ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு கிராமி விருதுகள்!!

கடந்த ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து டேனி பாயில் இயக்கி வெளிவந்த ஸ்லம்டாக் மில்லினர் திரைப்படம் ஆஸ்கருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் சிறந்த பாடல் ஜெய் ஹோ மற்றும் இசைக்காக 2 ஆஸ்கர் விருதுகள் ரகுமானுக்கு வழங்கப்பட்டது.
இதன்மூலம் தனிநபராக ஆஸ்கர் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஏர்.ஆர்.ரகுமான் பெற்றார். கடந்த ஆண்டு முழுவதும் பாராட்டு மழையில் நனைந்தார் ரஹ்மான்.
52வது கிராமி விருதுகளுக்கும் இரு பிரிவுகளில் அவரது பாடல் மற்றும் இசை பரிந்துரைக்கப்பட்டிருப்பதை ரஹ்மான் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்.
இந்த விருதுகள் கிடைக்கும் என்று நம்புவதாக அவர் கூறியிருந்தார். அவரது நம்பிக்கை வீண் போகவில்லை... இசைத்துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான கிராமி இப்போது அவருக்குக் கிடைத்துள்ளது.
ஜெய் ஹோ பாடலின் சிறந்த இசைக்காக ஒரு விருதும், அந்தப் பாடலை எழுதிய கவிஞர் குல்சாருடன் இணைந்து மற்றொரு விருதும் அவருக்கு இப்போது வழங்கப்பட்டது. ஆஸ்கர் விருதும் இதே போல குல்சாருடன் இணைந்து வழங்கப்பட்டகது குறிப்பிடத்தக்கது.
இந்த விருது விழாவுக்கு நேரில் சென்றிருந்த ரஹ்மான், விருதுகளைப் பெற்றுக் கொண்டார்.
இந்த விருதின் மூலம், கிராமி விருது வென்ற இந்தியக் கலைஞர்கள் பண்டிட் ரவிஷங்கர், ஜாகிர் உசைன்,விக்கு வினாயக் மற்றுவம் விஸ்வமோகன் பட் வரிசையில் இடம்பெறுகிறார் ரஹ்மான்.
சமீபத்தில்தான் ரஹ்மானுக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தது.
இந்த ஆண்டு நடக்கும் ஆஸ்கர் விருதுகளில் ஒரு பிரிவில் சிறந்த இசைக்காக ரஹ்மான் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஹ்மான் வீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்:
ஏ.ஆர். ரஹ்மானுக்கு 2 கிராமி விருதுகள் கிடைத்த தகவல் பரவியதும் அவரது வீட்டில் பெருமளவில் ரசிகர்கள் குவிந்து விட்டனர்.
கோடம்பாக்கத்தில் உள்ள ஏ.ஆர்.ரகுமான் வீட்டில் ஆண் - பெண் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் இன்று அதிகாலையில் கூடினார்கள். ரஹ்மானின் இசைக்கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளும் அங்கு திரண்டனர். ரஹ்மானின் பாடல்களை ஆடிப் பாடினார்கள்.
பின்னர் வீட்டுக்கு வெளியே பட்டாசுகளை வெடித்தனர். அந்தப் பகுதியே திருவிழாக் கோலமாகி விட்டது. ரஹ்மானின் சகோதரி பாத்திமா, அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
பின்னர் அவர் கூறுகையில், இன்று காலை 6.30 மணிக்கு என் தாயார் டெலிபோனில் தொடர்பு கொண்டு கிராமி விருதுகள் கிடைத்த தகவலை சொன்னார். எங்கள் மகிழ்ச்சி தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்றார்.


Click it and Unblock the Notifications











