66வது ஃபிலிம் ஃபேர்.. தனுஷ், த்ரிஷா, விஜய்சேதுபதி என விருது பெற்றவர்களின் மொத்த லிஸ்ட் இதோ!
சென்னை: தென்னிந்திய சினிமாவுக்கான பிரத்யேக ஃபிலிம் ஃபேர் விருது நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.
66வது ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமா படங்களில் கடந்த 2018ம் ஆண்டு அசத்திய கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
தமிழில் சிறந்த நடிகருக்கான விருது நடிகர் தனுஷ் மற்றும் விஜய்சேதுபதிக்கு வழங்கப்பட்டது.
சிறந்த நடிகைக்கான விருதினை நடிகை த்ரிஷாவுக்கு வழங்கப்பட்டது. ஃபிலிம் ஃபேர் விருது விழாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தொகுப்பாளர்கள்
யமஹா ஃபேசினோ ஃபிலிம் ஃபேர் சவுத் விருது விழா நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. நடிகை ரெஜினா கசாண்ட்ரா மற்றும் நடிகர் சந்திப் கிஷன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். கண்ணை கவரும் உடையில் கவர்ச்சியாக வந்த ரெஜினா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார்.
சிறந்த பாடலாசிரியர்
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தில் கோவிந்த் வசந்தா இசையில் கார்த்திக் நேத்தா எழுதிய 'காதலே காதலே' பாடலுக்காக பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது வழங்கப்பட்டது.
சிறந்த பின்னணி பாடகி
அதே 96 படத்தில் கோவிந்த் வசந்தா இசையில் கார்த்திக் நேத்தா எழுதிய 'காதலே காதலே' பாடலை பாடிய பாடகி சின்மயிக்கு சிறந்த பாடகி விருது வழங்கப்பட்டது.
சிறந்த ஆல்பம்
2018ம் ஆண்டின் சிறந்த இசை ஆல்பம் விருதினையும் 96 படம் தட்டிச் சென்றது. இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவுக்கு அந்த விருது வழங்கப்பட்டது.
சிறந்த பின்னணி பாடகர்
யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தில் 'ஹே பெண்ணே பெண்ணே' பாடலை பாடிய சித் ஸ்ரீராமுக்கு சிறந்த பின்னணி பாடகர் விருது வழங்கப்பட்டது.
சிறந்த துணை நடிகர்
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கனா படத்தில் கெளசல்யாவின் தந்தை முருகேசனாக வாழ்ந்த நடிகர் சத்யராஜுக்கு சிறந்த துணை நடிகர் விருது வழங்கப்பட்டது.

சிறந்த துணை நடிகை
நெல்சன் இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் நடித்த சரண்யா பொன்வண்ணனுக்கு சிறந்த துணை நடிகை விருது வழங்கப்பட்டது.
சிறந்த நடிகை (விமர்சன ரீதியாக)
கனா படம் நேற்று வெளியாகி ஓராண்டை நிறைவு செய்துள்ள நிலையில், அதே நாளில் விமர்சகர் குழு பரிந்துரைத்த சிறந்த நடிகை விருதினை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றார். வடசென்னை படத்திலும் பத்மாவாக சிறந்த நடிப்பை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறந்த நடிகர் (விமர்சன ரீதியாக)
மணிரத்னம் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியான செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்த அரவிந்த் சாமிக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.
பாப்புலர் நடிகை
96 படத்தில் ஜானுவாக நடித்து பல கோடி ரசிகர்களின் மனங்களை கவர்ந்த நடிகை த்ரிஷாவுக்கு பாப்புலர் நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. சிவப்பு நிற உடையில் மேடையை அலங்கரித்த நடிகை த்ரிஷா தனது ஃபிலிம் ஃபேர் விருதினை பெற்றுக்கொண்டார்.
பாப்புலர் நடிகர்
66வது ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் பாப்புலர் விருது இரு நடிகர்களுக்கு வழங்கப்பட்டது. வடசென்னை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தனுஷுக்கும், 96 படத்தில் ஆழமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் விஜய்சேதுபதிக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த இயக்குநர்
2018ம் ஆண்டு ஒரு படம் ரசிகர்களை பயம் கொள்ளச் செய்தது என்றால் அது ராட்சசன் தான். நேற்று இரவு நடந்த ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதினை ராட்சசன் படத்திற்காக அதன் இயக்குநர் ராம் குமாருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த படம்
பா. ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படத்திற்கு சிறந்த படத்திற்கான விருது வழங்கப்பட்டது. பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் இணைந்து அந்த விருதினை விழா மேடையில் பெற்றுக் கொண்டனர்.


Click it and Unblock the Notifications











