twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே - 7: அன்புக்கு நானடிமை!

    By Shankar
    |

    -கவிஞர் முத்துலிங்கம்

    திரைப்படப் பாடலாசிரியர்
    மேனாள் அரசவைக் கவிஞர்

    எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுத்த அந்தப் பாடல்,

    "அன்புக்கு நானடிமை - தமிழ்ப்
    பண்புக்கு நானடிமை - நல்ல
    கொள்கைக்கு நானடிமை - தொண்டர்
    கூட்டத்தில் நானடிமை..."

    - பல்லவியை எம்.ஜி.ஆர் தேர்ந்தெடுத்ததால் எம்.எஸ்.வி. போட்ட சரணத்திற்கான மெட்டிற்குப் பாடலை எழுதி வாருங்கள்... காலையில் ரிக்கார்டிங் என்று இயக்குநர் சங்கர் சொல்லிவிட்டார்.

    Aanandha Thenkaatru Thaalattuthe -7

    நானும் இரவோடு இரவாக சரணத்தை எழுதி காலையில் வாகினி ஸ்டுடியோவில் இருந்த எம்.எஸ்.வியிடம் காட்டினேன். மெட்டுக்குச் சரியாக இருக்கிறது எம்.ஜி.ஆரிடம் காட்டி ஓகே வாங்கி வாருங்கள் என்றார்.

    அப்போது ஏ.வி.எம். படப்பிடிப்பு நிலையத்தில் ஒரு படத்திற்கான படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். இருந்தார். அவரிடம் காட்டிய போது, "சரணம் நான் நினைத்தபடி சரியாக அமையவில்லை. வேறு எழுதிக் கொண்டு வா," வென்றார். மறுபடி வாகினி ஸ்டுடியோ வந்து அண்ணன் விஸ்வநாதன் அறையில் இருந்து எழுதினேன். எப்போதும் ஒரே இடத்தில் இருந்து சிந்தித்தால் எனக்குச் சிந்தனை வராது. பெரும்பாலும் நடந்து கொண்டே யோசிப்பேன். இல்லையென்றால் வீட்டிற்கு வெளியே அல்லது மாடியில் சுருட்டுப் பிடித்தபடியே யோசிப்பேன். நான் எழுதிய பெரும்பாலான பாடல்கள் இப்படித்தான்.

    மொழி மாற்றுப் படத்திற்கு எழுதும்போது மட்டும் நான்கு மணி நேரம் ஆனாலும் ஒரே இடத்தில் இருந்துதான் பாட்டெழுதுவேன். நடிக நடிகையரின் வாயசைப்புக்கு ஏற்றாற்போல் அதே நேரத்தில் அந்தக் காட்சிக்கும் தகுந்தாற்போல் எழுதவேண்டுமல்லவா? அதனால் ஒரே இடத்தில் இருந்து டேப் ரிக்கார்டரைப் போட்டு எழுதிக் கொண்டிருப்பேன்.

    Aanandha Thenkaatru Thaalattuthe -7

    அண்ணன் விஸ்வநாதனின் கம்போசிங் அறை ஏ.சி. அறை. அதனால் எனக்கும் சிந்தனை வரவில்லை. அதனால் அறைக்கு வெளியே வந்து அங்கு வளர்ந்திருந்த சவுக்கு மரக்கன்றுகளில் ஒன்றைப் பிடித்தபடி யோசித்தேன். எதுவும் தோன்றவில்லை. பிறகு இன்னொரு சவுக்குக் கன்றைப் பிடித்தபடி யோசித்துக் கொண்டிருந்தேன்.

    எம்.எஸ்.வி. அறையிலிருந்த தயாரிப்பாளர் வி.டி. லட்சுமணன் செட்டியார், "முத்துலிங்கம் மரத்தைப் பிடிக்கிறான். மட்டையைப் பிடிக்கிறான். சரணத்தைப் பிடிக்கமாட்டேன் என்கிறானே," என்று கிண்டல் செய்தார். அது என் காதில் விழுந்தது.
    உடனே அறைக்குள் சென்று, "ஆமாம். நான் அதை இதைப் பிடிக்கிறவன்தான். எதையும் பிடிக்காதவர்களாகப் பார்த்து உங்களுக்குப் பிடித்த வகையில் பாடலை எழுதிக் கொள்ளுங்கள்," என்று கோபமாகச் சொல்லிவிட்டு வெளியே வந்துவிட்டேன்.

    உடனே இயக்குநர் சங்கர் அவர்களும் எம்.எஸ்.வி. அவர்களும் ஓடிவந்து என்னை சமாதானப்படுத்தினர்.

    "அந்தக் காலத்தில் எங்களுக்கெல்லாம் நேராத அவமானமா உனக்கு நேர்ந்துவிட்டது? சினிமா உலகில் நமது திறமை வெளியே தெரியாதவரை நான்குபேர் நான்குவிதமாகத்தான் சொல்வார்கள். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படக் கூடாது," என்று அறிவுரை சொல்லிவிட்டு எம்.எஸ்.விஸ்வநாதன் தன் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைக் கூறினார்.

    Aanandha Thenkaatru Thaalattuthe -7

    "எம்.ஜி.ஆர். நடித்த 'ஜனோவா' என்ற படம் தான் நான் முதன்முதல் இசையமைக்க ஒப்பந்தம் ஆன படம். அந்தப் படத்திற்கு ரிக்கார்டிங் செய்வதற்காக ஆர்க்கெஸ்ட்ராவோடு வந்துவிட்டேன். அந்தப் படத்திற்கு இரண்டுபேர் தயாரிப்பாளர்கள். ஒருவர் பெயர் ஈப்பச்சன். இன்னொருவர் பெயர் நாகூர். இவர்தான் அந்தப் படத்தின் டைரக்டரும் கூட.

