முப்பரிமாணப் படங்கள் - பெரும்போக்காக மாறமுடியாத முயற்சி


- கவிஞர் மகுடேசுவரன்

எண்பதுகளின் திரையுலகில் ஏற்படுத்தப்பட்ட பரபரப்புகளில் ஒன்று முப்பரிமாணத் திரைப்படம் எனப்படும் 3டி திரைப்படங்களாகும். திரைப்படம் என்னும் அறிவியல் கலை காலப்போக்கில் பல்வேறு மேம்பாடுகளைப் பெற்றிருந்தபோதும் கறுப்பு வெள்ளைப் படங்கள் பன்னிறப் படங்களானதுதான் தலையாய மாற்றம். பன்னிறப் படங்கள் வழக்கானதும் படத்தின் சதுரச் சட்டகம் செவ்வகச் சட்டகமாய் மாற்றம் பெற்றது மற்றொன்று. பிறகு பல்திக்கொலிகளைப் புகுத்த முடிந்தது வேறொரு வியப்பினைத் தந்தது. தற்காலத்தில் படச்சுருள்கள் தேவையில்லா நிலை ஏற்பட்டு எண்ணியல் பதிவுக்கருவிகள் மற்றும் படமோட்டு முறைகளுக்கு மாறியதைப் பெரும் பாய்ச்சல் என்றே சொல்ல வேண்டும். இன்றைக்கு ஒரு திரைப்படமானது படம் ஓட்டுபவர் இல்லாமலேயே திரையில் மிளிர்கிறது. எட்டுத் திக்குகளிலிருந்தும் ஒலிப்புகள் பிரிந்து விளையாடுகின்றன. திரையில் பதியும் நிறங்கள் அழுத்தமும் துல்லியமுமாய் விளங்குகின்றன. இவ்வாறு ஒவ்வொரு காலத்திலும் தன்னளவில் புதுப்புது மாற்றங்களை ஏற்று ஏற்று இந்நிலைக்கு வந்திருக்கிறது இன்றைய திரைக்கலை.

அம்மாற்றங்கள் ஒவ்வொன்றும் அவை புகுத்தப்பட்ட காலத்தில் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது என்பது வியப்புக்குறியே. நாடோடி மன்னன் திரைப்படத்தின் கடைசிப் பகுதி கறுப்பு வெள்ளையினின்று நீங்கி நிறப்படமாகக் காட்டப்பட்டதுகூட அன்றைய பரபரப்பாக இருந்தது. “மானைத் தேடி மச்சான் வரப் போறான் வரப் போறான்” என்ற பாடல் தொடங்கியதும் படம் கறுப்பு வெள்ளையிலிருந்து நீங்கி செங்கற்பொடி நிறத்தில் திரையில் தெரியத் தொடங்கும். அப்போது எப்படியெல்லாம் சீழ்க்கையொலி அரங்கை அதிர வைத்திருக்கும் என்பதைக் கற்பனை செய்யவே இனிக்கிறது. அப்படிப்பட்ட புதுமைகளை எல்லாம் தேடிப் புகுத்தி நாடோடி மன்னனை உருவாக்கினார் எம்ஜிஆர். படிப்படியான மாற்றத்தினால் பன்னிறப் படங்கள் நிலைத்த போக்கானதும் அடுத்து என்ன என்ற கேள்வி எழுந்தபோது வந்த தொழில்நுட்பம்தான் முப்பரிமாணத் திரைப்படங்கள்.

