கண்ணான கண்ணே.. தேசிய விருதை தட்டித் தூக்கி வந்த இமான்.. அப்பாக்கள் - மகள்கள் ஹேப்பி!
சென்னை : சிறந்த இசையமைப்பாளருக்கான விருது விஸ்வாசம் படத்திற்காக டி இமானுக்கு வழங்கப்பட்டுள்ளது.
67வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் உள்ள தேசிய பத்திரிகையாளர் மையத்தில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த திரைப்படம் தான் விஸ்வாசம். இப்படத்தில் சண்டைக் காட்சிகளை காட்டிலும் செண்டிமெண்ட் காட்சிகள் ஏராளமாக இடம் பெற்று இருந்தன.
அப்பா மகள் பாச போராட்டம் பார்வையாளர்களை கண் கலங்க வைக்கும் செண்டிமெண்ட் காட்சிகள் பல இடம் பெற்று இருந்தன. இப்படம் வசூல் சாதனை படைத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது இந்த படத்திற்கு மகுடம் சூட்டியது போல இப்படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி இமான் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டி இமானின் இசையில் தாமரை வரிகளில் சித் ஸ்ரீராமின் மாயக்குரலில் அனைவரின் மனதை கொள்ளை கொண்ட கண்ணான கண்ணே பாடலுக்காக டி இமானுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதை இமானின் ரசிகர்கள் இணையத்தில் தெறிக்கவிட்டு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications