சென்னை: FIFA 2026இல் காலிறுதி ஆட்டங்கள் விறுவிறுப்பாக சென்று கொண்டு உள்ளது. அடுத்த வாரத்துடன் உலகக்கோப்பை கால்பந்து நிறைவடையவுள்ளது. இப்படி இருக்கையில், இந்த உலகக்கோப்பை காலப்ந்து தொடங்கியதில் இருந்து பாண்டிச்சேரியில் இருக்கும் ஒருவர் இந்திய அளவில் ஏன் உலக அளவில் பிரபலமடைந்தார் என்றால் அது டீசர்ட்டுகள் விற்பனை செய்யும், லட்சுமி அம்மாள் தான். அதாவது அவர் கால்பந்து போட்டிகளில் விளையாடும் நட்சத்திர வீரர்களின் மாடல் ஜெர்சியை விற்பனை செய்து பிரபலமடைந்துள்ளார்.

Advertisement

அதாவது, அவர் சர்வதேச வீரர்களின் பெயர்கள் இடம் பெற்ற ஜெர்சியை கையில் வைத்துக் கொண்டு, பெயரின் ஸ்பெல்லிங்கை சரியாக வாசித்துவிட்டு, பெயரைத் தவறாக சொல்வதுதான் இவரது ஸ்பெஷலே. அதாவது பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர் ஜூனியரின் ஸ்பெல்லிங்கை படித்துவிட்டு, நீர் மோர் என்று கூறுவார். அதேபோல், அர்ஜெண்டினாவின் மெஸ்ஸியை லெஸ்ஸி என்பார். பிரான்ஸின் எம்பாப்பேவை மாப்ளே என்பார். குரோஷியாவின் மோட்ரிச்சை மோடி என்பார். ஸ்பெயின் அணியின் லமினே யம்மாலை லட்சுமி அம்மாள் என்பார். நார்வேவின் ஹாலண்டை ஆனந்த் என்பார். இப்படி ஒவ்வொரு நட்சத்திர வீரருக்கும் தனது ஸ்டைலில் ஒரு பெயரைச் சொல்லி அழைத்து வருவதுடன், அவர்கள் பெயர் பொறித்த டீ சர்ட்டுகளை விற்பனை செய்து வருகிறார்.

Advertisement

அவரது இப்படியான வீடியோக்களுக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அதுவும் பிரபலங்கள் வரை பலரும் இவருக்கு ரசிகர்களாவும் அவரது கடைக்கு வாடிக்கையாளர்களாகவும் மாறிப் போனார்கள் என்று கூறும் அளவுக்கு அவரது வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் பிரபல பாடகரான கிரிஷ், லட்சுமி அம்மாளின் கடைக்குச் சென்று, தனது அன்பை பகிர்ந்து கொண்டதுடன், அவரது கடையில் சில டீ சர்ட்டுகளை வாங்கவும் செய்தார். அதேபோல், கிரிஷ் மிகப்பெரிய பாடகர் என்று தெரிந்ததுமே, லட்சுமி அம்மாள் அவரது காலில் விழுந்தார். உடனே கொஞ்சமும் யோசிக்காத கிரிஷ், அவரது காலில் விழுந்து நீங்கள் வயதில் மூத்தவர்கள் அம்மா என்று கூறுகிறார். இவர்களின் இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இவரது கடைக்கு பலரும் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து எல்லாம் வந்து கால்பந்து வீரர்களின் பெயர் அச்சிடப்பட்ட டீசர்ட்களை வாங்கிச் செல்கிறார்கள்.