என்னதான் திரைப்படங்களை பெரிதுபடுத்திப் பேசினாலும் அவை அனைத்தும் நம் விழித்திரையின் பார்வைப் புலப்பாடுகளை முன்வைத்து உருவான காட்சி அறிவியல்தான். நம் பார்வைக்கு நீள அகலங்களைக் கணித்துக் காணும் ஆற்றல் உண்டு. அவ்வாறே அதனால் ஆழத்தினையும் உணர முடியும். எதிரில் நிற்பவரின் மேல்கீழையும் இடம்வலத்தையும் காணும் கண்பார்வை அவர்க்குப் பின்னேயுள்ளவற்றையும் தொலைவுணர்ந்து காணும் வல்லமையுடையது. ஆனால், திரைப்படத்தில் நாம் காண்பது ஒரு காட்சிப்பொருளின் நீள அகலத்தைத்தானே தவிர, அதன் பின்னுள்ளவற்றின் தொலைவையும் ஆழத்தையும் உணர்வதில்லை. அந்த வாய்ப்பினைப் பயன்படுத்தித்தான் ஒரு பொருளை அருகிலோ தொலைவிலோ வைத்து உருப்பெருக்கிக் காட்டிவிடமுடிகிறது. அந்நிலையில்தான் முப்பரிமாணத் திரைப்படம் என்னும் புதிய தொழில்நுட்பம் இங்கே வந்திறங்கியது.

திரைப்படத்தில் காணும் காட்சிகள் ஒளியும் ஒலியும் என்னும் இரு புலப்பாடுகளோடு தொடர்புடையவை. காண முடியும். கேட்க முடியும். ஐந்து புலப்பாடுகளில் இவ்விரண்டின் வாய்ப்புகளைப் பயன்படுத்தியே அது வாழ்கிறது. சுவைத்தல், முகர்தல், தீண்டுதல் என்னும் பிற மூவகைப் புலப்பாடுகளுக்கு அங்கே வேலையில்லை. முகர்தல் என்னும் புலப்பாட்டுக்கு ஏதேனும் செய்ய இயலுமா என்றுகூட எண்ணினார்கள். எடுத்துக்காட்டாக திரையில் மல்லிகைப் பூ வருகையில் பார்ப்போர் திரளிடையே மல்லிகை மணத்தைப் பரவச் செய்தல். அவ்வாறு செய்தால் அத்திரையில் காணும் காட்சியின் பங்கேற்பு மனநிலைக்கே செல்ல முடியும். நல்நோக்கில் ஏற்புடையதுதான் என்றாலும் அதன் இன்னொரு புறத்தில் கேடுகள் பரவலாம் என்பதால் கைவிட்டார்கள் என்று நினைக்கிறேன். ஆகவே, ஒளியிலும் ஒலியிலும் தொடர்ந்து புதுமைகள் செய்வதுதான் உகந்தது என்ற முடிவுக்கு வந்திருப்பார்கள். அவ்வழியில் கண்டடையப்பட்ட வழிமுறைதான் முப்பரிமாணம்.

மைடியர் குட்டிச்சாத்தான் திரைப்படம் வெளிவந்தபோது ஊரெங்கும் ஒரே பேச்சு. அரங்கிற்குள் நுழைவுச் சீட்டுடன் கறுப்புக் கண்ணாடி ஒன்றைத் தந்துவிடுவார்கள். அதனை அணிந்துகொண்டுதான் படம் பார்க்க வேண்டும். கண்ணாடியைக் கழற்றிவிட்டால் படம் கலங்கலாகத்தான் தெரியும். படத்தில் யாரும் எப்பொருளும் பார்வையாளரை நோக்கி வந்தால் திரையிலிருந்து வெளிப்பட்டு மூக்குநுனி வரைக்கும் வந்து நிற்பதைப்போல் தெரியும். அந்த நுட்பத்தை அடிக்கடி பயன்படுத்தாமல் எங்கேனும் ஒரு காட்சியில் ஏதேனும் ஒரு சுடுவுக்குத்தான் பயன்படுத்தினார்கள். மீறிப்போனால் பத்திருபது சுடுவுகளில் காணப்போகின்ற நேர்நிலைக் காட்சிக்காகக் காண்கின்ற படம் முழுமைக்கும் கறுப்புக் கண்ணாடி அணிந்து பார்க்க வேண்டிய நிலைமை.

