For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே - 5

  By Shankar
  |

  -கவிஞர் முத்துலிங்கம்

  திரைப்படப் பாடலாசிரியர்
  மேனாள் அரசவைக் கவிஞர்

  ஒரு படத்தில் நடித்த நடிகர் பெயரை மறந்து போனாலும் அதில் வருகின்ற வசனம் மறந்து போனாலும் அந்தப் படத்தின் பெயர் கூட நமக்கு மறந்து போய்விட்டாலும் பன்னெடுங்காலம் மனதை விட்டு மறையாமல் நிற்பது அந்தப் படத்தில் வருகின்ற நல்ல பாடல்கள்தான். அதனால் பாடலுக்கு எம்.ஜி.ஆர். மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்.

  Aanandha Thenkaatru Thaalattuthe 5

  எம்.ஜி.ஆர். படங்களில் முதலில் பாடல் எழுத அழைக்கப்பட்ட படம், 'நினைத்ததை முடிப்பவன்.' இயக்குநர் ப நீலகண்டன் அழைத்து வரச்சொன்னார் என்று அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் பணியாற்றிய ஒரு நண்பர் வந்து அழைத்தார். அப்போது எனக்கு அம்மை போட்டிருந்தது. அதனால் செல்ல முடியவில்லை.
  நான் எழுத வேண்டியப் பாடலை பல கவிஞர்களை எழுதவைத்துச் சரியில்லாமல் கடைசியில் அண்ணன் மருதகாசி எழுதினார். 'கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்...' என்பதுதான் அந்தப் பாடல்.

  எம்.ஜி.ஆர். படத்திற்கு நான் முதலில் பாடல் எழுதிய படம் 'உழைக்கும் கரங்கள்.' அந்தப் படத்தின் டைரக்டர் கே. சங்கர். பாடல் எழுத வேண்டிய காட்சியை எனக்கு விளக்கினார்.

  ஆடற் கலையரசி ஒருத்தி ஒரு உத்தமனைக் காதலிக்கிறாள். அதை அவள் அவனிடம் சொல்லவில்லை. ஒருநாள் சொல்ல நினைத்தபோது அவன் வேறொரு பெண்ணுக்கு மாலையிட்டு அவளிடம் வாழ்த்துப் பெற வருகிறான். இதுதான் காட்சி. இதற்குப் பல்லவி எழுதச் சொன்னார்.

  Aanandha Thenkaatru Thaalattuthe 5

  எப்போதும் எம்.ஜி.ஆர். படத்திற்குப் பல்லவிகள் மட்டும் எழுதித்தான் மெட்டமைப்பது வழக்கம். சரணத்திற்கு மட்டும் மெட்டுப் போட்டு அதற்குப் பாட்டெழுதுவோம். சில நேரத்தில் பல்லவி உட்பட எல்லாமே மெட்டுக்குத்தான் எழுதவேண்டியிருக்கும். அதனால் எம்.ஜி.ஆர். படத்திற்கு எழுதுகிறோமென்றால் எதற்கும் தயாராயிருக்க வேண்டும்.

  இயக்குநர் சங்கர் கூறியதற்கிணங்க அந்தக் காட்சிக்கு நான்கு பல்லவிகள் எழுதினேன். நான்கும் இசையமைப்பாளர் அண்ணன் எம்.எஸ்.விசுவநாதன் முதல் தாயரிப்பாளர் இயக்குநர் வரை அனைவருக்கும் பிடித்திருந்தது. 'புதிய பாடலாசிரியர் எழுதுவது போல் இல்லை. அனுபவப்பட்டவர் போலல்லவா எழுதுகிறீர்கள்' என்று எல்லோரும் பாராட்டினார்கள்.

  நான் பாடல் எழுதிக் கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆரிடம் இருந்து ஒரு தொலைபேசி வந்தது. கோவை செழியனின் கம்பெனியான கே.சி.பிலிம்ஸ் மேலாளர் சீனிவாசன் என்பவர் எம்.எஸ். விசுவநாதனிடம் தொலைபேசியைக் கொடுத்து 'சின்னவர் பேசுகிறார் பேசுங்கள்' என்றார். நான் எம்.எஸ்.வி. பக்கத்தில் இருந்ததால் எம்.ஜி.ஆர். பேசுவது எனக்கு நன்றாகக் கேட்டது. 'முத்துலிங்கம் எப்படி எழுதுகிறார்?' என்று கேட்டார் எம்.ஜி.ஆர். அதற்கு அண்ணன் எம்.எஸ்.வி. 'மீட்டரும் சரியாக இருக்கிறது மேட்டரும் சரியாக இருக்கிறது' என்றார். உடனே 'மகிழ்ச்சி மகிழ்ச்சி' என்று எம்.ஜி.ஆர். தொலைபேசியை வைத்துவிட்டார்.

