twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே- 9 எல்லா நுணுக்கங்களும் அறிந்த எம்ஜிஆர்!

    By Shankar
    |

    -கவிஞர் முத்துலிங்கம்

    திரைப்படப் பாடலாசிரியர்
    மேனாள் அரசவைக் கவிஞர்

    பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் - ஒரு
    பிள்ளைக்காகப் பாடுகிறேன்

    எம்.ஜி.ஆர். படத்திற்கு இரண்டாவதாக நான் எழுதிய படம் 'ஊருக்கு உழைப்பவன்.' இது வீனஸ் பிக்சர்ஸ் தயாரித்தபடம். இது பெரிய தயாரிப்புக் கம்பெனிகளில் ஒன்று. நடிகர் திலகம் சிவாஜி, பத்மினி நடித்த 'உத்தம புத்திரன்' படம் இந்தக் கம்பெனி தயாரித்ததுதான்.

    Anandha Then Kaatru Thalattudhe - 9

    பெரிய கம்பெனி தயாரிக்கிற படம் அதனால் நன்றாக எழுது என்று எம்.ஜி.ஆர். என்னிடம் கூறினார். கூறியதோடு மட்டுமல்ல அட்வான்ஸ் ஆயிரம் ரூபாய் உனக்குக் கொடுக்கச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் என்று என்னிடம் பணம் கொடுத்தார். அப்போது அவர் பக்கத்தில் வித்துவான் லட்சுமணம், சித்ரா கிருஷ்ணசாமி ஆகியோர் இருந்தனர். இன்னொருவரும் இருந்தார். அவர் யாரென்று நினைவில் இல்லை.

    பாடல் எழுதி ஒலிப்பதிவானவுடன் அந்தக் கம்பெனியில் எனக்குப் பணம் கொடுத்தார்கள். "ஏற்கெனவே நீங்கள் கொடுத்துவிட்டீர்களே... நீங்கள் கொடுத்ததாகச் சொல்லி எம்.ஜி.ஆர் கொடுத்தாரே," என்றேன்.

    Anandha Then Kaatru Thalattudhe - 9

    "நாங்கள் கொடுக்கவில்லையே...," என்றார்கள்.

    அதன்பிறகுதான், எம்.ஜி.ஆர். கொடுத்தால் நான் வாங்க மறுத்துவிடுவேன் என்பதால் கம்பெனிக்காரர்கள் கொடுத்தார்கள் என்று சொல்லி அவர் பணத்தைக் கொடுத்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன். எத்தகைய மாமனிதர் அவர் என்பதை நினைத்து மலைத்துப் போய்விட்டேன். இன்றைக்கு நடிகர்களில் யாரேனும் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்களா?

    அந்தப் படத்தில் இரண்டு பெண்களுக்குக் கணவராக நடிப்பார் எம்.ஜி.ஆர். கதைப்படி ஒரு பெண்ணுக்குத்தான் அவர் உண்மையான கணவர். இன்னொரு பெண்ணுக்குக் கணவராக நடிக்க வேண்டிய சூழ்நிலை.

    அப்படிப்பட்ட சூழ்நிலையில் தனக்கும் தன் மனைவிக்கும் பிறந்த தன் சொந்தக் குழந்தை இறந்துவிடுகிறது. அதை எடுத்து அடக்கம் செய்துவிட்டு இன்னொரு பெண்ணுக்குக் கணவனாக நடிக்கிறாரே அந்தப் பெண் வீட்டுக்கு எம்.ஜி.ஆர் வருகிறார். அப்போது அந்தப் பெண்ணின் குழந்தைக்குப் பிறந்தநாள் விழா நடைபெறுகிறது.

    Anandha Then Kaatru Thalattudhe - 9

    குழந்தையை வாழ்த்திப் பாட்டுப் பாடச் சொல்கிறார்கள். தன் சொந்தக் குழந்தை இறந்துவிட்டதே அதை நினைத்துப் பாடுவாரா? இந்தக் குழந்தைக்கு வாழ்த்துப் பாடுவாரா? அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அந்தப் பாடல் வருகிறது. இரண்டு குழந்தைக்கும் பொருத்தமாகப் பாடவேண்டும்.

    "எந்தக் குழந்தைகள் பிறந்த நாள் விழாவானாலும் இந்தப் பாடலை ஒலிபரப்ப வேண்டும். அந்த வகையில் பொருத்தமான முறையில் பாடல் எழுது," என்று கட்டளையிட்டார் எம்.ஜி.ஆர்.

    வீனஸ் பிக்சர்ஸ் கம்பெனி சென்னை வடக்கு போக்ரோட்டில் இருந்தது. விசுவநாதன் அண்ணன் டியூன் போட நான் பாடல் எழுதினேன்.