மைடியர் குட்டிச்சாத்தான் திரைப்படம் வெளியானபோது அதனை நான் காண முடியவில்லை. “ரோஜாப்பூ நீட்டினா நம்மகிட்டயே நீட்டறாப்பல இருக்குது…” என்று படம்பார்த்தவர்கள் கூறினார்கள். ஆனால், அப்படம் நூறு நாள்கள் ஓடியது நினைவிருக்கிறது. தந்தித்தாளின் எண்பதாம் நாள் அறிவிப்பு விளம்பரத்தைப் பார்த்தேன். நான் முதன்முதலாகப் பார்த்த முப்பரிமாணப்படம் அன்னை பூமி என்ற படம்தான். விஜயகாந்தும் இராதாரவியும் சேர்ந்து நடித்திருந்தனர். எண்ணிப் பார்த்தால் திரையுலகில் நிகழ்ந்த பல்வேறு புது முயற்சிகளுக்குத் தளராமல் தம்மை ஒப்புக்கொடுத்தவர் விஜயகாந்த் என்பதனை ஏற்க வேண்டியிருக்கும். படத்தின் முப்பரிமாணக் காட்சியில் விஜயகாந்தும் இராதாரவியும் பங்குபெறும் ஒரு வாட்சண்டை இடம்பெற்றிருந்தது. பார்வையாளரை நோக்கி வாளை நீட்டினால் அது நம்மைக் குத்த வந்ததைப் போலவே இருந்தது. திடுக்கிட்ட நாங்கள் தலையொதுங்கிக்கொண்டோம். ஆனால், வழக்கமான படங்களைப்போல் படத்தின் ஒளியடர்த்தி எனக்குப் போதவில்லை. கறுப்பு வெள்ளைக் கண்ணாடியால் நாம் அந்த ஒளியடர்த்தியை இழக்க நேர்ந்தது. அண்மையில் வெளியான 'அம்புலி’ என்ற படத்தையும் பார்த்தேன். முப்பரிமாணப் படங்கள் என்னைப் பெரிதாய் ஈர்க்கவில்லை என்றே சொல்வேன். எதனைக் காட்டினாலும் கண்ணுக்கும் காதுக்கும் இடையூறில்லாமல் இருக்க வேண்டும்.

நான் பங்கேற்ற திரைப்படம் ஒன்றினை முப்பரிமாணத்தில் வெளியிடலாமா என்று நிறுவனத் தரப்பு எண்ணியது. இருநூறு படிகள் வெளியிட்டால் அரங்கொன்றுக்கு ஐந்நூறு கண்ணாடிகள் வாங்க வேண்டும். அவற்றைச் சீனத்திலிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டுமாம். கண்ணாடி ஒன்றுக்கு அன்றைய விலைப்படி அறுபது உரூபாயோ என்னவோ சொன்னார்கள். ஆக, ஒரு இலட்சம் கண்ணாடிகள் வாங்க வேண்டுமென்றால் அறுபது இலட்சம் உரூபாய் கண்ணாடிக்கே தேவைப்படும். அதனை இறக்குமதி செய்வதிலும் பல கட்டுப்பாடுகள் இருந்தன. காட்சியொன்றுக்கு இரண்டு மூன்று விழுக்காடு கண்ணாடிகள் உடையக்கூடும். அதற்கு மாற்றினையும் வைத்திருக்க வேண்டும். பற்பல தடைகளை மீறி அவற்றை வாங்கி அரங்குதோறும் சேர்ப்பித்து ஒவ்வொரு காட்சிக்கும் அவற்றைத் தந்து பெற்று என… நினைக்கவே தலையைச் சுற்றியது. அதனால் பெரிதாய்க் கும்பிட்டு அம்முயற்சியைக் கைவிட்டார்கள். முப்பரிமாணப் படங்களும் பெரும்போக்காக எங்கும் மாறவில்லை.


Have a great day!
Read more...

English Summary

Cinema article about three dimension movies in tamil