இசைஞானி இளையராஜாவுக்கு அக்ஷய சம்மான் விருது!

இசைத் துறையில் இணையற்ற சாதனை படைத்ததற்காக, 2010-ம் ஆண்டுக்கான இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. ஒரு லட்ச ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பாராட்டுப் பட்டயம் அவருக்கு வழங்கப்படுகிறது.
ஒரிசா மாநிலத்தில் உள்ள அக்ஷயா மொகந்தி அறக்கட்டளை சார்பில் இந்த விருது வழங்கப்படுகிறது.
கடந்த 2007-ம் ஆண்டு முதல் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இந்த அக்ஷய சம்மான் விருதை, ஏற்கனவே மன்னா டே, குல்சார் மற்றும் பண்டிட் ஹரிபிரசாத் சௌராசியா என இசைமேதைகள் பெற்றுள்ளனர். அடுத்த மாதம் புவனேஸ்வர் நகரில் நடைபெறும் விழாவில் இளையராஜாவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
உலக அளவில் பல்வேறு பெருமைக்குரிய விருதுகளை பெற்றுள்ள 67 வயதான 'இசைஞானி' இளையராஜா, சிம்பொனி மற்றும் ஆரட்டோரியோ போன்ற உயர்ந்த இசைக் கோர்வைகளை அமைத்த முதல் இந்திய இசையமைப்பாளராவார். சிறந்த திரைப்பட இசையமைப்பாளருக்கான மத்திய அரசின் விருதை 4 முறை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2010-ம் ஆண்டுக்கான சிறந்த பின்னணி இசைக்கான விருது இரு தினங்களுக்கு முன்புதான் அவருக்கு அறிவிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











