சென்னை: டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்த இட்லி கடை, பராசக்தி உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அந்த 2 படங்களையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கி வெளியிட்ட நிலையில், இன்பநிதிக்கு பெரிய லாபம் கிடைக்கவில்லை என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய இதயம் முரளி படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இன்று வெளியிட்டுள்ளது.

Advertisement

அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், மாளவிகா மோகனன், ராம்கி, பகத் ஃபாசில், நட்டி நட்ராஜ், ஜோனிதா காந்தி, நிஹாரிகா, தமன், பரிதாபங்கள் சுதாகர், டிராவிட், ரக்‌ஷன், சின்னி ஜெயந்த் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Advertisement

கடந்த வாரம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்ட விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி 2 திரைப்படம் வெற்றிப் பெற்ற நிலையில், படத்தின் ஹீரோவுக்கு காரும், இயக்குநருக்கு தங்க செயினையும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வெற்றி விழாவில் வழங்கினார். அதே போன்ற வெற்றி கொண்டாட்டங்கள் எல்லாம் இதயம் முரளி படத்துக்கும் நடக்குமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

இதயம் முரளி வெளியிட தடையில்லை: பராசக்தி படத்தை இயக்கிய சுதா கொங்கரா தனக்கு 8 கோடி ரூபாய் சம்பள பாக்கி இன்னும் தரவில்லை என்றும் ஆகாஷ் பாஸ்கரன் பணத்தை தர வேண்டும் என்றும் சம்பள பாக்கி தராமல் இதயம் முரளி படத்தை வெளியிடக் கூடாது என வழக்கு தொடர்ந்தார். ஆனால், இதயம் முரளி படத்தை இன்று வெளியிட தடை விதிக்க முடியாது என்றும் சம்பள பாக்கி பிரச்னையை மத்தியஸ்தர் வைத்து பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என நீதிமன்றம் அறிவித்த நிலையில், தடையின்றி படம் வெளியாகி ரசிகர்கள் பார்வைக்கு கிடைத்து விட்டது.

Advertisement

கட்டா குஸ்தி 2 வெற்றி: ரெட் ஜெயன்ட் மூவிஸ் இனிமேல் படத்தையே ரிலீஸ் பண்ண முடியாது என விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சவால் விட்ட நேரம் தொடர்ந்து படங்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்து வருகிறது. கடந்த வாரம் வெளியான கட்டா குஸ்தி 2 திரைப்படம் வெளியாகி 25 கோடி வரை வசூல் செய்து போட்ட பணத்திற்கு மேல் எடுத்து விட்டோம் என வெற்றியை கொண்டாடி விட்டனர். கென் கருணாஸ் யூத், தாய் கிழவி அளவுக்கு வசூல் வரவில்லை என்றாலும், முதலுக்கு மோசமில்லாமல் லாபம் கிடைத்துள்ளது.

Advertisement

இதயம் முரளி ஹிட் அடிக்குமா?: இந்நிலையில், இந்த வாரம் அதர்வா நடிப்பில் வெளியாகி உள்ள இதயம் முரளி திரைப்படம் காதலர்களையும் இளைஞர்களையும் தியேட்டர்களுக்கு யூத் படம் வரவழைத்த மேஜிக்கை செய்தால் சனி மற்றும் ஞாயிறு படம் பிக்கப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், விமர்சன ரீதியாக படம் பெரிதாக கைகொடுக்கவில்லை என்பதால் வசூல் எந்தளவுக்கு வருகிறது என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும். சுமார் 40 கோடி பட்ஜெட்டில் இதயம் முரளி உருவாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், 50 கோடி அளவுக்கு வசூல் செய்தால் தான் வெற்றியடையும் என்கின்றனர்.