    ஸ்டுடியோவிற்கு எம்.ஜி.ஆர். போன் செய்து யார் மியூசிக் டைரக்டர் என்று நாகூரிடம் கேட்டிருக்கிறார். எம்.எஸ்.விசுவநாதன் என்று சொல்லியிருக்கிறார்.
    இசையமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடுவிடம் ஆர்மோனியம் தூக்கி வைத்துக் கொண்டிருந்தவராயிற்றே அவரா? என்று எம்.ஜி.ஆர் கேட்டிருக்கிறார். ஆமாம் என்றார் நாகூர். அவர் வேண்டாம் வேறு யாரையாவது மியூசிக் டைரக்டராகப் போடுங்கள் என்று எம்.ஜி.ஆர். சொல்லியிருக்கிறார்.

    உடனே நாகூர் என்னிடம் வருத்தப்பட்டு 'எம்.ஜி.ஆர். இப்படிச் சொல்கிறார். ஆகவே அடுத்தமுறை வேறொரு படத்திற்கு உங்களைப் பயன்படுத்திக் கொள்கிறோம் இப்போது புறப்படுங்கள்,' என்றார்.

    நாங்களும் ஆர்க்கெஸ்டரவை டாக்சியில் ஏற்றிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த தயாரிப்பாளர் ஈப்பச்சன் என்ன ரிக்கார்டிங் முடிந்துவிட்டதா? அதற்குள் புறப்பட்டுவிட்டீர்கள் என்றார்.

    நாங்கள் எம்.ஜி.ஆர். சொன்ன விஷயத்தைச் சொன்னோம். அதற்கு அவர், 'நான் தயாரிப்பாளரா? அவர் தயாரிப்பாளரா?' வாருங்கள் என்று ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து தொலைபேசியில் எம்.ஜி.ஆருடன் பேசி என்னை இசையமைக்க வைத்தார்.

    என்னுடைய திறமை என்னவென்று தெரிந்தபிறகு எம்.ஜி.ஆர். படங்களுக்கெல்லாம் பெரும்பாலும் என்னைத்தான் மியூசிக் டைரக்டராகப் போடும்படி எம்.ஜி.ஆரே கேட்கும் நிலை உருவானது. ஆகவே நீ இதையெல்லாம் நீ பொருட்படுத்தக் கூடாது. அப்படிப் பொருட்படுத்தினால் சினிமா உலகில் வளரமுடியாது," என்று கால்மணி நேரம் பல்வேறு நிகழ்ச்சிகளைச் சொல்லி இயக்குநர் சங்கர் அவர்களும் எம்.எஸ்.வி. அவர்களும் என்னைப் பாடல் எழுத வைத்தனர்.

    அதன்பிறகு சரணங்களை எழுதி அதை மியூசிக் டைரக்டரும், டைரக்டரும் ஓ.கே. செய்த பிறகு ஏ.வி.எம். ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரிடம் காட்டி அவர் சம்மதம் தெரிவித்த பிறகுதான் இப்பாடல் ஒலிப்பதிவானது.

    காலை ஒன்பது மணிக்கு ஒலிப்பதிவு ஆகியிருக்க வேண்டிய பாடல் இரவு ஒன்பது மணிக்கு ஜேசுதாஸ் பாட ஒலிப்பதிவு செய்யப்பட்டது. அதுவரை ஜேசுதாஸ் அங்கேயே காத்திருந்து பாடினார். இப்போது அப்படியெல்லாம் நடக்குமா?

    பாடல் சரியாக வரவில்லையென்றால் மறுநாள் வைத்துக் கொள்ளலாம் என்று எம்.ஜி.ஆரும் சொல்லி விடுவார். அண்ணன் விஸ்வநாதனும் சொல்லிவிடுவார். ஆனால் இந்தப் பாடலைப் பொறுத்தவரை மறுநாளே படிப்பிடிப்பு நடத்தியாக வேண்டும். அதற்கு மறுநாள் எம்.ஜி.ஆர். வேறொரு படத்திற்கு மங்களூர் செல்ல வேண்டும். அதனால்தான் இவ்வளவு அவசரம்.

    இந்தப் பாடலைப் பொறுத்தவரை எல்லோரும் என்னால் சிரமப்பட்டு விட்டார்கள். இருந்தாலும் பாடல் பிரபலமானதால் எல்லாரும் சிரமத்தை மறந்து மகிழ்ச்சியடைந்தார்கள் தயாரிப்பாளர் உட்பட.

    மறுநாள் படப்பிடிப்பு முடிந்து பத்திரிகையாளரைச் சந்தித்தபோது, "இந்தப் பாடல் குறிப்பிட்டபடி இன்றைக்குப் படமாக்கப்படுமா என்ற பதற்றமான சூழ்நிலை இருந்தது. நல்லவேளை முத்துலிங்கம் காப்பாற்றிவிட்டார். அவருக்கு என் நன்றி என்று சொல்லுங்கள்," என்று எம்.ஜி.ஆர். சொன்னாராம். இதை 'சினிமா எக்ஸ்பிரஸ்' பத்திரிகை ஆசிரியராக இருந்த ராமமூர்த்தி என்னிடம் கூறி மகிழ்ச்சி தெரிவித்தார்.

    (இன்னும் தவழும்)

    English summary
    The Seventh Episode of Poet Muthulingam's Aanandha Thenkaatru Thaalattudhe series.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X