twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே - 2

    By Shankar
    |

    - கவிஞர் முத்துலிங்கம்

    திரைப்படப் பாடலாசிரியர்
    மேனாள் அரசவைக் கவிஞர்

    சிவகங்கை அரசர் உயர்நிலைப பள்ளியில் பள்ளி இறுதிவகுப்பு வரை பயின்றேன்.
    படிக்கின்ற காலத்திலேயே யாப்பிலக்கணத்தை வழுவறக் கற்று கவிதைகள் எழுதத் தொடங்கினேன்.

    நான் பத்தாம் வகுப்புப் படிக்கும்போது என் முதல் கவிதையை தனது 'இலக்கியம்' என்ற கவிதை ஏட்டில் வெளியிட்டு என்னைக் கவிஞனென்று முதன்முதல் அறிமுகப்படுத்தியவர் உவமைக் கவிஞர் சுரதாதான். "முகிலே முகிலே கருத்த முகிலே மாமழை பெழியும் மாண்புடை முகிலே'' என்று தொடங்கும் நேரிசை ஆசிரியப்பாதான் நான் எழுதிய முதல் கவிதை.

    Aanada Thenkatru Thaaluttuthe 2

    அந்நாளில் கண்ணதாசன் தென்றல் பத்திரிகையில் வெண்பாப் போட்டி நடத்தியத்தைப் போல் சுரதா, இலக்கியம் என்ற பத்திரிகையில் குறள் வெண்பாப் போட்டி நடத்தினார். அந்தக் குறள் வெண்பாப் போட்டிக்கான கேள்வி இதுதான்.

    பறக்கும் நாவற் பழமெது கூறுக?

    நான் எழுதினேன்.

    "திறக்கின்ற தேன்மலரைத் தேடிவரும் வண்டே
    பறக்கின்ற நாவற் பழம்'' இது குறள்வெண்பா.

    இப்படி என் கவிதை ஆற்றலைப் படிக்கின்ற காலத்திலேயே வளர்த்துக் கொண்டேன். படிக்கின்ற காலத்தில் நான் எழுதிய கவிதைகளை 'வெண்ணிலா' என்ற பெயரில் படிப்பு முடிந்தபிறகு புத்தகமாகக் கொண்டுவந்தேன். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்தான் அதற்கு முன்னுரை கொடுத்தார். 1960ல் இப்புத்தகம் வெளிவந்தது. அப்போது எனக்கு வயது பதினெட்டு.

    Aanada Thenkatru Thaaluttuthe 2

    1958ல் நாடோடி மன்னன் படம் வெளிவந்த நேரத்தில் அந்தப் படத்தைப் பற்றி கவிஞர் சுரதா வெண்பாப் போட்டி ஒன்றை நடத்தினார். 'கனிப் பந்து' என்ற சொல் அதில் வரவேண்டும் என்று கட்டளை இட்டிருந்தார். நானும் ஒரு வெண்பா அனுப்பினேன்.

    "நாடோடி மன்னன் போல் நல்ல திரைப்படமும்
    ஓடோடி வாரா உயர்தமிழில் மூடா கேள்
    உண்ண இனிக்கும் கனிப்பந்து நற்படமோ
    எண்ண இனிக்கும் எழில்''

    பத்திரிகையில் இந்த வெண்பா வெளிவந்ததும் நண்பர்கள் எனக்குத் திரைப்பட ஆசையை மூட்டினர். நாடோடி மன்னனைப் பற்றி நீ எழுதியதை எம்.ஜி.ஆர். பார்த்திருப்பார். சுரதாவிடம் சொல்லி எம்.ஜி.ஆரை அறிமுகப்படுத்திக் கொண்டால் நீயும் படத்திற்குப் பாடல் எழுதலாம் என்ற ஆசையை என்னுள் விதைத்தனர்.

    என்னைப் போல் வெண்பா எழுதிய மற்றவர்களும் இதுபோல்தானே நினைத்திருப்பார்கள் என்பதை நானும் நினைத்துப் பார்க்கவில்லை. நண்பர்களும் நினைத்துப் பார்க்கவில்லை. அறிந்தும் அறியாத வயதல்லவா?

    Aanada Thenkatru Thaaluttuthe 2

    படத்திற்குப் பாடல் எழுதுவது அவ்வளவு சுலபமல்ல என்பது அவர்களுக்கும் தெரியவில்லை, எனக்கும் அப்போது புரியவில்லை. அந்த ஆசையில் சென்னைக்கு ஓடி வந்து இங்கு எதுவும் புரியாததால் மறுநாளே ஊருக்குப் போய்விட்டேன்.

    நடிகர் திலகம் சிவாஜி, பானுமதி நடித்த அம்பிகாபதி படம் சிவகங்கையில் வெளியானது. ஒருமுறை அந்தப் படத்தைப் பார்த்த எனக்கு அதில் வரும் இனிமையான பாடல்களுக்காகவே திரும்பத் திரும்பப் பார்க்கும் எண்ணம் ஏற்பட்டது. அப்படிப் பத்துமுறை பார்த்துப் பரவசம் அடைந்தேன்.

    அதற்குமுன் எம்.ஜி.ஆர். நடித்த படங்களைத் தவிர வேறு படங்களைப் பலமுறை பார்க்கும் விருப்பம் ஏற்பட்டதில்லை. ஆனால் அம்பிகாபதி படத்தைப் பாடலுக்காகவும் வீரபாண்டியக் கட்டப்பொம்மன் படத்தை சிவாஜியின் நடிப்பிற்காகவும், வசனத்திற்காகவும் பலமுறை பார்த்தேன்.