    Anandha Then Kaatru Thalattudhe - 9

    "நெஞ்சுக்குள்ளே அன்பு என்னும் கடலிருக்குது
    நினைக்கும்போது பாசமென்னும் அலையடிக்குது
    என் - கண்ணுக்குள்ளே குழந்தையென்னும்
    மலர் சிரிக்கின்றது
    என் - கவிதைக்குள்ளே மழலை ஒன்று
    குரல் கொடுக்கின்றது
    எது - நடக்கும் எது நடக்காது
    இது - எவருக்கும் தெரியாது
    எது - கிடைக்கும் எது கிடைக்காது
    இது - இறைவனுக்கும் புரியாது"

    இதுதான் நான் எழுதிய முதல் பல்லவி.

    Anandha Then Kaatru Thalattudhe - 9

    அங்கிருந்த எல்லாருக்கம் இந்தப் பல்லவி பிடித்துவிட்டது. அந்தப் படத்தின் வசனகர்த்தா ஆர்.கே. சண்முகம் பல்லவி பிரமாதம் என்று பாராட்டினார். விசுவநாதன் அண்ணனும் நன்றாக இருக்கிறது என்று தட்டிக் கொடுத்தார்.
    என்றாலும் எம்.ஜி.ஆர். படத்திற்கு குறைந்தது மூன்று பல்லவியாவது எழுதவேண்டுமல்லவா. ஆனால் ஒரே இடத்தில் இருந்தால் எனக்கு எழுத வராது. அதனால் கொஞ்சத் தூரம் நடந்து யோசித்துக் கொண்டு வருகிறேன் என்று வெளியே சென்றேன். தெற்கு போக்ரோட்டிலுள்ள சிவாஜி வீடு வரையிலும் சென்றுவிட்டுத் திரும்பி வந்தேன்.

    அப்படி வந்து கொண்டிருந்தபோது என்னை உரசுவது போல் ஒரு பியட்கார் வந்து நின்றது. திரும்பிப் பார்த்தேன். காருக்குள் கவர்ச்சி வில்லன் கே. கண்ணன், நடிகர் ஐசரி வேலன் ஆகியோர் இருந்தனர்.

    இந்த வாரம் 'தென்னகம்' பத்திரிகையில் நீங்கள் எழுதிய பிள்ளைத் தமிழ் மிக நன்றாக இருந்தது என்று பாவலர் முத்துசாமி பலபடப் புகழ்ந்து எம்.ஜி.ஆரிடம் உங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார் என்று நடிகர் ஐசரி வேலன் கூறினார். கண்ணனும் அதை வழி மொழிந்தார்.

    எம்.ஜி.ஆரைப் பற்றி எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ், எம்.ஜி.ஆர். உலா, எம்.ஜி.ஆர் அந்தாதி ஆகிய மூன்று சிற்றிலக்கியங்களைப் படைத்த கவிஞன் நான் ஒருவன்தான். வேறு யாரும் இல்லை.

    அதனால் ஐசரி வேலன் அப்படிச் சொன்னவுடன் எனக்குப் பொறி தட்டியதைப் போல் ஓர் எண்ணம் தோன்றியது. நாம் எம்.ஜி.ஆரைப் பிள்ளையாகப் பாவித்து 'பிள்ளைத்தமிழ்' இலக்கியம் எழுதுகிறோம். எம்.ஜி.ஆரும் படத்தில் ஒரு பிள்ளைக்காகத்தான் பாடுகிறார். ஆகவே இதையே முதல்வரியாக வைத்து எழுதினால் என்ன என்று எண்ணிய நேரத்திலே என் மூளைக்குள் ஒரு பல்லவி உட்கார்ந்து முரசறைந்தது.

    வேகமாகச் சென்று அண்ணன் விசுவநாதனிடம் எழுதிக் காட்டினேன். நன்றாக இருக்கிறது. இதற்கு டியூன் போடுகிறேன். அதற்குள் நீயே ஒரு சரணத்தை யோசித்து எழுது என்றார்.

    வரும்போதே சரணமும் எப்படி எழுத வேண்டும் என்று யோசித்துக் கொண்டு வந்த காரணத்தால் சரணத்தையும் உடனே எழுதிவிட்டேன். அதற்கும் எம்.எஸ்.வி. உடனே மெட்டமைத்துவிட்டார்.

    அந்தப் பாடல் இதுதான்,

    "பிள்ளைத்தமிழ் பாடுகிறேன் - ஒரு
    பிள்ளைக் காகப் பாடுகிறேன்
    மல்லிகைபோல் மனதில் வாழும்
    மழலைக் காகப் பாடுகிறேன்"

    சரணம்

    நீலக்கடல் அலைபோல
    நீடூழி நீ வாழ்க
    நெஞ்சமெனும் கங்கையிலே
    நீராடி நீ வாழ்க
    காஞ்சிமன்னன் புகழ்போலே
    காவியமாய் நீ வாழ்க
    கடவுளுக்கும் கடவுளென
    கண்மணியே நீ வாழ்க"

    இதுபோல் இன்னொரு சரணமும் எழுதிவிட்டேன்.
    இன்னொரு பல்லவியும் எழுதிவிடு. அதற்கும் மெட்டுப் போடுவோம் என்றார் எம்.எஸ்.வி.

