சென்னை: ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள தி ஒடிஸி (The Odyssey) திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 17ஆம் தேதி வெளியானது. ஓபன்ஹைமர் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நோலன் இயக்கியிருக்கும் படம் என்பதாலும், ஹோமரின் புகழ்பெற்ற கிரேக்க காவியத்தை அடிப்படையாகக் கொண்ட பிரமாண்ட வரலாற்று சாகசத் திரைப்படம் என்பதாலும், இந்த படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஆரம்பம் முதலே உச்சத்தில் இருந்தது.

Advertisement

மாட் டாமன், டாம் ஹாலண்ட், ஆனி ஹாத்வே, ஜெண்டயா, ராபர்ட் பாட்டின்சன், சார்லிஸ் தெரான், லுபிடா நியாங்கோ உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்தை யுனிவர்சல் நிறுவனம் சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. லுட்விக் கோரன்சன் இசையமைத்துள்ள இந்த படம், முழுமையாக ஐமேக்ஸ் கேமராக்களில் படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

Advertisement

வசூல்: வெளியாவதற்கு முன்பே முன்பதிவு வசூலில் சாதனை படைத்த தி ஒடிஸி, தற்போது பாக்ஸ் ஆபிஸிலும் அதே வேகத்தில் பயணித்து வருகிறது. இந்தியாவில் முதல் நாளில் ரூ.17.40 கோடிகள் வசூலித்திருந்த இந்த படம், இரண்டாவது நாளில் அதைவிட அதிகமாக ரூ.22 கோடிகள் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் இரண்டு நாட்களில் மட்டும் இந்தியாவில் ரூ.39.40 கோடிகள் வசூல் செய்துள்ளதாக சாக்நிக் (Sacnilk) வெளியிட்டுள்ள ஆரம்பகட்ட பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

உலக அளவில்: இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் தி ஒடிஸி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, படம் உலகம் முழுவதும் 300 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது. வெறும் இரண்டு நாட்களில் தயாரிப்பு செலவை விட அதிக வசூலை எட்டியிருப்பது, படத்தின் மிகப்பெரிய வரவேற்பை வெளிப்படுத்துவதாக திரையுலக வட்டாரங்கள் கருதுகின்றன.

ஐமேக்ஸ்: வெளியாவதற்கு முன்பே ஐமேக்ஸ் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தது, நோலனின் முந்தைய படங்களைப் போலவே இந்த படமும் திரையரங்குகளில் பிரம்மாண்டமான அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு உருவானது. அந்த எதிர்பார்ப்பை வசூலிலும் தி ஒடிஸி தற்போது நிரூபித்து வருகிறது. வரும் வார இறுதியிலும் இதே வேகம் தொடர்ந்தால், நோலனின் திரைப்பயணத்தில் மற்றொரு வரலாற்றுச் சாதனையாக தி ஒடிஸி மாறும் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கணித்து வருகின்றன.