6வது எடிசன் விருதுகள்... சிறந்த நடிகை ஒவியா; சிறந்த நடிகர் விக்ரம் - விஜய் சேதுபதி!
சென்னை: 2012-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான எடிசன் விருதுகளை விக்ரம், விஜய் சேதுபதி பெற்றனர். நடிகை ஒவியாவுக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது.
கும்கி படத்துக்காக சிறந்த இயக்குநர் விருதினை பிரபு சாலமனும், சிறந்த புதுமுக நடிகருக்கான விருதினை உதயநிதி ஸ்டாலினும் பெற்றனர்.
6 வது எடிசன் விருது வழங்கும் விழா சென்னை லேடி ஆண்டாள் அரங்கில் நேற்று மாலை நடந்தது.
தமிழ் திரையுலகமே திரண்டு வந்த இந்த நிகழ்ச்சி, ஆடல், பாடல், நகைச்சுவை என களைகட்டியது.

'பீட்சா' விஜய் சேதுபதி:
சிறந்த நடிகருக்கான விருது தாண்டவம் படத்துக்காக விக்ரமுக்கும், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படங்களில் நடித்த விஜய் சேதுபதிக்கும் வழங்கப்பட்டது.

'கலகலப்பு' ஓவியா:
கலகலப்பு படத்தில் நடித்ததற்காக ஓவியாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. ஒரு கல் ஒரு கண்ணாடியில் நடித்த ஹன்சிகாவுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

ஒரு கல் ஒரு கண்ணாடி உதயநிதி:
சிறந்த இயக்குநருக்கான விருது கும்கி படத்துக்காக பிரபு சாலமனுக்கும், சிறந்த புதுமுக நடிகருக்கான விருது ஒரு கல் ஒரு கண்ணாடிக்காக உதயநிதி ஸ்டாலினுக்கும் வழங்கப்பட்டது. சிறந்த புதுமுக நடிகைக்கான விருது போடா போடி படத்துக்காக வரலட்சுமி சரத்குமாருக்கு வழங்கப்பட்டது.

ரோகிணி-கருணாஸ்:
சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது 3 படத்துக்காக ரோகினிக்கு வழங்கப்பட்டது. சிறந்த குணச்சித்திர நடிகர் விருதை கருணாஸ் பெற்றார்.
சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கும்கிக்காக டி இமானுக்கும், சிறந்த புதுமுக இசையமைப்பாளர் விருது 3 படத்துக்காக அனிருத்துக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த பெண் இயக்குநருக்கான விருது ஐஸ்வர்யா தனுஷுக்கு வழங்கப்பட்டது. நடிகை ஓவியா இந்த விருதை வழங்கினார்.

சிறந்த பின்னணிப் பாடகி மகிழினி:
சிறந்த பின்னணிப் பாடகியாக சொய் சொய் பாடல் பாடிய மகிழினி மணிமாறன் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த பின்னணிப் பாடகர் விருது வேல் முருகனுக்கு வழங்கப்பட்டது.

துப்பாக்கிக்கு 5 விருதுகள்:
துப்பாக்கி படத்துக்கு 5 விருதுகள் வழங்கப்பட்டன. இந்தப் படத்துக்காக சிறந்த தயாரிப்பாளர் விருது கலைப்புலி தாணுவுக்கும், சிறந்த நடன இயக்குநர் விருது ஷோபிக்கும், சிறந்த எடிட்டர் விருது ஸ்ரீகர் பிரசாத்துக்கும், சிறந்த பிஆர்ஓ விருது ரியாஸ் கே அகமதுக்கும், சிறந்த பாடல் ஆசிரியர் விருது மதன் கார்க்கிக்கும் வழங்கப்பட்டது.
விழாவுக்கு வந்த அனைவரையும் பிஆர்ஓ ஜான் வரவேற்றார். எடிசன் விருது அமைப்பின் தலைவர் ஜெ செல்வகுமார் நன்றி கூறினார்.


Click it and Unblock the Notifications











