சென்னை: தமிழ் ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற வெப் சீரிஸ்களில் ஒன்றான ஹார்ட்பீட் சீசன் 3 ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ள தேதியை, அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ள நிலையில், அந்த ப்ரோமோ தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
"Two Paths. One Heartbeat. A New Beginning" என்ற கேப்ஷனுடன் வெளியான ப்ரோமோவில், வரும் ஜூலை 30-ம் தேதி முதல் ஹார்ட்பீட் சீசன் 3 ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் இந்த சீசனுக்காக காத்திருந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இன்னும் சொல்லப்போனால் ஹார்ட்பீட் சீரிஸின் மையக் கதாபாத்திரமான ரீனா குறித்து பேசத் தொடங்கிவிட்டார்கள்.
மருத்துவமனையை மையமாக வைத்து உருவான இந்த தொடரின் முதல் இரண்டு சீசன்களும் காதல், நட்பு, குடும்ப உறவுகள், மருத்துவர்களின் வாழ்க்கை, உணர்வுப்பூர்வமான தருணங்கள் என பல விஷயங்களை ஒன்றாக கலந்து ரசிகர்களை கவர்ந்திருந்தது. குறிப்பாக ஒவ்வொரு எபிசோடும் அடுத்த எபிசோடை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியதால், மூன்றாவது சீசன் எப்போது வரும் என்ற கேள்வியை ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வந்தனர். அந்த காத்திருப்புக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய ப்ரோமோவில் பழைய கதாபாத்திரங்களுடன் சில புதிய திருப்பங்களும் காத்திருக்கின்றன என்பதை படக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. "Two Paths.. One Heartbeat" என்ற வரியே இந்த சீசனில் உறவுகளுக்குள் புதிய மாற்றங்கள் வரப்போகிறது என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. இதற்கிடையில், தொடரில் நடித்த முக்கிய நடிகர்களில் ஒருவர் இனிமேல் இடம்பெற மாட்டார் என்ற தகவலும் கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்தது. ஆனால் தற்போது வெளியான ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள், முக்கியமான கதாபாத்திரங்கள் மீண்டும் இடம் பெற்றிருப்பதை கவனித்து, அந்த குழப்பத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல் இரண்டு சீசன்களுக்கு கிடைத்த வரவேற்பை போலவே, இந்த முறையும் ஹார்ட்பீட் 3 ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பது ஜூலை 30-ம் தேதிக்குப் பிறகுதான் தெரியவரும். ஆனால் ப்ரோமோவுக்கு கிடைத்து வரும் வரவேற்பை பார்த்தால், ஹார்ட்பீட் ரசிகர்கள் கவுண்டவுனை ஏற்கனவே தொடங்கிவிட்டார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.More Articles