    "தேவ லோக வாசலிலே - ஒரு
    தெய்வக் குழந்தை நிற்கிறது
    பூவில் வாழும் தேவதைகள் - பசும்
    பொன்போல் வாழ்த்துச் சொல்கிறது"
    என்று எழுதினேன்.

    அதற்கும் மெட்டுப் போட்டவுடன் மறுநாள் சத்தியா ஸ்டுடியோவில் 'நவரத்தினம்' படத்தில் நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரிடம் போட்டுக் காண்பித்தோம். அப்போது ஏ.பி. நாகராஜன், நடிகை லதா, ப. நீலகண்டன் ஆகியோர் இருந்தனர்.

    பாடலைக் கேட்ட இயக்குநர் ஏ.பி. நாகராஜன் இந்தக் காட்சிக்கு "நெஞ்சுக்குள்ளே அன்பு என்னும் கடலிருக்குது" - என்ற பல்லவி பொருத்தமாக இருக்கிறது என்றார்.

    இயக்குநர் ப. நீலகண்டன் 'தேவலோக வாசலிலே' என்ற பல்லவி இரண்டு குழந்தைக்கும் பொருத்தமாக இருக்கிறதே என்றார்.

    பாடலைப் போடுவதற்கு முன்பு இந்தப் பாடல் எந்தச் சூழ்நிலையில் வருகிறது என்பதை அவர்களிடம் சொல்லிவிட்டுத்தான் பாடலைப் போட்டுக் காண்பித்தார். அதனால் அவர்கள் அந்தக் கருத்தைச் சொன்னார்கள்.
    நீங்கள் சொல்வதும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் 'பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்" என்ற பல்லவிதான் பாப்புலராகும். ஆகவே இதையே வைத்துக் கொள்ளலாம் என்று எம்.ஜி.ஆர். சொல்லிவிட்டார்.

    அவர் சொன்னதுபோல் இந்தப் பாடல்தான் அதில் பிரபலமானது. அவரைப் போாலே பாடலைத் தேர்ந்தெடுக்கக் கூடியவர்கள் யாரும் இருக்கமுடியாது. சினிமாத் துறையில் எல்லா நுணுக்கங்களையும் அறிந்த ஒரே நடிகர் அன்றைக்கு அவர்தான்.

    நான் எழுதிய இந்தப் பாடல் புலவர் புலமைப்பித்தன் பெயரிலும், புலமைப் பித்தன் எழுதிய "அழகெனும் ஓவியம் இங்கே - உன்னை எழுதிய ரவிவர்மன் எங்கே" என்ற பாடல் என் பெயரிலும் இசைத்தட்டில் தவறாகப் பதிவு செய்யப்பட்டுவிட்டது.

    அதன் பிறகு வீனஸ் பிக்சர்ஸ் கம்பெனி இது முத்துலிங்கம் எழுதிய பாடல். இசைத் தட்டில் தவறாக வேறொருவர் எழுதியதாக இடம் பெற்றுவிட்டது. ஆகவே முத்துலிங்கம் பெயரைத்தான் குறிப்பிட வேண்டும் என்று வானொலி நிலையத்திற்கு எழுதியது. நானும் போய்க் குறிப்பிட்டு பெயரை மாற்றச் சொன்னேன்.
    சிங்கப்பூருக்குச் சென்றபோது அங்கும் இதேபோல் பிரச்சினை இருந்தது. என்பெயரை அந்தப் பாட்டில் குறிப்பிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவர்களும் மாற்றிக் கொண்டார்கள்.

    அதுபோல் இளையராஜா இசையில் கமலஹாசன் நடித்த "உன்னால் முடியும் தம்பி" என்ற படத்தில்,

    "இதழில் கதை எழுதும் நேரமிது
    இன்பங்கள் அழைக்குது"

    என்ற பாடல் நான் எழுதிய பாடல். இது கங்கை அமரன் எழுதியதாகத் தவறாக இசைத்தட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்தப் படத்தில் கங்கை அமரன் பாட்டே எழுதவில்லை. நானும், புலமைப்பித்தனும், இளையராஜாவும்தான் எழுதியிருந்தோம். எப்படி கங்கைஅமரன் பெயர் அதில் இடம்பெற்றது என்று தெரியவில்லை. அதையும் சிங்கப்பூரில் என் பெயரில் மாற்றினேன். இப்படிச் சில கவிஞர்கள் பாடல் வேறு சில கவிஞர்கள் பெயரில் இன்னும் ஒலிப்பரப்பப்பட்டு வருகிறது.

    (இன்னும் தவழும்)

    English summary
    The 9th part of Poet Muthulingam's Anandha Then Kaatru Thalattudhe series.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X