    இப்போது வருகிற பல படங்கள் ஒருமுறை கூட முழுதாகப் பார்க்கும் தகுதிகள் இல்லாமல் இருக்கின்றன. அன்றைக்குப் படங்களும் நன்றாக இருந்தன. பாடல்களும் படிப்பினை ஊட்டக் கூடியவையாக இருந்தன.

    அம்பிகாபதி படம்தான் திரைப்படப் பாடல்கள் எழுத வேண்டும் என்று எண்ணத்தை என் மனதில் நெய்யூற்றி வளர்த்தது.

    இத்தகைய எண்ணம் தொடர்கதையானதால் பள்ளி இறுதித் தேர்வில் (எஸ்.எஸ்.எல்.சி) வெற்றி வாய்பை இழந்தேன். அதனால் அக்டோபர் தேர்வு எழுதுவதற்கு மதுரைக்குச் சென்றேன். மறுநாள் தேர்வு, முதல்நாள் இரவு ஒரு பாடல் என் காதில் ஒலித்தது.

    "கண்களின் வெண்ணிலவே உல்லாசக் காதல் தரும் மதுவே'' என்ற மதுரமான பாடல். அந்நாளில் என்னை மயக்கிய பாடல்களில் அதுவும் ஒன்று.
    விசாரித்த போது அங்கிருந்தவர்கள் இது டி.ஆர். மகாலிங்கமும் பானுமதியும் பாடிய பாடல் என்றும், கம்பதாசன் இயற்றிய இப்பாடல் மணிமேகலை என்ற படத்தில் இடம் பெறுகிறது என்றும், இன்றைக்கே இப்படம் கடைசியென்றும் கூறினார்கள்.
    அதனால் எப்படியும் இன்று படத்தைப் பார்த்து விடுவது என்று தீர்மானித்து மதுரை சிந்தாமணி திரையரங்கில் இரவுக் காட்சியைக் கண்டுகளித்தேன்.
    இந்த நினைவிலே இருந்த எனக்கு மறுநாள் எழுதவேண்டிய தேர்வு பற்றிய அக்கறையா வரும்? அதனால் அக்டோபர் தேர்விலும் தோல்வியடைந்தேன்.

    மறுபடியும் ஓர் இலையுதிர் காலத்திற்குப் பிறகு அக்டோபர்க் கோட்டையை முற்றுகையிட்டு வெற்றித் தேவதைக்கு மாலை சூட்டினேன்.

    அதன்பிறகு தமிழ் வித்துவான் வகுப்பிற்குப் படித்து அதையும் முழுமையாக முடிக்காமல் இடையிலே நிறுத்திவிட்டு உழவுத் தொழிலைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

    பல்லாண்டு இடைவெளிக்குப் பிறகு சென்னைப் பட்டினம் என் திருப்பாதங்களை ஏந்தும் பெருமை பெற்றது. பல்வேறு இன்னல்களைச் சந்தித்த பிறகு முரசொலி நாளேட்டில் துணையாசிரியர் குழுவில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது.

    ஏழாண்டுகள் என் எழுத்துத் திறனை முரசொலி சுவீகாரம் எடுத்துக் கொண்டது. அதுதான் சென்னையில் எனக்குத் தங்கும்வீடாகவும் தாய் வீடாகவும் இருந்தது.
    இங்கு பணியாற்றும்போதுதான் திரைப்படக்கதை வசனகர்த்தா பாலமுருகன் அவர்களின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. என்ன ஆனாலும் ஆகட்டும் திரைப்படத்திற்குப் பாடல் எழுதாமல் ஊர் திரும்புவதில்லை என்ற வைராக்கியத்துடன் ஆறாண்டுகள் இதற்காக முயற்சி செய்தேன். பாலமுருகனைத் தவிர வேறும் யாரையும் இதற்காகச் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு ஏற்படவில்லை.

    ஊரில் இருந்து வரும்போது ஒரு நண்பர் கதாசிரியர் டி.என். பாலு அவர்களுக்குக் கடிதம் கொடுத்திருந்தார். அவரிடம் பழகிய பிறகுதான் தெரிந்தது அவருக்கும் உண்மைக்கும் உள்ள தூரம் சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் என்பது. அதைப் புரிந்து கொண்டு ஒதுங்கிவிட்டேன்.

    இலக்கிய உலகில் என் கவிதைப் பூக்கள் மலர்வதற்கு என் சிந்தனை மரத்திற்கு நீர்வார்த்த மழை மேகம் முரசொலி. அப்போதுதான் பல கவியரங்கங்களில் நான் பங்குபெறும் வாய்ப்பையும் பெற்றேன். அதில் கலைஞர் தலைமையில் நடைபெற்ற அண்ணா கவியரங்கம் குறிப்பிடத்தக்கது. அவர் கவியரங்கத்திற்குத் தலைமை தாங்கிய பிறகுதான் கவியரங்கத்திற்குப் பெரும் வரவேற்பும் எழுச்சியும் தமிழ்நாட்டில் ஏற்பட்டது.

    கவியரங்கில் கலைஞர் என்னை ஒவ்வொரு முறையும் அறிமுகப்படுத்தும்போது,
    "என் வீடகத்து மாறன் முரசொலியில்
    ஏடெடுத்து எழுதுகின்ற இளம்புலவர் முத்துலிங்கம்
    பாட வருகின்றார்
    தேனாகப் பாடு தம்பி
    இருக்கின்றோம் நாங்கள் தும்பி''

    என்று அறிமுகப்படுத்துவார். அந்தப் பாராட்டு என்னால் அப்போது மறக்க முடியாத ஒன்றாக இருந்தது.

    (இன்னும் தவழும்...)

    English summary
    Second episode of Poet Muthulingam's Aandanda Thenkatru Thaalattuthe series.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X