சென்னை: உலக சினிமா ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்த கிறிஸ்டோபர் நோலனின் தி ஓடிஸி படம் நாளை அதாவது ஜூலை 17ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. டிரெய்லர் வெளியான நாளிலிருந்தே இந்த படம் குறித்து உலகம் முழுவதும் விவாதம் நடந்து வருகிறது. ஆனால், இந்த படம் எந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது, ஒடிஸியஸ் யார், ட்ரோஜன் போர் என்றால் என்ன, அந்த மரக்குதிரை கதையின் பின்னணி என்ன என்பது பல தமிழ் ரசிகர்கள் பலரும் படம் பார்ப்பதற்கு முன்னர் தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறார்கள். நோலன் இந்த முறை வெறும் படம் எடுக்கவில்லை. உலக இலக்கிய வரலாற்றிலேயே மிகப் பெரிய காவியங்களில் ஒன்றை தனது ஸ்டைலில் படமாக எடுத்துள்ளார்.
புகழ்பெற்ற கிரேக்கத்திய கவிஞரான ஹோமர் எழுதிய இரண்டு மகத்தான காவியங்கள் தான் இலியட் மற்றும் ஒடிஸி. இந்த இரு கதைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அதாவது நமது ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் எப்படி ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதோ அதுபோல என்று வைத்துக்கொள்ளுங்கள். இலியட் ட்ரோஜன் போரின் கடைசி நாட்களைப் பேசுகிறது. ஒடிஸி அந்தப் போர் முடிந்த பிறகு ஆரம்பமாகும் ஒரு வீரனின் வாழ்க்கைப் போராட்டத்தைச் சொல்கிறது.
ட்ரோஜன் போர் எப்படி ஆரம்பமானது?: ட்ராய் நகரத்தின் இளவரசரான பாரிஸ், ஸ்பார்ட்டா நாட்டின் ராணி ஹெலனை மாயாஜால சக்திகள் மூலம் அழைத்துச் சென்ற சம்பவம்தான் உலகப் புகழ்பெற்ற ட்ரோஜன் போருக்குக் காரணம். தனது மனைவியை மீட்க கிரேக்க மன்னர்கள் அனைவரும் ஒன்று திரண்டு ட்ராய் மீது போர் தொடுத்தனர். அந்தப் போரில் ஒடிஸியஸ், அகமெம்னான், அகிலிஸ் உள்ளிட்ட பல வீரர்கள் பங்கேற்றனர். ஆனால் ட்ராய் நகரத்தின் கோட்டையை உடைக்க முடியாமல் கிரேக்கர்கள் தொடர்ந்து பத்து ஆண்டுகள் போராடினர்.
உலகையே ஏமாற்றிய மரக்குதிரை: பத்து ஆண்டுகள் போரிட்டும் வெற்றி கிடைக்காத நிலையில், ஒடிஸியஸ் ஒரு வித்தியாசமான திட்டத்தை தீட்டினார். பிரம்மாண்டமான மரக்குதிரை ஒன்றை உருவாக்கி, அதன் உள்ளே சிறந்த வீரர்களை மறைத்து வைத்தனர். கிரேக்கப் படைகள் பின்வாங்கிவிட்டதாக நினைத்த ட்ரோஜன் மக்கள் அந்தக் குதிரையை வெற்றிச் சின்னமாக நகரத்திற்குள் கொண்டு சென்றனர். நள்ளிரவில் மரக்குதிரைக்குள் இருந்த வீரர்கள் வெளியே வந்து கோட்டை கதவுகளைத் திறந்தனர். அதன் பிறகு கிரேக்கப் படைகள் நகருக்குள் நுழைந்து ட்ராயை முழுமையாக கைப்பற்றின. இந்த போர் யுத்தியை படத்தின் டிரைலரில் வைத்திருந்தார் நோலன். தியேட்டரில் டிரைலரைப் பார்க்கும்போதே பலருக்கும் ஆச்சரியமானதாக இருந்தது. ஒடிஸியஸின் உண்மையான பயணம்: போர் முடிந்து தனது சொந்த நாடான இதாகாவுக்கு திரும்ப கிளம்பிய ஒடிஸியஸின் வாழ்க்கை அங்கிருந்துதான் இன்னும் சிக்கலாகிறது. கடல் கடவுளான போஸிடானின் கோபத்தால் அவர் நேராக தனது நாட்டிற்கு செல்ல முடியவில்லை. பத்து ஆண்டுகள் நீடித்த பயணம் அவரை பல்வேறு மர்ம உலகங்களுக்கு அழைத்துச் செல்கிறது. ஒற்றைக் கண் அரக்கனுடன் மோதல்: பயணத்தின் போது போஸிடானின் மகனான பாலிபெமஸ் என்ற ஒற்றைக் கண் அரக்கனிடம் ஒடிஸியஸும் அவரது வீரர்களும் சிக்கிக் கொள்கிறார்கள். அங்கிருந்து தப்பிக்க தனது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி