சென்னை: ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி உள்ள படமான தி ஓடிஸி வரும் 17ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தியாவில் மட்டும் 16 ஆம் தேதியே பீரிமியர் காட்சிகள் திரையிடப்படவுள்ளது. அண்மையில் இந்தியாவுக்கு வந்த தி ஓடிஸி படக்குழு படத்தின் புரோமோசன் வேலைகளை சிறப்பாக செய்து விட்டு திரும்பியுள்ளனர். படக்குழு இங்கு வந்தபோது மொத்த படத்தையும் திரையிட்டனர், இதில் இந்தியாவில் படத்தின் டிஸ்ட்ரிபியூட்டர்கள், திரையுலகத்தினர், பத்திரிகையாளர்கள் என குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே அந்த திரையிடலில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் படம் பார்த்த பலரும் தங்களது விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் பத்திரிகையின் அனுபமா சோப்ரா தனது எக்ஸ் பக்கத்தில், " தி ஓடிஸி பிரமிக்க வைக்கும் அனுபவத்தை கொடுக்கும். கிறிஸ்டோபர் நோலன் மிகவும் சிறப்பான காட்சிகளை எல்லாம் எமோஷனல் காட்சிகளுடன் இணைத்து படமாக்கி உள்ளார். படம் பார்த்து நான் இவ்வளவு அழுவேன் என்று நினைக்கவேயில்லை. கடவுள்கள், தேவதைகள், மந்திரவாதிகள் மற்றும் விலங்குகள் உள்ளிட்டவற்றை கொண்ட 3000 ஆண்டுகள் பழமையான கதை. ஆனால் சமகாலத்திற்கும் படம் பொருத்தமானதாக உள்ளது. படத்தை மீண்டும் பார்க்க அவலுடன் இருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
டி2 டெலிகிராப் செய்தி நிறுவனத்தின் பிரியங்கா ராய் தனது எக்ஸ் பக்கத்தில், " கிறிஸ்டோபர் நோலனின் பிரமாண்டமும், மனதை உலுக்கும் ஒளிப்பதிவும், விறுவிறுப்பான பின்னணி இசை, கொஞ்சம் கூட பிசிறு தட்டாத நடிப்பு என மூன்று மணி நேரமும் தி ஓடிஸி படத்தில் நான் மூழ்கிவிட்டேன். லட்சியம் நிறைந்த ஒரு உணர்ச்சிப்பூர்வமான கதை தான் தி ஓடிஸி" என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் கொலாய்டர் செய்தி நிறுவனத்தின் ஆசிரியரான ஸ்டீவன் வெயின்ட்ராப் படம் குறித்து, " கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிஸி' ஒரு அபாரமான படமாக உள்ளது. இந்தப் படம் என்னை மிகவும் பிரமிக்க வைத்துவிட்டது. குறை சொல்ல முடியாத அளவுக்கான நடிப்பில் தொடங்கி நோலன் அமானுஷ்யத்தை கையாண்ட விதம் வரை எல்லாமே கச்சிதமாக இருக்கிறது. முடிந்தால், இந்த படத்தை பாருங்கள். படத்திற்கு பலரும் பாசிட்டிவான விமர்சனங்களைக் கொடுத்து வருவதால் மொத்த படக்குழுவும் மிகப்பெரிய நம்பிக்கையிலும் தெம்பிலும் இருக்கிறார்கள். படம் சர்வதேச அளவில் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம் என்று பலரும் பதிவிட்டு வருகிறார்கள். இந்தியாவில் ஐமேக்ஸ் ஸ்கீரின்களில் படத்தின் புக்கிங் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஐமேக்ஸ் 70mm ஸ்கீரினில் பார்த்தால் அது ஒரு பிரமிக்க வைக்கும் அனுபவத்தைக் கட்டாயம் கொடுக்கும். ஆனால் படத்தை எங்கு பார்த்தாலும் சிறப்பாக இருக்கும், ஆனால் IMAX 70mm தான் சிறந்த தேர்வு என்று நான் சொல்வேன்" என்று பதிவிட்டுள்ளார்.More Articles