அமிதாப் பச்சனுக்கு தாதாசாகிப் பால்கே விருது: பிரத்யேக விழாவில் கவுரவித்தார் குடியரசுத் தலைவர்!
டெல்லி: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தாதா சாகிப் பால்கே விருது வழங்கி கவுரவித்தார்.
திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் கடந்த வாரம் வழங்கப்பட்டன. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற அந்த விழாவில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, திரை பிரபலங்களுக்கு தேசிய விருதுகளை வழங்கினார்.
அப்போதே பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு இந்திய திரைப்படத் துறையின் மிக உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அமிதாப் வேதனை
ஆனால் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் தன்னால் விருது விழாவில் பங்கேற்க முடியாது என வேதனையுடன் டிவிட்டரில் தெரிவித்திருந்தார் அமிதாப் பச்சன்.

இன்று வழங்கப்படும்
இதனை தொடர்ந்து 29ஆம் தேதியான இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார்.

தாதாசாகிப் பால்கே விருது
அதன்படி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில் திரைப்படத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டது.

பிரத்யோக ஏற்பாடு
விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார். இந்த விழா அமிதாப் பச்சனுக்கு என பிரத்யோகமாக ஏற்பாடு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.

பிரபலங்கள் பங்கேற்பு
இந்திய சினிமாவுக்கு அமிதாப் பச்சன் ஆற்றிய தொண்டினை பாராட்டி அவருக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அமிதாப் பச்சன், அவரது மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன் மற்றும் திரை பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.

அரசுக்கு நன்றி
விருதை பெற்றுக்கொண்டு அமிதாப் பச்சன் தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.நடிகர் அமிதாப் பச்சன் ஏற்கனவே பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை பெற்றிருக்கிறார். அதுமட்டுமின்றி 4 முறை தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார்.
மகுடத்தில் வைரம்
ஏராளமான விருதுகளை குவித்துள்ள நடிகர் அமிதாப் பச்சனுக்கு, இந்திய திரைப்படத்துறையின் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருதை வழங்கி அவரது மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லை பதித்திருக்கிறது மத்திய அரசு.


Click it and Unblock the Notifications











