70th National Film Awards 2024: தங்கலான் ரிலீஸ்..விக்ரம் படத்துக்கு கிடைத்த தேசிய விருதுகள் லிஸ்ட்!
புதுடெல்லி: 70வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அதாவது ஆகஸ்ட் 16ஆம் தேதி மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு மொழிக்குமான சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு இந்த ஆண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழில் வெளியான படங்களில் பொன்னியின் செல்வன் பாகம் 1க்கு அதிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொன்னியின் செல்வன் பாகம் 1க்கு சிறந்த தமிழ்படம் என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தப் படத்திற்கு மொத்தம் நான்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் படம் கடந்த 2022ஆம் ஆண்டு இயக்குநர் மணி ரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்தது. இந்த படத்தின் கதை அமரர் கல்கி எழுதிய வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் நாவலை மையமாகக் கொண்டு இரண்டு பாகங்களாக வெளி வந்தது. இதில் முதல் பாகம் 2022ஆம் ஆண்டும் இரண்டாம் பாகம் 2023ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் படத்தினை லைகா புரெடக்ஷன்ஸ் நிறுவனமும் மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்தது.

இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஷோபிதா, பிரபு, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், நாசர், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வெளியானது. இதில் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி நடித்தார். இந்தப் படம்தான் இதுவரை தமிழில் உருவான படங்களிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம். இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்தார். அதேபோல் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்தார்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமுமே திரண்டு இருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இந்நிலையில் 2022ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு மத்திய அரசின் விருதுகளை அறிவித்துள்ளது.
நான்கு விருதுகள்: ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல் பொன்னியின் செல்வன் பாகம் 1க்கும் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல், பொன்னியின் செல்வன் பாகம் 1க்கு சிறந்த பின்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொன்னியின் செல்வன் பாகம் 1க்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளருக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறந்த இசை வடிவமைப்புக்கான விருதும் பொன்னியின் செல்வன் பாகம் 1க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் பாகம் 1க்கு ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி இசை வடிவமைத்திருந்தார்.

விக்ரம் வாழ்த்து: பொன்னியின் செல்வன் படத்திற்கு 4 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது, படத்தில் நடித்த விக்ரம் தனது எக்ஸ் பக்கத்தில் தனது மகிழ்ச்சியையும் வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார். அதில், " பொன்னியின் செல்வன் பாகம் 1 ரசிகர்களின் அன்பினால் கொண்டாடப்பட்டு, தேசிய அங்கீகாரத்துடன் முடிசூட்டப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. தமிழ் வரலாறு, இலக்கியம், கலாச்சாரம் மற்றும் சினிமா கடந்த காலத்திலிருந்து இன்றுவரை ஒன்றாக இணைந்து வெற்றி நடைபோடுகிறது!! மணி சார், ரகுமான் சார் மற்றும் ரவி வர்மனுக்கு வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.
திருச்சிற்றம்பலம் : இதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் 2022ஆம் ஆண்டு வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் இடம் பெற்றுள்ள மேகம் கருக்காத பெண்ணே பெண்ணே பாடலுக்கு சிறந்த நடன இயக்கத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு ஜானி மாஸ்டர் மற்றும் சதீஷ்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தப் படத்தில் நடித்த நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











