சென்னை: யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் உருவான பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இயக்குநர் இளன் ஹீரோவாக உருவெடுத்துள்ள பியார் பிரேமா கல்யாணம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்புடன் அட்டகாசமான ப்ரோமோ வெளியாகி உள்ளது.

Advertisement

பியார் பிரேமா காதல் படத்துக்குப் பிறகு மீண்டும் பிக் பாஸ் பிரபலமான கவினை வைத்து 'ஸ்டார்' படத்தை இளன் இயக்கினார். எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை ஸ்டார் பெறவில்லை என்றாலும் கவினுக்கு இன்று வரை நல்ல வரவேற்பை பெற்றத் திரைப்படமாகவே மாறியது.

Advertisement

இந்நிலையில், குடும்பஸ்தன் பட நடிகை சான்வீ மேக்னா உடன் இணைந்து இளன் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் விரைவில் வெளியாக காத்திருக்கிறது.

ஹீரோவான ஸ்டார் இயக்குநர்: இயக்குநர் இளன், 'பியார் பிரேமா கல்யாணம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ரொமான்டிக் குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படத்தில் சான்வி மேக்னா கதாநாயகியாக நடித்துள்ளார். பியார் பிரேமா காதல், ஸ்டார் படங்களை போல இந்த படமும் ரசிகர்களையும் குறிப்பாக இளைஞர்களை கவரும் என தெரிகிறது.

குடும்பஸ்தன் ஹீரோயின்: சமூக வலைதளங்களில் பிரபலமான இன்ஃப்ளூயன்சர் 'பவி' என்ற கதாபாத்திரத்தில் சான்வீ மேக்னா நடிக்கிறார். திருமணத்திற்குப் பிறகும் அவர் தனது பெற்றோர் வீட்டை விட்டுச் செல்ல மறுக்கிறார். இதனால், வழக்கத்திற்கு மாறாக அவரது கணவரான இளன், மனைவியின் வீட்டிற்கே குடியேறுகிறார். இதன் பின்னர் தொடங்கும் குடும்ப கலாட்டாக்கள், கலாச்சார மோதல்கள், உறவுகளின் சிக்கல்கள் மற்றும் உணர்வுபூர்வமான தருணங்கள் என சிரிப்பும் சிந்தனையும் கலந்த பயணமாக இப்படம் நகர்கிறது. இறுதியில், "சந்தோஷமாக வாழ்வதற்கான விதிகளை மற்றவர்கள் தீர்மானிக்க வேண்டியதில்லை" என்பதை இப்படம் அழகாக எடுத்துரைக்கக் காத்திருக்கிறது.

Advertisement

நட்சத்திரப் பட்டாளம்: இப்படத்தில் இளன், சான்வீ மேக்னா ஆகியோருடன் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன், டீப்ஸ் சைரஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களின் எதார்த்தமான நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் நேரடி ரிலீஸ்: பிரியங்கா மோகன் நடித்த "'மேட் இன் கொரியா' (Made in Korea) திரைப்படத்திற்குக் கிடைத்த சிறப்பான வரவேற்பைத் தொடர்ந்து, ஸ்ரீநிதி சாகர் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் (Rise East Entertainment) குழுவுடன் இணைந்து உருவாகியுள்ள இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அடுத்த மாதம் வெளியாகப் போகிறது.

Advertisement

தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் கூறுகையில்: "'மேட் இன் கொரியா' திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் கிடைத்த வரவேற்பு, உண்மையான தமிழ் கதைகளும் உலகளாவிய ரசிகர்களை சென்றடைய முடியும் என்பதை நிரூபித்தது. அதுபோன்ற இதயப்பூர்வமான, நகைச்சுவை நிறைந்த மற்றும் அனைவரும் தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடிய ஒரு கதையைத் தேடிக் கொண்டிருந்தபோது, 'பியார் பிரேமா கல்யாணம்' எங்களை உடனே கவர்ந்தது. நவீன உறவுகளின் சவால்களை, தமிழ் குடும்ப விழுமியங்களுடன் இணைத்துச் சொல்லும் இந்தப் படம் முழுமையான குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக இருக்கும். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் சார்பில், இந்தப் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் மூலம் ஆகஸ்ட் 21 முதல் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்." என்றார்.

Advertisement

யுவன் சங்கர் ராஜாவின் இசை: இந்த படத்திற்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா, தனது மனதை வருடும் இசையின் மூலம் காதல், குடும்பம், தனித்துவம் மற்றும் வாழ்க்கையின் மகிழ்ச்சியை மேலும் அழகாக உணர வைக்கிறார். திருமணம் முடிந்த பிறகுதான் உண்மையான ஆச்சரியங்கள் தொடங்குகின்றன என்பதை நகைச்சுவையுடனும், மனதைத் தொடும் தருணங்களுடனும் சொல்ல வரும் 'பியார் பிரேமா கல்யாணம்', ஆகஸ்ட் 21 முதல் நெட்ஃப்ளிக்ஸில் உலகம் முழுவதும் வெளியாகிறது.