சனங்களையும் உருவாக்கியது.
விவாதம்: இந்த நிலையில், "தலைவர் தனுஷ்" என்ற வாசகம் இடம்பெற்றிருப்பது சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஏனென்றால், தமிழ் சினிமாவில் "சூப்பர்ஸ்டார்" என்ற பட்டமும், "தலைவர்" என்ற அடையாளமும் இன்று வரை ரஜினிகாந்துடன் மட்டுமே இணைந்து பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் ரசிகர்கள் மட்டுமல்ல, தமிழ் சினிமா ரசிகர்களிடமும் "தலைவர்" என்றால் முதலில் நினைவுக்கு வருவது ரஜினிகாந்த்தான். அந்த அளவுக்கு பல தசாப்தங்களாக அந்த அடையாளம் அவருடன் ஒன்றிப்போயுள்ளது. அரசியல்: அப்படிப்பட்ட சூழலில், தனுஷை "தலைவர்" என்று குறிப்பிட்டு அதிகாரப்பூர்வமாக பிறந்தநாள் போஸ்டர் வெளியானது, சமூக வலைதளங்களில் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. ஒரு தரப்பினர், "இது இயக்குநரின் அன்பு. இதில் அரசியல் தேட வேண்டிய அவசியமில்லை" என்று கூறி வருகிறார்கள். ஆனால் மற்றொரு தரப்பினர், அரசியல் வருகை குறித்த பேச்சுகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நேரத்தில் இப்படியான பிராண்டிங் சாதாரணமாக நடக்காது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ரசிகர் மன்றத்தை சமூக நலப் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுத்துவது, மக்களோடு நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள், தற்போது "தலைவர்" என்ற அடையாளம்... இந்த மூன்றையும் ஒன்றாக இணைத்து பார்க்கும் போது, தனுஷின் எதிர்கால அரசியல் பயணம் குறித்த ஊகங்கள் மேலும் வலுப்பெற்றுள்ளன. ரஜினிக்கு மட்டுமே: அதேசமயம், "தலைவர்" என்ற அடையாளம் ரஜினிகாந்துக்கு மட்டுமே உரியது. அந்த வார்த்தையை வேறு யாருக்காவது பயன்படுத்துவது தேவையற்ற ஒப்பீடுகளையும், ரசிகர்கள் மத்தியில் பிளவையும் உருவாக்கும் என்று ரஜினி ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஒரு பிறந்தநாள் போஸ்டர், இரண்டு வார்த்தைகள், ஆனால் அதைச் சுற்றி உருவாகியிருக்கும் அரசியல் விவாதம் மிகப்பெரியது. இது வெறும் வாழ்த்து போஸ்டரா? அல்லது எதிர்கால அரசியல் பிராண்டிங்கின் முதல் படியா? என்ற கேள்விக்கான பதில், தனுஷின் அடுத்தடுத்த நகர்வுகளில்தான் இருக்கிறது.More Articles