twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே - 6

    By Shankar
    |

    - கவிஞர் முத்துலிங்கம்

    திரைப்படப் பாடலாசிரியர்
    மேனாள் அரசவைக் கவிஞர்

    இந்தப் படத்தில் (உழைக்கும் கரங்கள்) இன்னொரு காட்சிக்காக ஒரு பாடல் எழுதினேன். வள்ளி திருமணம் நாடகத்தில், வள்ளி குருவிகளை விரட்டுதல் போல் பாடல் வருமல்லவா அதைப் போல ஒரு பாடல்.

    Aanadha Thenkaatru Thaalattuthe -6

    "கன்னி நானொரு பூந்தோட்டம்
    காவல் காப்பது மாந்தோட்டம்
    வண்ணப் பறவை கிளிக்கூட்டம் - என்
    வம்புக்கு வந்தால் திண்டாட்டம்
    கனியிருக்குது காயிருக்குது கிளியிருக்குது முன்னாலே
    கவணிருக்குது கவணுக்குள்ளே கல்லிருக்குது கைமேலே
    கானம் பாடும் குருவியெல்லாம் கவனம் வைக்குது என்மேலே
    கண்ணைப் பார்த்து அம்பு என்று பறக்குதம்மா விண்மேலே"

    Aanadha Thenkaatru Thaalattuthe -6

    இதைப் போல இன்னொரு சரணம் வரும்.

    இப்பாடலை எல்.ஆர். ஈஸ்வரி பாட ஒலிப்பதிவும் ஆகிவிட்டது. ஆனால் எம்.ஜி.ஆர். இப்பாடலைக் கேட்டுவிட்டு ஆயலோட்டுவது போல் வருகின்ற இப்பாடலில் பொதுக் கருத்துக்கள் எதுவும் வரவில்லை. ஆகவே வேறு டியூன் போட்டு வேறு பாடலை எழுதுங்கள் என்று அவரே சில கருத்துக்களை எழுதி எந்தெந்த வகையில் வரிசைப்படி வரவேண்டும் என்றும் அவர் கைப்படவே எழுதிக் கொடுத்திருந்தார்.

    அதன்பிறகு நான் எழுதி அவர் ஒப்புதல் பெற்ற பிறகு ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல்தான் படத்தில் இடம் பெற்றது. நடிகை லதா பாடுவதுபோல் வரும் அந்தப் பாடல் இதுதான்.

    "பழத் தோட்டம் என் தோட்டம்
    பறவைக்கிங்கே கொண்டாட்டம்

    கவணெடுத்தா திண்டாட்டம்
    கன்னி நானொரு அம்பாட்டம்

    கனிதேடும் கிளியினமே
    கதை சொல்லும் குயிலினமே
    அடுத்தவரின் பொருள் மீது
    ஆசை வைக்கக் கூடாது

    வேல் சிரிக்குது கண்களிலே
    கவண் இருக்குது கைகளில
    பிழை செய்பவர் மீதினிலே
    கல் எறிவேன் குருவிகளே

    Aanadha Thenkaatru Thaalattuthe -6

    அதிகாரம் வரும்போது
    தவறாத மனம் வேண்டும்
    தலைக்கனங்கள் கொண்டாலே
    தான் வீழும் நிலைதோன்றும்

    தினம் உழைப்புகள் பொதுவுடைமை
    நம் உடலிது தனியுடைமை
    நல்ல ஆளெனப் பேரெடுத்தல் - அது
    அவரவர் குணநிலமை..."

    இந்தப் பாடலை வாணிஜெயராம் பாடினார். இதில் "கனிதேடும் குயிலினமே கதை சொல்லும் கிளியினமே" என்றொரு வரி வரும். 'குயில் என்ன கனிகளையா தின்னும்? கனிதேடும் கிளியினமே' என்று மாற்று என்று இயக்குநர் சங்கர் கூறினார்.

    Aanadha Thenkaatru Thaalattuthe -6

    உடனே நான், 'பலபேர் குயில் கனிதின்னாது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அது தவறு. உ.வே. சாமிநாத ஐயரின் ஆசிரியரான திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு மாம்பழம் என்றால் மிகவும் பிடிக்கும். அதுபோல் குயிலுக்கும் மாங்கனி என்றால் மிகவும் பிடிக்கும். குயில் விரும்பி உண்ணும் கனிகள் மாங்கனியும், நெல்லிக்கனியும்தான். பறவைகளின் உணவுப் பழக்கம் என்ற நூலில் கூட இது குறிப்பிடப்பட்டிருக்கிறது,' என்றேன்.

