தென்னிந்திய மொழி கலைஞர்களுக்கு தமிழ் இயக்குநர் சங்க விருது!
தென்னிந்திய மொழி திரைத்துறையில் பணியாற்றும் திறமையான கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து இனி ஆண்டுதோறும் விருது வழங்குவதாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க ஆலோசனை கூட்டம் சென்னை கிரீன் பார்க் ஓட்டலில் நேற்று பகல் 1 மணிக்கு நடந்தது. சங்கத்தின் தலைவர் பாரதிராஜா கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்க செயலாளர் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி நிருபர்களிடம் விளக்கினார்.
அவர் கூறுகையில், "தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் 2 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். சங்க வளர்ச்சிக்காக என்னென்ன செய்வது என்று ஆலோசனை சொல்வதற்காக 125 இயக்குநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இனி ஒவ்வொரு ஆண்டும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகின்ற படங்களில் இருந்து சிறந்த படங்கள், சிறந்த நடிகர்-நடிகைகள் மற்றும் சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து விருது வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. அடுத்த வருடம் முதல் இது செயல்படுத்தப்படும்.
தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் கலை நிகழ்ச்சிகள் நடத்தி சங்க வளர்ச்சிக்கு நிதி திரட்டுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அந்த கலை நிகழ்ச்சியில் தென்னிந்தியாவில் உள்ள அனைத்து இயக்குநர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் புத்தாண்டை ஆண்டுதோறும் சென்னையில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசை கேட்டு கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது", என்றார் செல்வமணி.


Click it and Unblock the Notifications











