For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே -4

  By Shankar
  |

  -கவிஞர் முத்துலிங்கம்

  திரைப்படப் பாடலாசிரியர்
  மேனாள் அரசவைக் கவிஞர்

  ஒருநாள் கதாசிரியர் பாலமுருகன் அவர்களிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது.

  டைரக்டர் மாதவனுக்குச் சொந்தமான அருண்பிரசாத் மூவிஸ் சார்பில் 'பொண்ணுக்குத் தங்கமனசு'' என்றொரு படம் எடுக்கிறார்கள். அதற்குப் பாடல் எழுத வேண்டும் என்றார்.

  இதைக் கேட்டதும் எனக்கு மகிழ்ச்சி கரைபுரண்டோடவில்லை. காரணம் இதற்கு முன் இவர் இப்படிக் கூறி நான் பாடல் எழுதி பாடல் ஒலிப்பதிவாகாமலே நின்றுவிட்டது. அவர் கதை வசனம் எழுதிய 'நிலவே நீ சாட்சி' என்ற படத்திற்கு ஓர் காட்சியைச் சொல்லி அதற்குப் பாடல் எழுதச் சொன்னார்.

  'காவேரி நதிக்கும் கரையுண்டு நம் காதலுக்கும் ஒரு கதையுண்டு'' என்ற பல்லவியை எழுதிக் காட்டினேன். நன்றாக இருக்கிறது. முழுப் பாடலையும் நீங்களே ஒரு சந்தத்தில் எழுதிவிடுங்கள் என்றார், எழுதினேன். அந்தப் பாடலை இயக்குநர் பி. மாதவன் அவர்களிடம் காட்ட நமது படத்தில் கண்ணதாசன்தானே எப்போதும் எழுதுவார். புதுக்கவிஞரை எப்படி அறிமுகப்படுத்துவது என்று மறுத்துவிட்டார்.

  அதன்பிறகு 'பட்டிக்காடா பட்டணமா'' என்ற படத்திற்கு ஒரு காட்சியைச் சொல்லி எழுதச் சொன்னார். அது சிவாஜி பாடும் பாடல் என்றார்.

  'ஊருசெழிக்க வேணும் இந்த
  உலகம் தழைக்க வேணும்
  மாரியம்மா தாயே உனக்கு
  மனசிரங்க வேணும்'

  என்ற பாடலை எழுதினேன். இந்தப் பாடலுக்கும் அதே கதிதான். அதனால் பாலமுருகன் வார்த்தை எனக்குப் பரவசம் ஊட்டவில்லை. ஐயமே ஏற்பட்டது.
  எந்தவிதச் சலனமும் இல்லாமல் நான் நிற்பதைப் பார்த்து இந்தப் படத்தில் நீங்கள் நிச்சயம் எழுதுகிறீர்கள். உங்கள் பாடல் இல்லாமல் இப்படம் வெளிவராது என்று உறுதிபடக் கூறினார்.

  Aanandha Thenkaatru Thaalattuthe 4

  கங்கை, காவிரி, வைகை இம்மூன்று நதிகளுக்குள் யார் உயர்ந்தவர் என்பதில் சண்டை வருவது போலவும் உழவன் அவர்களை அமைதிப்படுத்தி ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும் ஓர் பாடல் எழுதி வாருங்கள் என்றார்.

  நான் எழுதிச் சென்றேன். பாடலைப் பார்த்த ஜி கே வெங்கடேஷ், பாடல் நன்றாக இருக்கிறது. ஆனால் எல்லாம் ஒரே தாளத்தில் இருக்கிறது. மூன்று நான்குபேர் பாடுவதாக வருவதால் மெட்டுக்கள் போட்டு அதற்கு எழுதினால்தான் கேட்க எடுப்பாக இருக்கும். ஆகவே மெட்டுப் போடுகிறோம். அதற்குப் பாடல் எழுதுங்கள் என்றார்.

  Aanandha Thenkaatru Thaalattuthe 4

  இரண்டு நாட்கள் ஆகியும் பொருத்தமான மெட்டுக்கள் போடவில்லையே என்று டைரக்டர் மாதவன் இசையமைப்பாளரிடம் குறைபட்டுக் கொண்டார். உடனே ஜி கே வெங்கடேஷ், என் உதவியாளர் நிறைய மெட்டுக்கள் வைத்திருக்கிறார். அவரைப் பாடச் சொல்கிறேன். அந்த மெட்டு உங்களுக்குப் பிடித்திருந்தால் வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

  அந்த உதவியாளர் பாடிக் காட்டினார். நன்றாக இருக்கிறது.. இந்த மெட்டுக்கே எழுதுங்கள் என்றார். அப்படி எழுதிய என் முதல் பாடல்,

  'தஞ்சா வூருச் சீமையிலே கண்ணு
  தாவிவந்தேன் பொன்னியம்மா
  பஞ்சம் தீரப் பூமியிலே நான்
  பாடிவந்த கன்னியம்மா...' என்று தொடங்கும்.