    'கனிகள் இல்லாத நேரத்தில் எதைத் தின்னும்' என்று மடக்கினார்.

    'மாங்கொழுந்தைத் தின்னும்' என்றேன். அவர் மலர்ச்சியை முகத்தில் காட்டினார்.

    இப்படியெல்லாம் கேட்டால் இவன் என்ன பதில் சொல்வான் என்பதை அறிந்து கொள்ள சில நேரத்தில் இப்படிக் கேள்விக் கொக்கியைப் போட்டு இழுக்கப் பார்ப்பார். சாமர்த்தியமாகப் பதிலுரைத்தால் தட்டிக் கொடுப்பார். இல்லையென்றால் நீ லாயக்கில்லை என்று பட்டென்று சொல்லிவிடுவார். நான் எழுதிப் பிரபலமான பாடல்களில் ஒன்றிரண்டு பாடல்களுக்கு இவரே முதலடியை எடுத்துக் கொடுத்திருக்கிறார். நல்ல தமிழார்வம் உள்ள இயக்குநர்.

    Aanadha Thenkaatru Thaalattuthe -6

    பாடல்களுக்கான காட்சியைப் படமாக்குவதில் சிறப்புக்குரிய இயக்குநர்களில் கே. சங்கர் குறிப்பிடத்தக்கவர். சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் மறைந்துவிட்டார்.
    இவர் இயக்கும் படங்களில் பாடல்கள் எழுதுவதென்றால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். வேடிக்கை விளையாட்டாகப் பேசிக் கொண்டே எங்களிடம் வேலை வாங்கிவிடுவார்.

    இவர் இயக்கிய பல படங்களுக்கு நான் பாடல் எழுதியிருக்கிறேன். அதில் எம்.ஜி.ஆர் நடித்த 'இன்று போல் என்றும் வாழ்க' என்றொரு படம். அதில் இரண்டு பாடல்கள் எழுதினேன்.

    நாகரிகம் என்ற பெயரில் பண்பாட்டைச் சிதைத்துக் கொண்டிருக்கிற ஒரு கூட்டம். அந்தக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பாடுவதுபோல ஒரு காட்சி.

    "பாதை மாறிப் போனவரே
    பயணம் எங்கே சொல்லுங்கள்"

    என்றொரு பல்லவி எழுதி அதற்கு டியூன் பண்ணினோம். எம்.எஸ்.விசுவநாதனைப் பார்க்க வந்த டைரக்டர் ஸ்ரீதரிடம் காட்சியைச்சொல்லி இந்தப் பல்லவியைச் சொல்லி பாடிக் காட்டினார் எம்.எஸ்.விசுவநாதன். காட்சிக்குப் பொருத்தமாக இருக்கிறது என்று பாராட்டினார் அவர்.

    அதன்பின் வேறு இரண்டு பல்லவிகள் எழுதி டியூன் போட்டு எம்.ஜி.ஆரிடம் காட்டினோம். "பாதை மாறிப் போனவரே' என்று சொல்லக்கூடாது. அது அறச்சொல். நான் பாடுவதில் அப்படிப்பட்ட வார்த்தை வரக்கூடாது. கண்ணதாசன் அறச் சொல் விழாமல் எழுதுவார். சோகப் பாடலில் கூட அமங்கலமான வார்த்தை அவரிடம் வராது. அதுபோல் நீ எழுத வேண்டும். இதில் இன்னொரு பல்லவி நன்றாக இருக்கிறது. ஆனால் அது எனக்கு நிறைவாக இல்லை. வேறு எழுது," என்றார்.

    மறுநாள் வேறு சில பல்லவிகள் எழுதி டியூன் போட்டோம். அதில் ஒன்றை மிகவும் நன்றாக இருக்கிறது என்று தேர்ந்தெடுத்தார்.

    அது என்ன?

    (இன்னும் தவழும்...)

    English summary
    6th episode of Poet Muthulingam's Aanandha Thenkaatru Thaalattuthe series
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X