அந்த அரக்கனின் கண்ணைக் குத்திவிட்டு தப்புகிறார். இந்த சம்பவமே போஸிடானின் (கடல் கடவுள்) கோபத்தை இன்னும் அதிகரிக்கச் செய்கிறது. வழியெங்கும் மர்ம உலகங்கள்: ஒடிஸியஸின் பயணம் சாதாரணமானதல்ல. மனிதர்களை மயக்கும் சைரன்களின் பாடல்கள், வீரர்களை விலங்குகளாக மாற்றும் மந்திரவாதி சிர்சி, கடலில் பதுங்கியிருக்கும் சில்லா மற்றும் சாரிப்டிஸ் என்ற கொடிய அரக்கர்கள் என ஒவ்வொரு கட்டத்திலும் உயிரைப் பறிக்கும் ஆபத்துகளை அவர் எதிர்கொள்கிறார். இதில் கலிப்ஸோ என்ற தேவதையின் தீவில் அவர் ஏழு ஆண்டுகள் சிறைப்பட்டு வாழ வேண்டிய சூழலும் உருவாகிறது. ஏதெனா தேவதையின் உதவி: ஒடிஸியஸின் நேர்மையும் தைரியமும் கண்டு இரக்கம் கொண்ட அறிவுக் கடவுளான ஏதெனா, அவரை மீண்டும் சொந்த நாட்டிற்கு அழைத்துச் செல்ல பல்வேறு உதவிகளை செய்கிறார். இந்த உதவிகளால்தான் நீண்ட காலத்திற்குப் பிறகு அவர் இதாகாவை அடைகிறார். சொந்த நாட்டில் காத்திருந்தது இன்னொரு போர்: ஒடிஸியஸ் இறந்துவிட்டார் என்று நினைத்த நூற்றுக்கும் மேற்பட்ட இளவரசர்கள் அவரது அரண்மனையிலேயே தங்கி, மனைவி பெனிலோப்பியை திருமணம் செய்ய அழுத்தம் கொடுத்து வந்தனர். மறுபுறம், தனது தந்தையைத் தேடி மகன் டெலிமாகஸ் பல நாடுகளுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார். மாறுவேடத்தில்: இருபது ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த நாட்டிற்கு திரும்பிய ஒடிஸியஸை அதாவது 10 ஆண்டுகள் போர் பத்து ஆண்டுகள் சொந்த நாட்டிற்குத் திரும்பும் ஏதெனா ஒரு வயதான பிச்சைக்காரனாக மாற்றிவிடுகிறார். யாருக்கும் தனது உண்மையான அடையாளம் தெரியாமல் அரண்மனைக்குள் நுழைந்த அவர் அங்கே நடக்கும் அனைத்தையும் அமைதியாகக் கவனிக்கிறார். வில்லை வளைத்த ஒரே மனிதன்: இளவரசர்களில் யாரை திருமணம் செய்வது என்று முடிவு செய்ய பெனிலோப்பி ஒரு போட்டி அறிவிக்கிறார். ஒடிஸியஸின் புகழ்பெற்ற வில்லை வளைத்து, பன்னிரண்டு கோடாரிகளின் துளைகள் வழியாக அம்பு செலுத்துபவரையே திருமணம் செய்வதாக கூறுகிறார். அந்த வில்லை யாராலும் வளைக்க முடியவில்லை. இறுதியில் பிச்சைக்காரன் வேடத்தில் இருந்த ஒடிஸியஸ் அதை எளிதாக வளைத்து அம்பை சரியாக ஏய்துகிறார். மீண்டும் அரியணை ஏறிய ஒடிஸியஸ்: அதன் பிறகு தனது உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்திய ஒடிஸியஸ், மகன் டெலிமாகஸ் மற்றும் விசுவாசமான ஆதரவாளர்களின் உதவியுடன் அரண்மனையை ஆக்கிரமித்திருந்த அனைவரையும் வீழ்த்துகிறார். பின்னர் தனது மனைவியுடன் மீண்டும் இணைந்து, நாட்டில் அமைதியை நிலைநாட்டி மீண்டும் மன்னனாக அரியணை ஏறுகிறார் என்பதுதான் மொத்தக் கதை. கிறிஸ்டோபர் நோலன் இந்த மிக நீண்ட காவியத்தை தனது திரைமொழியில் எப்படி சொல்லப் போகிறார் என்பதுதான் தற்போது உலகம் முழுவதும் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. இதை அனைத்தையும் ஒரே படத்தில் காட்டவுள்ளாரா? இல்லை பாகங்களாக பிரித்துள்ளாரா என்பது எல்லாம் நாளை தெரிந்துவிடும். டிரெய்லர் மட்டுமே இத்தனை விவாதத்தை கிளப்பியிருக்கும் நிலையில், படம் வெளியாகும் போது உலக சினிமாவில் மீண்டும் ஒரு நோலன் மாயாஜாலம் நிகழுமா என்ற கேள்விதான் ரசிகர்களிடையே அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நோலன் சம்பவக்காரன் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.More Articles