இலங்கையில் 'இந்தி' திரைப்பட விழா!

'சர்வதேச' 'இந்திய' என்ற இரு வார்த்தைகளைக் கோர்த்து இந்த அகாடமி அமைந்திருந்தாலும் முழுக்க முழுக்க இந்திப் படங்களுக்கு மட்டுமே விருது வழங்கும் அமைப்பாகும். இந்தித் திரைப்பட உலகம் மட்டுமே இந்தியாவின் திரையுலகம் என்பது போலவே இந்த அகாடமியின் இணையதளத்திலும் தகவல்கள் உள்ளன.
கடந்த 2000மாவது ஆண்டு முதல் வெளிநாடுகளில் விழாக்களை நடத்தி விருது வழங்கி இந்தித் திரையுலகையும், இந்தித் திரையுலக கலைஞர்களையும் கெளரவித்து வருகிறது இந்த அமைப்பு.
இந்த அமைப்பின் செயல்பாடுகளை, பாரபட்ச போக்கை, இந்தியத் திரையுலகிலேயே மிகப் பெரிய அளவில் வருமானத்தை அள்ளி எடுக்கும் தென்னிந்தியத் திரையுலகை இந்த அமைப்பு முற்றிலும் புறக்கணித்து இந்தியை மட்டும் தூக்கிப் பிடித்து வருவதாக, மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி துபாயில் நடந்த விழாவின்போது மிகக் கடுமையாக விமர்சித்து அந்த விழாவையே பரபரப்பில் ஆழ்த்தினார் என்பது நினைவிருக்கலாம்.
இப்படிப்பட்ட இந்த அமைப்பு இந்த ஆண்டு தனது விருது விழாவை இலங்கையில் போய் நடத்தவுள்ளதாம். கொழும்பு சுகததாசா விளையாட்டரங்கில், ஜூன் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை விழா நடைபெறுமாம்.
விருது விழாவுடன் பேஷன் போட்டியும், ஒரு டுவென்டி 20 போட்டியும் நடைபெறவுள்ளதாம். இந்த விளையாட்டுப் போட்டியில் பாலிவுட் நடிகர்கலும், ஆசிய கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொண்டு ஆடுவார்களாம்.
இலங்கையில் தற்போது அமைதி திரும்பி விட்டதால் அந்த நாட்டில் விழாவை நடத்த முடிவானதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் அச்சலா ஜக்கோடா கூறுகையில், இது இலங்கைக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய, அரிய வாய்ப்பாகும். இங்கு நிலவி வரும் அமைதியைத் தொடர்ந்து இந்தியத் திரைப்பட விழாவை இங்கு நடத்த முடிவு செய்திருப்பதன் மூலம் இலங்கைக்கு சர்வதேச அளவில் மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.
இலங்கையில் இனப்போர் முடிவடைந்து விட்டதாக கூறி விட்ட இலங்கை அரசு தற்போது சர்வதேச அளவில் தன் மீது குவிந்து கொண்டிருக்கும் பல்வேறு புகார்களைத் தாண்டி நல்ல பெயர் எடுக்க என்ன வழியெல்லாம் உள்ளதோ அதையெல்லாம் யோசித்து செயல்படுத்தி வருகிறது. அப்படிப்பட்ட ஒன்றாகவே இந்த 'இந்தி'த் திரைப்பட விழாவைக் கருத வேண்டியுள்ளது.


Click it and Unblock the Notifications