  என் பாட்டுக்கு மெட்டுக் கொடுத்த அந்த உதவியாளர் யார் என்றால் அவர்தான் உலகப்புகழ் பெற்ற இன்றைய இசைஞானி இளையராஜா. ஆனால் அந்தப் படத்தில் அவர் பெயர் வராது. இளையராஜாவும், கங்கை அமரனும் எனக்கு ஏற்கெனவே பழக்கமான நண்பர்கள். அதனால் நான் தங்கியிருந்த அறைக்கே வந்து அந்த மெட்டுக்களைப் பாடிக் காண்பித்து எழுத வைத்தார்கள்.

  இந்தப் பாடலைப் பாடியவர்கள் எஸ். ஜானகி, சசிரேகா, பூரணி, சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர். நான் எழுதிய முதல் பாடலே மெட்டுக்கு எழுதியதுதான்.
  ஆக இளையராஜா இசையில் முதன்முதல் சினிமாவுக்குப் பாடல் எழுதியவன் என்ற பெருமை எனக்கு உண்டு. அல்லது என்னுடைய பாடலுக்குத்தான் அவர் முதன்முதல் இசையமைத்தார் என்றும் சொல்லலாம்.

  எனது பல்லாண்டுக்காலக் கனவு பாலமுருகனால் நிறைவேறியது. அந்தப் பாடலை அந்தக் காலகட்டத்தில் மதுரை ஸ்பெஷல் நாடகக் குழுவினரும் கரகாட்டக்காரர்களும் பாடிப் பாடலுக்கு விளம்பரம் கொடுத்தார்கள்.
  இது எனக்கு மட்டும் முதற்படம் அல்ல. நடிகர் விஜயகுமார், டைரக்டர் தேவராஜ் மோகன் ஆகியோருக்கும் இதுதான் முதல்படம். நடிகர் சிவகுமார் கதாநாயகனாக நடித்த முதல்படமும் இதுதான். அதற்குமுன் துணைக் கதாநாயகனாகத்தான் நடித்து வந்தார். இந்தப் படம் வெளிந்த ஆண்டு 1973.

  இந்தப் பாடலைப் பாராட்டி நூற்றுக்கணக்கான கடிதங்கள் அலை ஓசை நாளிதழுக்கு வந்தன. அதைக்கண்ட அந்தப் பத்திரிகை நிறுவனரும் சென்னை மாநகரின் முன்னாள் மேயரும், வழக்கறிஞருமான வேலூர் நாராயணன் தனது பத்திரிகையில் பணியாற்றும் ஒருவர் இத்தனைப் பேர் பாராட்டத்தக்க பாடலை சினிமாவில் எழுதியிருக்கிறாரே என்று திரைப்படக் கலைஞர்கள் ஜெனிமி கணேசன், நகைச்சுவை நடிகர் கே.ஏ. தங்கவேலு குணச்சித்திர நடிகர் எஸ்.வி. சுப்பையா, ஆர்.எஸ். மனோகர், ஏ.வி.எம். ராஜன் போன்ற பல கலைஞர்களையும் அந்தப் படத்தில் பங்கு பெற்ற கலைஞர்களையும் அழைத்து சென்னை உட்லண்ட்ஸ் ஓட்டலில் தன் சொந்தச் செலவில் எனக்குப் பாராட்டு விழா நடத்தினார்.

  இத்தகைய உயர்ந்த குணம் எந்தப் பத்திரிகை அதிபர்களிடம் இன்றைக்கு இருக்கிறது?

  இப்படி என்னைப் பலர் பாராட்டிய நேரத்தில் அன்றைய ஆளுங்கட்சியைச் சேர்ந்த மேலிடத்திற்கு வேண்டியவர்கள் எனக்குப் பாடல் எழுத வாய்ப்பளித்த பாலமுருகனையும், மாதவனையும் மிரட்டினார்களாம். இதைப் பாலமுருகனே வருத்தத்துடன் கூறினார். காரணம் நான் முரசொலியிலிருந்து வெளியேறி அண்ணா தி.மு.க.வில் சேர்ந்து பொதுக்கூட்டங்களில் பேசிக் கொண்டிருந்ததுதான்!

  (இன்னும் தவழும்...)

  English summary
  The fourth chapter of Poet Muthulingam's Aanandha Thenkaatru Thaalattuthe series.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X