  Aanandha Thenkaatru Thaalattuthe 5

  நான்கு பல்லவிகளும் நன்றாக இருந்தாலும் ஏதேனும் ஒரு பல்லவிதானே வைக்க வேண்டும் என்பதற்காக,

  "ஆண்டவனின் சந்நிதியில்
  அன்றாடம் தேடிவந்தேன்
  தேடிவந்து பார்க்கையிலே - ஸ்ரீ
  தேவியுடன் அவனிருந்தான்..."
  என்ற பல்லவி இக்காட்சிக்குப் பொருத்தமாக இருக்கிறது. இதையே வைத்துக் கொள்ளலாம் என்று விசுவநாதன் அண்ணன் கூறினார்.

  ஆனால் தயாரிப்பாளர் கோவை செழியனுக்கும் அவரைப் பார்க்க வந்த மருத்துவக் கல்லூரி மாணவியர் சிலருக்கும்,

  "கந்தனுக்கு மாலையிட்டாள்
  கானகத்து வள்ளிமயில்
  கல்யாணக் கோலத்திலே
  கவிதை சொன்னாள் காதல்குயில்"

  என்ற பல்லவி பிடித்திருந்தது. ஆகவே இதையே ஒலிப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.

  நான் அந்தக் குழுவில் புதியவன் என்பதால் எதுவும் சொல்லவில்லை. அவர்கள் கூறியது போலவே இந்தப் பாடலைத்தான் ஒலிப்பதிவு செய்தார்கள்.
  அந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்வதற்கு ஐந்து நிமிடங்கள் முன்புவரை பாடகி வாணிஜெயராம் அவர்கள், "ஆண்டவனின் சந்நிதியில்' என்று தொடங்கும் பாடலை ஒலிப்பதிவு செய்யுங்கள் சார். அந்தப் பாட்டுக்குப் போட்ட இசை, கந்தனுக்கு மாலையிட்டாள் பாட்டுக்குப் போட்ட இசையை விட நன்றாக இருக்கிறது. இதைவிட அதுதான் ஹிட்டாகும்," என்று எவ்வளவோ கூறினார்கள்.

  Aanandha Thenkaatru Thaalattuthe 5

  தயாரிப்பாளர் தரப்பைச் சேர்ந்தவர்கள், 'இதைத் தேர்ந்தெடுத்து விட்டோம். மாற்ற வேண்டாம்' என்று சொல்லிவிட்டார்கள். அதுதான் ஒலிப்பதிவானது.
  எம்.ஜி.ஆர். படத்திற்கு நான் எழுதிய முதல் பாடலை வாணிஜெயராம்தான் பாடினார்.
  இப்பாடல் ஓரளவுதான் பிரபலமானது. அண்ணன் விசுவநாதன், வாணிஜெயராம் இருவரும் சொன்னபடி அந்தப் பாடலைப் போட்டிருந்தால் இதைவிட நன்கு பிரபலமாயிருக்கும். ஏனென்றால் அந்தப் பாடலுக்குப் போட்ட டியூனைத்தான் பாலச்சந்தர் அவர்களது 'மன்மதலீலை' என்ற படத்திலே விசுவநாதன் அவர்கள் போட்டு அந்தப் பாடல் பிரபலமாகச் செய்தார். அதுதான்,

  'நாதமெனும் கோயிலிலே
  ஞான விளக்கேற்றி வைத்தேன்...'
  என்ற பாடல். இதை எழுதியவர் கண்ணதாசன். இதைப் பாடியவரும் வாணிஜெயராம்தான்.

  இதைப் படிக்கும்போது சிலருக்கு ஓர் ஐயம் எழலாம். எம்.ஜி.ஆர். சம்பந்தப்பட்ட பாடல்களை எம்.ஜி.ஆர். தானே தேர்ந்தெடுப்பார். இவர் கம்பெனிக்காரர்களே தேர்ந்தெடுத்ததாகக் கூறுகிறாரே எப்படி எனறு நினைக்கலாம்.

  'பல்லாண்டு வாழ்க' படத்தை முடித்துக் கொடுப்பதில் எம்.ஜி.ஆர். மும்முரமாக இருந்ததால் உங்களுக்குப் பிடித்திருந்தால் அதையே வைத்துக் கொள்ளுங்கள் என்று செழியனிடம் கூறியிருந்தார். செழியனும் தொலைபேசியில் இரண்டு பல்லவியையும் அதற்கான சரணங்களையும் எம்.ஜி.ஆரிடம் வாசித்துக் காட்டி அதில் ஒன்றை வைத்துக் கொள்கிறோம் என்றார். அவரும் சம்மதம் தெரிவித்து விட்டார்.

  ஆனால் இரண்டு பாடல்களையும் இசையோடு எம்.ஜி.ஆர். கேட்டிருப்பாரேயானால் அண்ணன் விசுவநாதன் பாராட்டிய பாடலைத்தான் அவர் ஏற்றுக் கொண்டிருப்பார்.

  (இன்னும் தவழும்)

  English summary
  The 5th episode of Poet Muthulingam's Aanandha Thenkaatru Thaalattuthe.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X